ஜெயமுண்டு பயமில்லை: 08.04.14

ஜெயமுண்டு பயமில்லை: 08.04.14
Updated on
1 min read

தெனாலிராமன் பூனை வளர்த்த கதை எல்லோ ருக்கும் தெரியும். பூனைக்குப் பாலை வெறுத் துப்போகச் செய்ய முடியுமா என்ற பந்தயத்துக்காகப் பாலைக் கொதிக்கக் கொதிக்கப் பூனைக்குக் கொடுத்து வந்தார் தெனாலி ராமன். ஒரு கட்டத்தில் பாலைப் பார்த்தாலே பூனை பயந்தோட ஆரம்பித்து விட்டது- அது ஆறியிருந்தாலும்கூட.

இதைத் தான் கண்டிஷனிங்க் (Conditioning) என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். பாவ்லோவ் (Pavlov) என்ற ரஷ்ய விஞ்ஞானியின் புகழ்பெற்ற ஆராய்ச்சி ஒன்று உண்டு. ஒரு நாய்க்கு உணவு கொடுப்பதற்கு முன்பு ஒரு மணியை அடித்து வந்தார். கொஞ்ச நாள் கழித்து மணியை அடித்ததுமே உணவை எதிர்பார்த்து அதன் வாயில் எச்சிலும், வயிற்றில் உணவைச் செரிக்கும் அமிலமும் சுரக்கத் தொடங்கின.

ஒரு விஷயம் நம் உடலில் சில மாறுதல்களை, உணர்வுகளை ஏற்படுத்தினால், நம் மனம் அதை நினைவில் வைக்கிறது. பின்னர் அதையோ, அதுதொடர்பான விஷயங்களையோ மீண்டும் எதிர்கொள்ளும்போது அதே மாறுதல்கள் ஏற்படுகின்றன. ஒருமுறை தலைமை ஆசிரியர் நம்மைத் திட்டினார் என்றால், பின்பு அவரைப் பார்க்கும்போதெல்லாம் நமக்கு பயம் வருகிறது. அவர் இல்லாவிட்டால்கூட அவரது நாற்காலியைப் பார்த்தாலே வயிற்றுக்குள் ஏதோ செய்கிறது.

படிப்பு, தேர்வு போன்ற விஷயங்களும் அவ்வாறே. தொடர்ந்து நாம் பரீட்சை எழுதும்போது பதற்றமாக இருந்தோம் என்றால், பின்னர் பரீட்சை அறைக்குள் நுழைந்த உடனேயே கேள்வித் தாளைப் பார்க்கும் முன்பே பதற்றம் நம்மைத் தொற்றிக்கொண்டு விடுகிறது. தேர்வு மணி அடித்ததுமே உடல் பதறத் துவங்குகிறது. பதற்றத்தில் எளிமையான கேள்விகளுக்குக்கூட விடை மறந்து போய்விடுகிறது. அதேபோல, படிக்கும்போதெல்லாம் வேண்டா வெறுப்பாக, உற்சாகமின்றிப் படித்தோம் என்றால், ஒருநாள் உற்சாகமான மனநிலையில் படிக்க உட்கார்ந்தால்கூட புத்தகத்தை எடுத்ததுமே தூக்கம் தானாக வந்துவிடும்.

சரி, இதை எப்படிச் சரிசெய்வது? தேர்வு அறையில் இருப்பதுபோல கற்பனை செய்துகொள்ளுங்கள். பிறகு மூச்சை நன்றாக இழுத்துவிட்டு தசைகளைத் தளர்வாக வைத்து ரிலாக்ஸ் செய்யுங்கள். இனிமையான இசை பின்னணியில் ஒலிக்கட்டும். இப்போது அமைதியான மனநிலையில் நன்றாகத் தேர்வு எழுதுவது போலும் எல்லாக் கேள்விகளுக்கும் நன்றாக எழுதுவது போலவும் கற்பனை செய்து கொள்ளுங்கள். வீட்டின் ஒரு அறையைக்கூட தேர்வு அறையாக்கி நடித்துப் பாருங்கள். அக்கா தம்பியைக் கண்காணிப்பாளராக்குங்கள். அப்புறம் பாருங்கள்.. ஐஏஎஸ் தேர்வு என்றால்கூட பதற்றம் வராது.

-மீண்டும் நாளை...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in