Published : 22 Apr 2014 08:07 AM
Last Updated : 22 Apr 2014 08:07 AM

மனதுக்கு வயது இல்லை | ஏப்ரல் 22, 2015

வண்ணதாசனின் சிறப்பான கதை ஒன்று ‘கூறல்’. பார்வைத்திறன் குறைந்த பெரியவர் ஒருவர் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்கும் திறனும் குறைய ஆரம்பிக்கும்போது எல்லோரும் தன்னை ஒதுக்கிவைக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டு அழ ஆரம்பிக்கிறார். பின்னர் பழக்கமான முடிதிருத்துநரின் தொடுதல் மூலம் சகஜ நிலைமைக்குத் திரும்புவதாக அமைந்திருக்கும் அக்கதை.

நாம் இந்த உலகைப் பற்றித் தெரிந்துகொள்வதே புலன்கள் வாயிலாகத்தான். பார்வை, கேட்டல், தொடுதல், முகர்தல், சுவைத்தல் என்று ஐம்புலன்கள் வழியாக அன்றாடம் நம்மை அடையும் ஆயிரக்கணக்கான தகவல்கள் வழியாகவே நம்மைச் சுற்றி நடக்கும் மாறுதல்களைக் கண்டுகொள்கிறோம். ‘ஓடும் நதியில் ஒருமுறை கையில் அள்ளிய நீரை மீண்டும் அள்ள முடியாது’ என்று சொல்வதுபோல கணந்தோறும் உலகில் ஒருமுறை நடக்கும் விஷயம் மறுகணம் மாறுகிறது. இம்மாற்றங்களைப் புலன்கள் மூலமே நாம் பதிந்துகொள்கிறோம்.

வயதாகும்போது புலன்களின் திறன் குறையத் தொடங்குகிறது. இதுபோல புலன்களின் திறன் குறையும்போது அதிலிருந்து வரும் தூண்டுதல்கள் இல்லாததால் மூளையில் சில ரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன. பார்வை குறைந்தவர்களுக்கு ஏதோ உருவங்கள், மாயத் தோற்றங்கள் தெரியத் தொடங்கும். ஆங்கிலத்தில் இதை ஹாலுசினேஷன் (hallucinations) என்பர். யாரும் இல்லாமலேயே யாரோ நிற்பதுபோல பேசிக் கொண்டிருப்பார்கள். ‘வீட்டுக்கு விருந்தினர் வந்திருக்கிறார்கள். யாருமே கவனிக்கமாட்டேன் என்கிறீர்களே’ என்று சத்தம் போடுவார்கள். இன்னும் சிலருக்குத் திருடர்கள் வருவதுபோலக்கூடத் தோன்றும்.

அதேபோல செவிப்புலன் குறையத் தொடங்கும்போது யாரோ பேசுவதுபோல் தோன்றும். ‘மருமகள் என்னைப் பற்றிக் குறை சொல்கிறாள்’ என்று புலம்புவார்கள். என்னை எல்லோரும் திட்டுகிறார்கள் என்று சொல்வார்கள். யதேச்சையாகச் சிரித்தாலும் என்னைப் பற்றித்தான் சிரித்தாள் என்று சந்தேகம் வரும். இது அதிகமாகி எனக்கு விஷம் வைத்துக் கொல்லப் பார்க்கிறார்கள் என்றெல்லாம் சந்தேகப்படுவார்கள். இதைப் பாராநோயா (Paranoia) என்பார்கள்.

மனிதன் எந்த மோசமான விஷயத்தையும் தாங்கிக்கொள்வான். ஆனால் நிச்சயமற்ற தன்மையை, மர்மத்தை அவனால் தாங்கிக்கொள்ளவே இயலாது. ஆகவே புலன்கள் திறன் குறையத் தொடங்கும்போதே அவற்றைக் கவனிக்க வேண்டும். கண்ணாடியோ, அறுவை சிகிச்சையோ, ஹியரிங் எய்டோ அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். ‘வயதானாலே அப்படித்தான்’ என்று விட்டுவிடக் கூடாது.

அதேபோல, புலன்களின் திறன் குறைந்தால் உடனிருப் பவர்கள் அவருக்கு எந்தப் புலன் நன்றாக இருக்கிறதோ அதன்மூலம் செய்திகளைச் சொல்ல வேண்டும். காது சரியாகக் கேட்கவில்லை என்றால் எழுதிக்காட்டுங்கள். என்ன நடக்கிறது என்பதை உணரச் செய்யுங்கள். வெறும் தொடுதல் மூலம் ஆயிரம் செய்திகளைப் பரிமாறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x