Last Updated : 17 Jan, 2015 03:58 PM

 

Published : 17 Jan 2015 03:58 PM
Last Updated : 17 Jan 2015 03:58 PM

வீடு கட்டி விளையாடலாம்!

கணினி விளையாட்டுகள் வெறும் நேர விரயம் எனும் எண்ணம்தான் நம்மில் பலரிடம் நிலவுகிறது. ஆனால் அந்த எண்ணத்தைத் தலை கீழாகப் புரட்டிப்போடும் கணினி விளையாட்டுகள் வந்துவிட்டன. இதுவரை வீடு கட்டும் இலக்கே இல்லாதவர்களுக்குக்கூட அழகிய வீட்டைத் தானே வடிவமைத்து, கட்டி, அலங்கரித்துப் பார்க்கும் ஆவலைத் தூண்டும் விளையாட்டுகள் இவை. கணினி மவுஸ் மற்றும் விசைப்பலகையின் பட்டன்களை அழுத்தியே பிரம்மாண்டமான வீட்டைக் கட்ட முடியுமென்றால் வியப்பில்லையா? 2டி, 3டி வெர்சுவல் ரியாலிட்டி எனப் பல விதங்களில் வீட்டை வடிவமைக்கும் கணினி விளையாட்டுகள் உள்ளன. அவற்றில் மிகப் பிரபலமானவை பற்றிய ஒரு சுவாரஸ்யமான அலசல் இதோ.

கலக்கல் சிம்ஸ்

கணினி விளையாட்டுப் பிரியர்களின் விருப்பத் தேர்வில் ஒன்று ‘சிம்ஸ் (sims)’. நம் கற்பனையில் இருக்கும் வீட்டைக் குறைந்த செலவில் கட்டி எழுப்பி அதன் மூலம் அடுத்தடுத்த நிலைக்கு முன்னேறிச் செல்வதுபோல வடிவமைக்கப்பட்டிருக்கும் விளையாட்டு இது.

இப்படி வீட்டைக் கட்டி அலங்கரிக்கும்போது எதிராளிகளால் பல இடையூறுகள் ஏற்படும். அவற்றை எதிர்த்து வெல்லும்போது நம் வீட்டைக் கட்டும் கனவு மெய்ப்பட்டது போன்ற மனநிறைவு ஏற்படும். இந்தச் சிம்ஸ் விளையாட்டில் சமீபத்தில் வெளியான பதிப்பு சிம்ஸ் 4.

>https://www.youtube.com/watch?v=p7BAUNzJvts

கிராமத்து வீடு

நெடுங்காலமாகச் சொந்தக் கிராமத்துக்கே சென்று நிம்மதியாக வாழ் நாளை கழிக்க வேண்டும் என்ற ஆசையோடு இருப்பவர்களுக்கு உகந்த விளையாட்டு ‘அறுவடை நிலவு : விலங்குகளின் அணிவகுப்பு’ (Harvest Moon: Animal Parade). ஆடு, மாடு, கோழிகள் நிறைந்த பண்ணையைச் சிறப்பாக நிர்வகித்து, கல்யாணம் முடித்து, திறம்பட வீட்டை அலங்கரித்து பராமரிக்க வேண்டும் என்பதுதான் விளையாட்டின் விதிமுறை. வேடிக்கையும் சுவாரஸ்யமும் நிறைந்த விளையாட்டு இது.

>https://www.youtube.com/watch?v=aVr1UGuWjJQ

இந்த வீட்டை வடிவமைக்க முடியுமா?

கட்டணம் இன்றி இலவசமாக விளையாடக்கூடியது. ‘இந்த வீட்டை வடிவமைக்கவும்’ (Design This Home) எனும் விளையாட்டு. ஆரம்பத்திலேயே நீங்கள் வீட்டின் உரிமையாளராகப் பாவிக்கப்படுவீர்கள். ஆறு விதமான தரை அமைப்பு திட்டங்கள் இருக்கும். ஒன்பது அறைகள் இருக்கும். உங்கள் இஷ்டம் போல உங்கள் வீட்டை நீங்கள் அலங்கரிக்கலாம்.

உங்களுக்கு விடப்படும் சவால், ’காஷுவல் கேமர்’ என்ற பட்டத்தை வெல்ல வேண்டும். அதற்கு நீங்கள் விளையாடும் போது உங்கள் முன் தோன்றும் எண்ணற்ற சுவர்கள், தரை வடிவங்கள் மற்றும் 700 விதமான வீட்டு உபயோகப் பொருள்களில் உங்கள் வீட்டுக் கச்சிதமாகப் பொருந்தும் பொருள்களை, வடிவங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

>https://www.youtube.com/watch?v=jo20aJIQl0c

இனிய இல்லம் இதோ

‘டிடி கேம்ஸ்’ என்ற தலைப்பில் பலவிதமான விளையாட்டுகள் உள்ளன. அவற்றில் ஒன்று, காலி அறை ஒன்று திரையில் தோன்றும். இடது புறத்தில் சோபா செட், பூ ஜாடி, டிவி போன்ற பொருள்கள் அம்பு குறிகளுக்கு இடையில் ஒன்றின் பின் ஒன்றாகத் தோன்றும். ஒவ்வொன்றும் அந்த அறையில் எங்கு வைத்தால் கச்சிதமாகப் பொருந்தும் என்பதைப் பார்த்து அடுக்கப் வேண்டும். சரியாக அடுக்க அடுக்க புள்ளிகள் அதிகரிக்கும். மிகச் சுலபமான விளையாட்டு போலத் தோன்றும். ஆனால் நிச்சயமாக முதல் முயற்சியில் யாரும் வெல்ல முடியாது.

>http://www.didigames.com/couple-dress-up-and-room-decoration.html

பிளே ஸ்டேஷன் வீடு

இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் வீடியோ விளையாட்டுத் தொழில்நுட்பம் ‘பிளே ஸ்டேஷன் (Play Station)’. நாம் டிவி அல்லது கணினி திரைக்கு முன்னால் நின்றபடி எதைச் செய்தாலும் அத்தனை அசைவுகளும் அப்படியே திரையில் இருக்கும் உருவம் செய்யும் விளையாட்டு இது. சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள பிளே ஸ்டேஷன் வீடு எனும் விளையாட்டில் உங்கள் வீட்டை நீங்களே நிஜமாகக் கட்டுவது போன்ற உணர்வு ஏற்படும்.

>https://www.youtube.com/watch?v=gbvETk6VF68

வீட்டை அலங்கரிக்கும் கதை

முதல் கட்டத்தில் ஒரு சிறிய அறையை மட்டுமே நீங்கள் அலங்கரிக்கத் தேவையான பொருள்கள் அளிக்கப்படும். அடுத்தடுத்த நிலைகளில் நீங்கள் அலங்கரிக்க வேண்டிய வீடு பிரம்மாண்டமான பங்களாவாக மாறும். இந்த விளையாட்டில் ஒவ்வொரு கட்டத்திலும் பிரமிப்பு அதிகரித்துக் கொண்டே போகும். உங்களிடம் ஐபேட், ஐபோன் இருந்தாலே போதும் இந்த விளையாட்டை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

>https://www.youtube.com/watch?v=QASFw9f0MxQ

இவை மட்டுமின்றி அரண்மனை கட்டுவது, மாயாஜால உலகில் நிஜ வீடுகளைக் கட்டுவது இப்படி வீட்டை வடிவமைத்து அலங்கரிக்கும் விளையாட்டுகள் ஏராளமாக உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x