Last Updated : 23 Jan, 2015 12:09 PM

 

Published : 23 Jan 2015 12:09 PM
Last Updated : 23 Jan 2015 12:09 PM

கற்பனையில் ஒரு கேமரா!

ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்ற நட்சத்திரமாக அந்தஸ்து பெற்றுவிட்ட நடிகர்கள் ஒரு கதாபாத்திரமாகத் திரையில் வாழ்ந்து காட்டுவதும் கடினம்தான். “கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார்” என்ற விமர்சனம் ஒரு புகழ்பெற்ற நடிகருக்குக் கிடைத்தால் அது அவரது நடிப்புத் திறனைக் காட்டுகிறது. அந்த நடிகருக்குச் சிறந்த நடிப்புக்கான பாராட்டுகளும் விருதுகளும் கிடைக்கின்றன.

அதுவே அனிமேஷன் திரைப்படங்களில் ஒரு கதாபாத்திரம் மனித நடிகரைவிடத் துல்லியமாகவும் மனித உணர்ச்சிக்குச் சற்றும் குறையாத அசலான தன்மையுடன் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தால் அந்தப் பெருமை முழுவதும் அந்தக் கதாபாத்திரத்துக்குச் சென்று சேராது!

முதலில் அந்தக் கதாபாத்திரத்துக்கான அனிமேஷன் நிரலை எழுதிய கணினியாளருக்கும், அந்த நிரல்களைக் கொண்டு அந்தக் கதாபாத்திரத்தை அசைத்து நடிக்க வைத்த அனிமேட்டருக்கும், அதன் நடிப்புக்குச் சற்றும் குறையாமல் அதற்குக் குரல் கொடுத்தவருக்குமே (டப்பிங்) அதன் பெருமை சென்று சேரும்.

அனிமேஷன் கதாபாத்திரம், மனித நடிகரால் உயிரூட்டப்படும் ரத்தமும் சதையுமான கதாபாத்திரம் தரும் அதே அனிமேஷன் கதாபாத்திரத்திலும் உணர்வைப் பார்வையாளர் பெற வேண்டுமானால், அதற்கு மிக அவசியமான அடிப்படையான சில மனித உணர்ச்சிகளை அனிமேஷன் கதாபாத்திரங்கள் வெளிக்காட்ட வேண்டும்.

மிக முக்கியமாகப் புன்னகை, மகிழ்ச்சி, துயரம், அழுகை, வெட்கம், கனிவு, கோபம் உள்ளிட்ட உணர்ச்சிகளைச் சரியான வேறுபாட்டுடன் காட்சியின் மனநிலைக்கு ஏற்ப அவை வெளிப்படுத்த வேண்டும். உதாரணமாகப் புன்னகைக்கும், சோகத்துக்கும் இடையிலான ஒரு மெல்லிய வேறுபாட்டை அடுத்தடுத்த இரண்டு ஷாட்டுகளில் ஒரு அனிமேஷன் கதாபாத்திரம் வெளிபடுத்த வேண்டுமானால் அதற்குத் தேவை துல்லியமான நிரல்.

இதைத்தான் முதலில் சாதித்தது பிக்ஸார் நிறுவனம். மனித உணர்ச்சிகளை அனிமேஷன் கதாபாத்திரங்கள் அப்படியே வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே மென்வ் (MENV – Modeling Environment) என்ற நிரலைப் பத்து ஆண்டுகள் கடும் முயற்சிக்குப் பின் உருவாக்கியது.

உணர்ச்சிகளைப் படையல் போட மென்வ் உருவானாலும் பார்வையாளரைப் பாதிக்கும் கேமரா கோணத்தில் அந்த உணர்ச்சி காட்டப்பட்டால்தானே அது வெற்றிபெறும். அதைக் கச்சிதமாகச் செய்ய அனிமேஷன் படங்களுக்குக் கைகொடுக்கிறது வெர்ச்சுவல் கேமரா.

சினிமாவில் பிலிம் ரோல் கொண்டு படம்பிடிக்கும் கேமரா என்றாலும் சரி, அல்லது ஃப்ளாஷ் கார்டுகளில் காட்சிகளைப் பதிவுசெய்யும் டிஜிட்டல் சினிமா கேமரா என்றாலும் சரி, அதிலிருந்து அடிப்படையான ஒரு வேறுபாட்டைப் பெறுகிறது வெர்ச்சுவல் கேமரா. இது கணினிக்குள் இயங்கும் ஒரு கற்பனை கேமரா என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு சினிமா கேமரா செய்யும் எல்லா வேலைகளையும் கணினியில் ஒரு மென்பொருள் வழியாக இயங்கும் மெய் நிகர் (Virtual) கேமரா செய்கிறது.

சினிமா கேமராவை இயக்கினால் தன் முன்னால் நடிக்கும் நடிகனின் அசைவுகளையும் அந்தக் காட்சியின் பின்புலம் மற்றும் நடிகனுக்கு முன்னால் உள்ள பொருட்களையும் உள்ளது உள்ளபடி இயற்கையாகப் பதிவு செய்கிறது. ஆனால் அனிமேஷன் உலகில் கதாபாத்திரங்கள் முதல், பின்புலம்வரை அந்த உலகில் உள்ள பொருட்கள் அனைத்துமே செயற்கையாகக் கணினியில் நிரல்கள் வழியே ‘மாடலிங்’மூலம் உருவாக்கப்படுகின்றன.

இப்படி உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்களையும் பின்புலத்தையும், அதில் இடம்பெற்றிருக்கும் பொருட்களையும் இந்த மெய்நிகர் கேமரா கொண்டு படமாக்க வேண்டும். இந்த கேமராவில் கோணங்கள் (Angles), ஆடிகள் (Lenses), குவிமையம் (focus), குவிமைய அளவு (focal length), ஷட்டர் வேகம் (Shuter speed), என நிஜ சினிமா கேமராவில் உள்ள அனைத்தும் வசதிகளும் உள்ளன.

இந்தக் கேமராவின் சக்தி என்ன? இதை நிஜ கேமராவைவிட வெற்றிகரமாகப் பயன்படுத்த முடியுமா அடுத்த வாரம் பார்ப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x