Published : 01 Apr 2014 11:48 AM
Last Updated : 01 Apr 2014 11:48 AM

வீட்டு மருத்துவம்: சுகந்த மணத்துடன் இருக்க...

வியர்வை, உடல் துர்நாற்றம்

தமிழ் மருந்துக் கடைகளில் ஆவாரம்பூ கிடைக்கும். அதை வாங்கி நிழலில் பரத்தி, உலர வைக்கவும். அதை மிக்ஸியில் நைஸாக அரைத்து, அதனுடன் பயத்தம் பருப்பு மாவைச் சேர்த்துத் தேய்த்துக் குளிக்கவும். உடல் துர்நாற்றம் நீங்கும்.

எலும்பு உறுதியாக இருக்க

வாரத்தில் ஒரு முறையாவது பிரண்டை எனப்படும் மூலிகைத் தண்டை உணவுடன் சேர்த்துக்கொண்டால், எலும்புத் தேய்மானம் அடையாது. இதற்குப் பிரண்டை, மிளகு, உளுத்தம்பருப்பு, புளி ஆகியவற்றை வறுத்து, துவையல் செய்து சாப்பிடவும். இட்லி, தோசை, சாப்பாட்டுக்குத் தொட்டுச் சாப்பிடலாம். மெனோபாஸுக்கும் பிரண்டை நல்லது.

கரும்புள்ளி மருவுக்கு

முகத்தில், கழுத்தில் வரும் கரும்புள்ளி மருவை நீக்க அரிசி திப்பிலியை வாங்கி வறுத்து, நைஸாக அரைத்து வைத்துக்கொள்ளவும். அந்தப் பவுடரில் தேன் சேர்த்து நன்றாகக் குழைத்துக் கரும்புள்ளி, மரு இருக்கும் இடத்தில் தடவவும். சில நாட்களில் மறைந்துவிடும்.

வாயுப் பிடிப்பு, மூச்சுப் பிடிப்பு

ஓமத்தை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இதில் சம அளவு சர்க்கரை சேர்த்து. Cramps இழுத்துப் பிடிக்கும்போது 1 ஸ்பூன் சாப்பிட்டால் வலி நீங்கும். இதை வெந்நீரில் போட்டுச் சாப்பிடவும்.

வாய் துர்நாற்றம்

அஜீரணம், பல் சுத்தமாக இல்லாததாலும் வரக்கூடும். இதற்கு வாரத்தில் 2 நாட்கள் முருங்கைக் கீரையைச் சாப்பாட்டுடன் சேர்த்துச் சாப்பிட வேண்டும். முருங்கைக்கீரையைக் கூட்டாகவோ, பொரியலாகவோ செய்து சாப்பிடலாம். அது மட்டுமில்லாமல் இரவு படுக்கப் போகும் முன், கண்டிப்பாகப் பல் தேய்த்துவிட்டே படுக்க வேண்டும். இது நாம் கடைப்பிடிக்க வேண்டிய அவசியப் பழக்கம்.

குழந்தை வயிற்றுவலிக்கு

பச்சைக் குழந்தைகளுக்கு வயிற்று வலி வந்தால் கட்டிப் பெருங்காயத்தை வெந்நீர் விட்டு நன்றாக உரசி எடுத்தால், சந்தனம் போல் வரும். அதை தொப்புளைச் சுற்றிப் போட்டால் வயிற்று வலி நீங்கும். குழந் தையின் அழுகையும் நிற்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x