Last Updated : 27 Jan, 2015 10:09 AM

 

Published : 27 Jan 2015 10:09 AM
Last Updated : 27 Jan 2015 10:09 AM

வெட்டிவேரு வாசம் 20 :அன்று கண்ட அதே முகம்!

ஒரு திருமணத்துக்குச் சென்றுவிட்டு, மதுரையில் இருந்து திரும்பியிருந்த வாசகத்தோழியைச் சந்திக்கப் போயிருந்தேன். அவர் நெகிழ்வுடன் பகிர்ந்துகொண்ட நிகழ்வு இது:

“வைகை எக்ஸ்பிரஸில் ஜன்னலோர இருக்கை கிடைத்தது. வெளியில் வேடிக்கை பார்க்க முடியாதபடி எதிரில் அமர்ந்திருந்தவரின் முகம் ஈர்த்துப் பிடித்தது. எழுபதைத் தாண்டிய வயது. முகத்தில் வலதுபுறம் தீய்ந்து போய், மருத்துவர்களால் சரிசெய்யப்பட்ட அடையாளம். உதடுகள் கோணி இருந்தன.

என் மனதில் ஆச்சர்யம். கூடவே குழப்பம். சுந்தரம் சார்தானே இது?

சென்னையில் நான் படித்த பிரபலமான தனியார் கல்லூரியின் வேதியியல் துறைத் தலைவர். முதுகலைப் படிப்புக்குத் தேர்வாகி, அட்மிஷனுக்காக அவருடைய அறையில் காத்திருந்தேன். கல்லூரி முதல்வரிடம் அவர் போனில் பேசியது கேட்டது.

‘மெரிட்ல செலெக்ட் ஆகி வந்தவங்களுக்கெல்லாம் முதல்ல சீட் கொடுத்துட்டுதான் அமைச்சரோட கேண்டிடேட்டுக்குக் கொடுக்க முடியும் சார்...’ என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார்.

நேர்மை. துணிச்சல். தெளிவு. கச்சிதம். இவையே புரொஃபசர் சுந்தரம்!

அவர் பெயரைக் கேட்டால் ப்யூரட், பிப்பட் கூட வாய் மூடிக்கொள்ளும். சிங்கம் போல் நடை. கம்பீரமான குரல். கடினமான பாடங்கள் கூட அவர் சொல்லிக்கொடுக்கும்போது, மண்டைக்குள் வெகு சுலபமாக ஏறும். கண்டிப்புக்கு இணையாக, அவசியமான நேரங்களில் கனிவையும் அவரிடம் காண முடியும்.

அந்தத் துறையில் இருந்த பிற பேராசிரியர்களில் பலர் சுந்தரம் சாருடைய மாணவர்களாக இருந்தவர்கள். மாணவர்களுடன் செலவிடும் நேரம்தான் பேராசிரியர்களுக்கு சக்தியூட்டும் என்று அடிக்கடி சொல்வார்.

கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, திருமணமாகி வேலூர் சென்ற பிறகு, பல வருடங்கள் கழித்து… இதோ எதிரில்.

ரயில் திண்டுக்கல்லில் நின்றதும், அவசரமாக வண்டியைவிட்டு இறங்கி னேன். ஒட்டப்பட்டிருந்த பயணிகள் பட்டியலைப் பார்த்தேன். அவரேதான்.

மீண்டும் வண்டியில் ஏறியதும், ‘சார்… என்னைத் தெரிகிறதா?’ என்றேன்.

அவர் கண்களில் ஆச்சர்யம்.

‘நீ… நீங்க என் ஸ்டூடன்ட்டா?’ என்றபோது, வார்த்தைகளுடன் காற்றும் கலந்து வந்தது. பேசுவதில் சிரமம் இருந்தது.

‘நந்தினி சார்… உங்க கையாலதான் எம்.எஸ்.ஸிக்கு அட்மிஷன் வாங்கினேன்’.

அவருக்கும் நினைவு வந்தது. ‘அப்போ எந்த டாபிக்லாம் எடுத்தேன்...?’ என்று ஆசையுடன் ஞாபகப் படுத்திக்கொண்டார். என் தோழிகள் தோழர்கள் பற்றி விசாரித்தார். அவர்களில் சிலர் இப்போது மிக உயர்ந்த பதவிகளை வகிப்பது அறிந்து மிகவும் சந்தோஷப்பட்டார். பள்ளி மாணவர்களுக்கு நான் டியூஷன் எடுப்பது பற்றிச் சொன்னபோது, பெருமைப்பட்டார்.

‘என்னை எப்படி அடையாளம் கண்டுபிடிச்சே..?’ என்று தவிப்புடன் கேட்டார்.

அவர் முகத்தில் என் பார்வை தயங்கியது. ‘கெமிஸ்ட்ரி லேபுல ஏதாவது..?’ என்று இழுத்தேன்.

