Last Updated : 17 Jan, 2015 04:19 PM

 

Published : 17 Jan 2015 04:19 PM
Last Updated : 17 Jan 2015 04:19 PM

ஒரு குடியிருப்பு உருவான கதை

கோயம்புத்தூர் நகரிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள வடவள்ளி கிராமத்தில் நாங்கள் 1989-ல் வீட்டுமனை வாங்கி 1990-ல் வீடு கட்டினோம். எங்கள் மனையைச் சுற்றிச் சோளக் காடுகளும், சிறு தென்னந்தோப்பும் இருந்தன. வீட்டு மனைக்குச் செல்லும் வழியில் ஒரு பெரும் பள்ளம். அதுதான் அப்போது அந்தப் பகுதிக்கான கழிவறை. அதைத் தாண்டிச் செல்வது நரக வேதனையானது. இப்போது அங்கே பெரிய பாலம் வந்துவிட்டது, கழிவறை தனியே அமைக்கப்பட்டுவிட்டது.

வடவள்ளி கடந்த 25 ஆண்டுகளில் நிமிடத்துக்கு ஒரு பேருந்து, வங்கிக் கிளைகள், பெரும் பள்ளிகள், வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் என ஒரு சிறு நகரமாக வளர்ச்சி கண்டுவிட்டது. அப்போது ஒரு லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று 800 சதுர அடியில் வீடு கட்டினோம். வீடு கட்டும் பொருட்டு வாடகை வீட்டில் தங்கியிருந்து வீட்டின் கட்டிடப் பணிகளைப் பார்த்துக்கொண்டோம். வீடு கட்டுவதற்கு ஒரு மேஸ்திரியையும், அதை மேற்பார்வையிட்டுப் பரிசோதிக்க அனுபவசாலியான பொறியாளர் ஒருவரையும் அமர்த்திக்கொண்டோம். ஒவ்வொரு இன்ஸ்பெக்‌ஷனுக்கும் பொறியாளருக்கு ரூ 100 கொடுத்தோம்.

சவாலும் சாமர்த்தியமும்

வீடு கட்டும் பணிகளைப் பார்வையிட சைக்கிள் ஒன்றை எடுத்துக்கொண்டு அங்கு சென்றுவருவேன். கட்டிடப் பணியாளர்களுக்குத் தேவையானவற்றை வழங்கிவிட்டு அலுவலகம் சென்றுவிடுவேன். நிலைவைப்பது, ஆர்சிசி இடுவது போன்ற பணிகளின் போது விடுப்பு எடுத்துக்கொள்வேன். என் மனைவி நடந்தே சென்று வீட்டுக் கட்டிட வேலைகளைப் பார்த்துக்கொள்வார். வீடு கட்டும் கொத்தனார், பிளம்பர், எலக்ட்ரிஷியன், கம்பி கட்டுபவர், தச்சு வேலைக்காரர் போன்றவர்களை ஒருங்கிணைத்து வீட்டைக் கட்டி எழுப்புவது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பது வீட்டைக் கட்டியபோது தான் புரிந்தது.

ஏதேனும் கட்டுமானப் பொருள் தேவை என்றால் முன்னரே கூற மாட்டார்கள். வீட்டு வேலையைத் தொடங்கும் அன்று காலையில் சொல்வார்கள். அந்தப் பொருள் இல்லாவிட்டால் வீட்டு வேலையே நடக்காது என்பார்கள். வேறு வழி இல்லாமல் அவசர அவசரமாகச் சென்று பொருள்களை வாங்கிவர வேண்டும். இப்படியான தேவைகளைச் சமாளித்து அவர்களிடம் வேலை வாங்குவது பெரிய சவாலானது. வாரம் தோறும் சனிக் கிழமை கூலி வாங்கிக்கொள்வார்கள். இடையிடையே ஏதாவது செலவு என்று கூறி பணமும் வாங்குவார்கள். கூட்டிக் கழித்துப் பார்த்தால் நாம் சாமர்த்தியமாகப் பேசியதாக நினைத்த கூலியைவிட அதிகமாகவே பெற்றிருப்பார்கள். நமது சாமர்த்தியம் எதுவுமே செல்லுபடியாகாது.

புதுமனை புகுவிழா

வீட்டுவேலை முடிந்த பின்னரும் சுற்றுச் சுவர் எழுப்பவும், முகப்புக் கதவு பொருத்தவும் பணமில்லாத நிலையில் அதைப் பின்னர் கவனித்துக்கொள்ளலாம் என்று புதுமனை புகுவிழா நடத்திவிட்டோம். கதவுக்குப் பதிலாக திரைச்சீலைகளைத் தொங்கவிட்டுச் சமாளித்தோம். அப்போது அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த நண்பர்கள் எல்லாம், நகரத்தில் வசதியாக வசித்துவிட்டு, குழந்தைகளை வைத்துக்கொண்டு இந்த வீட்டில் எப்படி வசிக்கப்போகிறீர்கள் என்று கேள்விமேல் கேள்வி கேட்டார்கள். ஆனால் எல்லாவற்றையும் சமாளித்து அங்கேயே வசிக்கத் தொடங்கினோம். இரண்டு மாதங்களில் கதவையும் பொருத்தினோம். எங்களது குடியிருப்பில் மூன்றாவது வீடு எங்களுடையது.

வீட்டுக்கு குடிவந்த பின்னர்தான், தண்ணீர் வசதி இல்லை, தெருவிளக்குகள் இல்லை, போக்குவரத்துக்குச் சாலை வசதி இல்லை, பேருந்து வசதியில்லை என்ற நிதர்சனம் தெரிய வந்தது. சைக்கிளில் இருபுறங்களிலும் குடத்தைத் தொங்கவிட்டு தண்ணீர் எடுத்துவந்து வீட்டுத் தேவைகளுக்குப் பயன்படுத்துவோம். தண்ணீர் வழங்க தண்ணீர் வண்டிகள் இருந்தன. ஆனால் அவற்றைப் பயன்படுத்த பொருளாதார வசதி அப்போது ஒத்துழைக்கவில்லை.

குடியிருப்போர் நலச் சங்கம்

ஓரிரு வருடங்களில் அந்தக் குடியிருப்பில் வீடு கட்டியவர்களும் மனை வாங்கிப் போட்டவர்களுமாக இணைந்து குடியிருப்போர் நலச் சங்கம் ஒன்றை அமைத்து அதன் மூலம் அடிப்படை வசதிகளுக்காகப் போராடினோம். அனைவரது ஒத்துழைப்பாலும், விடா முயற்சியாலும் இச்சங்கங்கத்தின் மூலம், ஒரு சிறிய வினாயகர் கோயில், வீட்டு குடிநீர் இணைப்பு, போர்வெல் நீர் இணைப்பு, போக்குவரத்துக்கான தெருக்கள், தெரு விளக்குகள் என ஒவ்வொன்றாகப் பெற்றுக்கொண்டோம்.

சங்கத்தின் முயற்சியால், கோவை டவுன்ஹால், ரயில் நிலையம் போன்ற வழித்தடங்கள் வழியாகச் செல்லும் பேருந்தும் வட வள்ளிக்கு வர ஆரம்பித்தது. தற்போது 80 மனைகளில் 50-ல் வீடுகள் உருவாகிவிட்டன. இப்போது வட வள்ளி கோபாலபுரம் தேவையான அடிப்படை வசதிகளுடன் கூடிய அமைதியான நல்ல குடியிருப்புப் பகுதியாக மாறிவிட்டது, இப்போது சைக்கிளில் வந்தபடி வீடு கட்டிய அந்த நாட்கள் என் நினைவிலாடுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x