Published : 30 Jan 2015 02:37 PM
Last Updated : 30 Jan 2015 02:37 PM

குஷ்பு, ராதிகா பாதையில் நடப்பேன்: கீர்த்தி சுரேஷ்

கடவுளின் தேசத்தில் இருந்து நடிக்க வந்திருக்கும் இன்னொரு புது வரவு. தென்னிந்திய சினிமாவில் முதலிடம் பிடிப்பதுதான் லட்சியம் என்கிறார் இந்த வாரிசு நடிகை. விக்ரம் பிரபுவுடன் ‘இது என்ன மாயம்’, சிவகார்த்திகேயனுடன் ‘ரஜினி முருகன்’ ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் அலைபேசியில் கிடைத்தார்.

நீங்க நடிக்க வந்த கதை சொல்லுங்க?

அப்பா சுரேஷ்குமார் தயாரிப்பாளர். அம்மா மேனகா நடிகை. நெற்றிக்கண் படத்துல ரஜினி சாருக்கு ஜோடியா நடிச்சாங்க. அக்கா ரேவதி காட்சித் தொடர்பியல் படிச்சு இருக்காங்க. அப்பா, அம்மா, அக்கா மூணு பேரும் சினிமா அகாடமியை நடத்துறாங்க. எனக்குச் சின்ன வயசுல இருந்தே நடிக்க ஆசை.

குழந்தை நட்சத்திரமா சில படங்கள்ல நடிச்சேன். சென்னையில ஆடை வடிவமைப்பு பட்டப்படிப்பில் சேர்ந்தேன். நான்காம் வருஷம் படிக்கும்போது என்னோட அப்பா கிட்ட கீர்த்தியை நடிக்க வைக்கலாமேன்னு ப்ரியதர்ஷன் அங்கிள் கேட்டார். முதல்ல படிப்பை முடி. அப்புறம் நடிக்கலாம்னு சொல்லிக்கிட்டு இருந்த அப்பா உடனே சம்மதிச்சிட்டார்.

அந்த அளவுக்கு , அப்பாவும், ப்ரியதர்ஷன் அங்கிளும் நெருக்கமான நண்பர்கள். அங்கிளோட முதல் படத்தை அப்பாதான் தயாரிச்சார். அங்கிள் மட்டும் கேட்காம, வேற யார் நடிக்க கேட்டிருந்தாலும் நான் நடிக்க அப்பா சம்மதிச்சிருக்க மாட்டார்.

நாயகியா அறிமுகமான முதல் படத்துலயே நான்கு விருதுகள் வாங்கிட்டீங்களே?

அதான் எனக்கு மிகப் பெரிய சந்தோஷம். ஹாரர் , காமெடி படம்தான் ‘கீதாஞ்சலி’. ஆனா, முதல் படத்துலயே எனக்கு இரட்டை வேடங்கள். மோகன் லால் சார் கூட நடிச்சதை இப்பவும் பெருமையா உணர்றேன். அப்புறம் திலீப் சாரோட ரிங் மாஸ்டர் படத்துல நடிச்சேன். அதுக்கும் வணிக வெற்றி கிடைச்சாச்சு.

இப்போ ‘இது என்ன மாயம்’, ‘ரஜினி முருகன்’ படங்கள் மூலமா தமிழுக்கு வந்திருக்கேன். அம்மாவோட தாய்மொழி தமிழ்ங்கிறதால நானும் என்னைத் தமிழ்ப் பொண்ணாதான் உணர்றேன். தமிழ் சினிமா என்னையும் கொண்டாடும்னு நம்புறேன்.

சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு யார் உங்க ஃப்ரெண்ட்?

ரெண்டு பேருமே. அம்மா ரஜினி சாரோட நடிச்சாங்க. நான் நடிக்குற படம் ரஜினி முருகன். பிரபு சார் ஹீரோவா அறிமுகமான படத்துல சிவாஜி சாரும் நடிச்சார். அதுல பிரபு சார் தங்கையாக அம்மா நடிச்சாங்க. இப்போ பிரபு சார் பையன் விக்ரமோட படத்துல நான் தமிழ்ல அறிமுகம் ஆகிறேன். நெனைச்சாவே சிலிர்க்குது.