‘இது விபத்தில்ல...’ என்று, வறண்ட புன்னகையை உதிர்த்தார். ‘நீங்கள்லாம் படிச்ச காலத்துல இருந்த நிலைமை வேற. போகப் போக எல்லாம் மாறிடிச்சு. தப்பு செய்யற பசங்களைத் திருத்தணும்னு கொஞ்சம் கண்டிப்பா இருந்தேன். அந்த நேர்மைக்குக் கிடைச்ச பரிசு இது.’

அவர் கல்லூரிக்கு வரும் வழியில், காத்திருந்து பைக்கை மடக்கி உடைத்து, அவர் உயிருக்கும் மிரட் டல் விட்டு, முகத்தில் அமிலத்தை வீசிவிட்டுப் போன மாணவர்கள் யார் என்பதைச் சொல்ல அவர் விரும்பவில்லை.

‘எல்லா ஸ்டூடன்ட்ஸும் தப்பானவங்க இல்ல. ஆயிரம் நல்லவங்களுக்கு மத்தியில, ஒண்ணு ரெண்டு பேர் இப்படிக் கலந்திருக்காங்க...’ என்றார்.

என் கணவரிடமும் அன்புடன் பேசினார். நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்தது.

கணவரிடம் ‘இவ என் ஸ்டூடன்ட். நல்லபடியா பார்த்துக்கங்க...’ என்றார். என் கண்கள் ஈரமாயின!’’

தோழி இந்நிகழ்வை விவரித்தபோது, எனக்குள்ளும் பல நினைவுகள் புரண்டன. பல வருட இடைவெளிக்குப் பின் பள்ளி நண்பர், கல்லூரி நண்பர், ஆசிரியர் என்று அடையாளம் காண்பது பல சமயம் சுகம். சில சமயம் வலி.

ஐந்தாம் வகுப்புவரை படித்த புனே நகரத்துக்குப் பல வருடங்கள் கழித்துப் போயிருந்த என்னைத் துரத்தி வந்து, “நீலுடா… நீலகண்டன்...” என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டவன் முகம் என் நினைவடுக்கில் இல்லை. ஆனால், மூன்றே வருடங்கள் ஆரம்பப் பள்ளியில் தோழனாயிருந்த என்னை அவனால் அடையாளம் காண முடிந்தது.

பள்ளியில் ஒன்றாகப் படித்து, 16 வருடங்கள் கழித்துத் தற்செயலாக என்னைச் சந்தித்து, அடையாளம் கண்டு விசாரித்து, மறுநாளே கடன் கேட்டு என்னைத் தேடி அலுவலகத்துக்கு வந்த ரமேஷ் இன்று உயிருடன் இல்லை. தீராக் குடி அவன் உயிரையே குடித்துவிட்டது.

பகிர்ந்துகொள்வதற்கு, இன்னும் நிறைய நண்பர்களுடன் நேர்ந்த சந்திப்புகள் நினைவுகளாகவும், அனுபவங்களுமாக எங்களிடம் தங்கியிருக்கின்றன.

பொதுவாகவே நீண்ட இடைவெளிக்குப் பின், பழைய நண்பர்களைச் சந்திக்கும் தருணங்கள் வித்தியாசமானவை. சில சமயங்களில் வாழ்க்கையையே திசை மாற்றக் கூடியவை.

‘கனா கண்டேன்’ திரைப்படத்தில் கூட அர்ச்சனாவும், மதனும் அப்படிச் சந்திக்காமல் இருந்திருந்தால், அங்கு கதையே இல்லை.

‘ஆரம்பம்’ திரைப்படம். விமான நிலையத்தில், மும்பை செல்வதற்காகக் காத்திருப்பான், அர்ஜுன் (ஆர்யா). அவன் அருகில் வந்து தயங்கி நின்று, “எக்ஸ்க்யூஸ் மீ... அர்ஜுன், எம்.எஸ்.ஸி. சாஃப்ட்வேர்...?” என்று கேட்பாள், வசீகரமான மாயா (நயன்தாரா).

“ஆமா, நீங்க..?”

“மாயா…டா தடியா...”

இருவரிடமும் சிரிப்புகள் பொங்கும். கல்லூரிக் காலத்தில் வெடித்துவிடும் சைஸில் இருந்த அர்ஜுன் ‘குங்க்ஃபூ பாண்டா’ என்றும், பற்களில் க்ளிப் போட்டிருந்த மாயா ‘பல்லாண்டு’ என்றும் அழைக்கப்பட்ட தருணங்களை அவர் கள் ஆனந்தமாக அசைபோடத் தொடங்குவர்.

விமான நிலையத்தில் நேர்ந்த இந்தச் சந்திப்பு, கதையில் மிக முக்கியமானதொரு கட்டம் என்பதைப் பார்த்தவர் அறிவர்.

- வாசம் வீசும்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள:

dsuresh.subha@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x