Last Updated : 03 Jan, 2015 12:30 PM

 

Published : 03 Jan 2015 12:30 PM
Last Updated : 03 Jan 2015 12:30 PM

எப்போது நிறைவேறும் ரியல் எஸ்டேட் மசோதா?

‘புலி வருது’ கதையாகப் போக்குக் காட்டிச் சென்று கொண்டிருக்கிறது ரியல் எஸ்டேட் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கும் மசோதா. கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அறிமுகமானது இந்த மசோதா. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மசோதாவில் சில மாற்றங்களைக் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது.

ஆனால், புதிய அரசு பதவியேற்று ஏழு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் இந்த மசோதா நிலுவையிலேயே இருக்கிறது. புத்தாண்டிலாவது இந்த மசோதா நிறைவேற்றப்படுமா என்பதுதான் இப்போதைய கேள்வியாக இருக்கிறது.

மசோதா ஏன்?

இந்த மசோதா தொடர்பாக முடிவெடுப்பதை அண்மையில் மத்திய அமைச்சரவை ஒத்தி வைத்தது. இந்த மசோதா ஏன் உருவாக்கப்பட்டது? சொந்த வீடு வாங்குபவர்கள் மற்றும் பில்டர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையிலேயே இந்த ரியல் எஸ்டேட் மசோதா உருவாக்கப்பட்டது. இதன்படி அனைத்துக் கட்டுமானத் திட்டங்களும் ரியல் எஸ்டேட் ஆணையத்தில் முறைப்படி பதிவுசெய்யப்பட வேண்டும். தவறு செய்யும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் இந்த மசோதா வழி செய்கிறது.

இன்னும் பல அம்சங்கள் இந்த மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த மசோதா ஒருதலைபட்சமாக இருப்பதாகக்கூறி கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிடமே ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தன. கடந்த ஆண்டு மே மாதம் புதிதாகப் பதவியேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இந்த மசோதாவில் சில மாற்றங்களைச் செய்ய முடிவு எடுத்தது.

மாற்றங்கள் என்ன?

குறிப்பாக இரண்டு மாற்றங்கள் இதில் முக்கியமானவை. வீடு வாங்குபவர்கள் முன் பணமாக 70 சதவீதப் பணத்தைத் தர வேண்டும் என்று முன்பு இருந்தது, அதை 50 சதவீதமாகக் குறைப்பது இந்த மாற்றங்களில் ஒன்று. இதேபோல வீடுகள் கட்டும் நிறுவனங்களை மட்டும் கட்டுப்படுத்தும் வகையில் இந்த மசோதா தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது வர்த்தகக் கட்டுமான நிறுவனங்களையும் இந்த வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு உத்தேசித்துள்ளது.

மாற்றம் யாருக்கு நன்மை?

மத்திய அரசு செய்ய உத்தேசித்துள்ள இந்த மாற்றங்களையும் கட்டுமான நிறுவனங்கள் பல குறை கூறி வருகின்றன. இப்படித் தொடர்ந்து பல பிரச்சினைகள் இந்த மசோதாவைச் சுற்றி எழுப்பப்படுவதால், சட்ட மசோதா அமலுக்குக் கொண்டு வருவது தாமதமாகி வருகிறது என்று கூறப்படுகிறது.

இந்த மசோதா தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருப்பதால், வீடு கட்டப் பணம் கொடுத்து வீட்டைக் குறித்த நேரத்தில் வாங்க முடியாத வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று நுகர்வோர் அமைப்புகள் அவ்வப்போது கூறி வருகின்றன.

ஏனென்றால், வீடுகளை வாங்க முன்பதிவு செய்த நாளில் இருந்து குறித்த காலத்துக்குள் வீடுகளைக் கட்டி ஒப்படைக்க வேண்டும் என்பது இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்களில் ஒன்று. ஆனால், தொடர்ந்து இந்த மசோதா தாமதமாவதால் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான் என்பது அவர்களின் வாதம்.

இந்த மசோதாவை அமல் செய்யும்பட்சத்தில் வீடு வாங்குபவர்களுக்குப் பாதுகாப்பாக அமையும் என்பதே பரவலான கருத்தாக உள்ளது. அதேசமயம் இந்த மசோதா மூலம் இத்துறையில் நம்பகத்தன்மையற்ற கட்டுமான நிறுவனங்கள் வெளியேற்றப் படும் என்பதை கட்டுமான நிபுணர்களே ஒப்புக்கொள்கிறார்கள்.

சீரானதா மாற்றம்?

ஆனால், முன்பணம் பெறுவதில் மாற்றம் செய்வதைப் பல பில்டர்கள் குறைகூறவும் செய்கிறார்கள். 50 சதவீதப் பணத்தைப் பெற்றுக் கொண்டு எப்படி வீடு கட்டித் தர முடியும் என்று கேள்வி எழுப்புகிறார்கள். “இந்த 50 சதவீதப் பணம் என்பது கட்டுமானப் பணிகளுக்குச் செய்யப்படும் செலவுக்கானது. சென்னை, மும்பை போன்ற பெரிய நகரங்களில் கட்டுமானப் பணிகளுக்கான செலவு என்பது 30 முதல் 40 சதவீதம் வரையே ஆகிறது.

ஆனால், மனை வாங்க 65 முதல் 75 சதவீதம் செலவாகிறது. வீடு வாங்குபவர்களிடம் 70 சதவீதம் முன் பணமாகப் பெற்றாலே அது மனை வாங்கச் செய்யப்படும் செலவுக்கே பயன்படும். கட்டுமானத்துக்கு எப்படிச் செலவு செய்ய முடியும்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த பில்டர் ஒருவர்.

பெரு நகரம், இரண்டாம் கட்ட நகரம், மூன்றாம் கட்ட நகரம் என நம் நாட்டில் நகரங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்களில் மனை விலை குறைவாகவே இருக்கும். பெரு நகரங்களிலோ மனை விலை அதிகமாக இருக்கும். ஆனால், நாடு முழுவதும் ஒரே மாதிரியாகத் தொகையை வசூலிக்க வேண்டும் என்பதை எப்படி ஏற்க முடியும் என்றும் கட்டுநர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்களில் முன் பணம் பெறுவதை இன்னும் குறைக்க வேண்டும் என்று சில கட்டுமான அமைப்புகள் மத்திய அரசுக்கு கோரிக்கையும் விடுத்துள்ளன. தற்போதைய மசோதா சீராக இல்லை என்பதே பல கட்டுமான நிறுவனங்கள், கட்டுமான அமைப்புகளின் எண்ணமாகவும் உள்ளது.

நிறைவேறுமா?

மேலும் வர்த்தகக் கட்டுமான நிறுவனங்களை இந்த மசோதாவுக்குள் கொண்டு வருவதிலும் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. இந்த மசோதா குறித்துப் பல தரப்பினர் மத்தியிலும் பலத்த எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. நாட்டின் உள் நாட்டு மொத்த உற்பத்தியில் கட்டுமானத் துறையும் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. எனவே பில்டர்களின் நலன், பொது மக்களின் நலன் என இரு தரப்பினர் நலனையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது.

இப்படிச் சிக்கல்கள் இருப்பதால்தான் இந்தத் தாமதம் என்று கட்டுநர்கள் தரப்பே கூறுகிறது. அதேசமயம், இந்தப் புத்தாண்டில் இந்த மசோதா ஏற்றுக் கொள்ளப்பட்டுச் சட்ட வடிவம் பெறும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x