Published : 17 Jan 2015 05:21 PM
Last Updated : 17 Jan 2015 05:21 PM

பாப்பாக்கள் ஓடிவிளையாட இடமுண்டா?

பள்ளிக்குச் செல்வது, வீடு திரும்பியவுடன் அதிக மதிப்பெண்களுக்காக வேண்டி அதற்கெனச் சிறப்பு பயிற்சி அளிக்கும் கல்வி நிலையங்களுக்கோ தனிப்பட்ட ஆசிரியர்களிடமோ மீண்டும் போய் படிப்பது. இப்படித்தான் இன்றைக்கு பெரும்பாலான குழந்தைகளின் அன்றாட வாழ்க்கை இருக்கின்றது.

பாரதியார் `ஓடிவிளையாடு பாப்பா’ என்று பாடினார். நம்முடைய குழந்தைகளும் ஓடத்தான் செய்கிறார்கள். என்ன வித்தியாசம் என்றால், விளையாட்டில் ஓடுவதில்லை. வீட்டிலிருந்து கிளம்பிப் பள்ளிக்கும் பள்ளி விட்டதும் டியூஷனுக்கும் ஓடுகிறார்கள். அதற்கே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. கிடைக்கும் நேரத்திலும் ஓடியாட அவர்களுக்கு ஒரு வெளிதான் உண்டா?

விளையாட்டுக்குப் பதில் தொலைக்காட்சி

விடுமுறை நாட்களில் பூங்காக்களில் திரளும் குழந்தைகளைப் பார்த்தாலே வீடுகளில் இடமில்லை என்னும் உண்மை பளிச்சென்று புரியும்.

தீப்பெட்டிகளாய் வீடுகள் சுருங்கிவிட்ட நிலையில் கண்ணாமூச்சி, பாண்டி போன்ற எளிய விளையாட்டுகளை விளையாடுவதற்குக் கூட வீடுகளில் இடமில்லை என்பதே உண்மை. அடுக்குமாடி குடியிருப்புகளில் திறந்தவெளி இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டாலும் நடைமுறையில் கடைபிடிக்கப்படுவதில்லை என்பதே உண்மை. இந்தச் சூழ்நிலையில் குழந்தைகளின் விளையாட்டு என்பது கனவாகிப் போய்விடுகின்றது. ஓடிவிளையாடுவதற்குப் பதில் குழந்தைகள் தற்போது அதிகம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் நேரத்தைச் செலவிடுகின்றனர். இதனால் கண்பார்வை பாதிப்படைவது அதிகரித்துள்ளது. தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே நொறுக்குத் தீனிகளைச் சாப்பிடுவதால் உடல் பருமன் பிரச்சினை தற்போது இந்தியக் குழந்தைகளுக்கும் அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.

விளையாட்டைத் திருடிக் கொண்ட வாகனங்கள்

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பெரும்பாலும் தரைத் தளத்தை வாகன நிறுத்தத்துக்காக ஒதுக்கிவிடும் நிலை தற்போது அதிகரித்துள்ளது. அந்தவகையில் குழந்தைகளின் விளையாட்டுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பில் இருக்கும் மிச்சசொச்ச இடத்தையும் நம்முடைய வாகனங்களே திருடிக் கொள்கின்றன என்று சொல்லலாம்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நகரத்தின் சிறிய தெருக்களில் பெரும்பாலும் சிறுவர்கள் ஏதாவது விளையாடிக் கொண்டிருப்பார்கள். இப்போது பெரும்பாலான முட்டுச் சந்துகள் வாகனங்கள் நிறுத்தும் இடங்களாகிவிட்டன. பெரும்பாலான வாடகைக் கார்கள் நிறுத்தும் இடமாக நகரத்துச் சாலைகள் மாறிவிட்டன. இதை முறைப்படுத்த வேண்டியது அவசர அவசியம்.

அடுக்குமாடிக் குடியிருப்பிலும் விளையாடலாம்

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பெரும்பாலும் மொட்டை மாடியில் பெரிய அளவுக்கு நெருக்கடி எதுவும் இருக்காது. மொட்டை மாடியின் சுவரைச் சற்று உயரம் ஏற்றிவிட்டு, மாடியைச் சுற்றி உறுதியான வலையை அமைத்துவிட்டால் போதும். பாண்டி, ஸ்கிப்பிங், பந்து விளையாட்டு போன்றவற்றை விளையாடிக் கொள்ளலாம்.

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இருக்கும் இடத்தில் ஊஞ்சல், சீசாப் பலகை போன்ற எளிய விளையாட்டுச் சாதனங்களைப் பொருத்தினால்கூட குழந்தைகளுக்கு அது மிகப் பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x