சிவகார்த்திகேயன் ரொம்ப கலாய்ப்பார். அவர் இருந்தாலே அந்த செட் முழுக்க சிரிப்பும், சந்தோஷமும் களை கட்டும். விக்ரம் பிரபு பெருசா பேச மாட்டார். கொஞ்சம் கூச்சப்படுவார். ஆனா, ரெண்டு வார்த்தை பேசினாலும் அதுல கிண்டல் பண்ணிடுவார். எனக்கு ரெண்டு பேருமே நல்ல நண்பர்கள்தான்.

தமிழ்ல யார் கூட நடிக்க ஆசை?

ரஜினி சார். ‘நெற்றிக்கண்’ ஷூட்டிங் ஸ்பாட்ல ரஜினி சார் எவ்ளோ ஜாலியா இருப்பார். எந்த ஈகோவும் பார்க்காம எளிமையா இருப்பார்னு அம்மா இப்பவும் சொல்வாங்க. ரஜினி சாரோட ஒரு ஷாட்லயாவது ஏதாவது மூலையில வர்ற மாதிரியாவது நடிச்சிடணும். இதான் என் உச்சபட்ச ஆசை.

அம்மா நடிக்க டிப்ஸ் சொல்லித் தருவாங்களா?

‘ரிங் மாஸ்டர்’ படத்துல நான் பார்வையற்ற பெண்ணா நடிச்சேன். அதுக்கு அம்மாதான் நடிப்பு சொல்லித் தந்தாங்க. ஷூட்டிங் முடிஞ்சு வந்ததும் என்ன எடுத்தாங்கன்னு காட்சி ரீதியா விளக்குவேன். இப்படி நடிச்சிருக்கலாம். அப்படி நடிச்சிருக்கலாம்னு எதுவும் சொல்லமாட்டாங்க. ஆனா, அம்மாவே நடிச்சுக் காண்பிப்பாங்க.

அதனாலதான் அந்த காதாபாத்திரம் எப்போதும் பேசப்படுது. படப்பிடிப்புக்கு போயிட்டா லைட் பாய்ல இருந்து இயக்குநர் வரைக்கும் எல்லோர்கூடவும் ஒரே மாதிரி பழகணும் வித்தியாசம் பார்க்கக் கூடாது. ஒழுக்கமும், அர்ப்பணிப்பும், நேரம் தவறாமையும் ரொம்ப முக்கியம்னு அம்மா சொன்னாங்க. அம்மா சொன்னதை எப்பவும் தப்பாம கடைப்பிடிப்பேன்.

அம்மாவைத் தவிர யாரை ரோல் மாடலா சொல்வீங்க?

1980கள்ல ஹீரோயினா வலம் வந்த குஷ்பு, ராதிகா, சரிதா இவங்க மூணு பேரும் எனக்கு ரோல்மாடல்தான். அவங்க நடிச்ச பல படங்களைப் பார்த்திருக்கேன். அவங்களை மாதிரி பல வண்ணங்கள் கொண்ட கதாபாத்திரங்கள் இப்பவும் பேசப்படுதில்ல.

கீர்த்தியின் நிஜ கேரக்டர்?

அன்பா இருப்பேன். கொஞ்சம் கோபப்படுவேன். அப்புறம் நானே சமாதானம் ஆகிடுவேன். எல்லாரையும் ஈஸியா நம்பிடுவேன். இதான் என் பலமும். பலவீனமும்.

எந்த மாதிரி கதாபாத்திரங்கள்ல நடிக்கப் பிடிக்கும்?

பொழுதுபோக்குப் படங்கள், கதாநாயகியை மையப்படுத்தின படங்கள்னு எல்லாப் படங்கள்லயும் நடிக்கணும். சில படங்கள்ல கதாநாயகிக்கு நல்ல முக்கியத்துவம் கொடுப்பாங்க. அதுல வணிக அம்சங்களும் இருக்கும். கதாநாயகிக்கான மதிப்பும் இருக்கும். அந்த மாதிரி படங்கள்லயும் நடிக்க ஆசை.

சுருக்கமா சொல்லணும்னா, ‘மரியான்’ பார்வதி, ‘குயின்’ கங்கணா ரணாவத், ‘22 பீமேல் கோட்டயம்’ ரீமா கல்லிங்கல் மாதிரியான கதாபாத்திரங்கள்ல நடிக்கணும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x