Published : 04 Jan 2015 02:00 PM
Last Updated : 04 Jan 2015 02:00 PM

2014: பெண்கள் சந்தித்ததும் சாதித்ததும்

ஒவ்வொரு வருடத் தொடக்கத்திலும் மனிதர்கள் புதுப் புது சாதனைகளை நோக்கிப் பயணப்படவே விரும்புவார்கள். பெண்களும் அப்படித்தான் ஒவ்வொரு நாளும் புதுப்புது சவால்களைச் சமாளிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். சமாளித்து எழுகிறவர்களை இந்தச் சமூகம் கொண்டாடும், சில சமயம் சர்ச்சைக்கும் உள்ளாக்கும். ஆனால் சுழலில் அடித்துச் செல்லப்படாமல் உறுதியாக நிற்கும் பெண்களே தடம்பதிக்கிறார்கள். 2014-ம் ஆண்டில் அப்படி தனித்து நின்று கவனம் ஈர்த்த சில பெண் ஆளுமைகள் இவர்கள்.

விளையாட்டு

தங்க மங்கைகள்

விளையாட்டுத் துறையில் கடந்த ஆண்டு பெண்களுக்கான ஆண்டு என்றே சொல்ல வேண்டும். தொடர்ச்சியான வெற்றிகளும் பதக்கங்களுமே அதற்கு சாட்சி.

2014-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் குத்துச் சண்டை பிரிவில் மேரி கோம் தங்கப் பதக்கம் வென்றார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் குத்துச் சண்டை பிரிவில் முதல் பதக்கம் பெற்ற இந்தியர் இவரே. மணிப்பூரின் பின்தங்கிய கிராமத்தில் பிறந்த மேரி கோம், வெற்றியின் உச்சம் தொட இவரின் விடாமுயற்சியும் கடின உழைப்புமே காரணம். இவரது வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘மேரி கோம்’ என்ற இந்தித் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றது.

காமன்வெல்த் போட்டியில் 55 கிலோ ஃப்ரீ ஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் பபிதா குமாரி தங்கம் வென்று இந்தியாவின் வெற்றி மகுடத்தின் பிரகாசத்தைக் கூட்டினார். காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியில் தமிழக ஜோடி ஜோஷ்னா சின்னப்பா-தீபிகா பள்ளிக்கல் தங்கம் வென்று வரலாறு படைத்தனர்.

காமன்வெல்த் போட்டியில் ஸ்குவாஷ் பிரிவில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இது.

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா சாம்பியன் பட்டம் வென்றார். ஓபன் மற்றும் வேர்ட்ல்டு டூர் பைனலில் பெண்கள் இரட்டையர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் பெண்ணும் இவர்தான்.

பாட்மிண்டன் அரங்கிலும் இந்தியாவின் கொடி உயரப் பறந்தது. சாய்னா நேவால், பி.வி. சிந்து இருவரும் குறிப்பிடத்தகுந்த அளவில் பதக்கங்ளைக் குவித்தனர்.

சளைக்காத சரிதா

தென் கொரியாவின் இன்சியான் நகரில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் நடுவரின் ஒருதலைபட்சமான தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவி, தனக்கு வழங்கப்பட்ட பதக்கத்தை வாங்க மறுத்துவிட்டார். சரிதாவின் அதிரடி முடிவு விமர்சனத்துக்கு உள்ளானது. அவர் தொடர்ந்து விளையாட தடை விதிக்கப்பட்டது. இருந்தாலும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிரான சரிதாவின் முடிவு, தவறிழைத்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு சாட்டையடியாகவே பார்க்கப்பட்டது.

கட்சியும் கருத்தும்

நடிகை குஷ்பு, திமுகவில் இருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். எப்போதும் கருத்துகள் சொல்வதில் சளைக்காத குஷ்பு, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த கையுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது விடுதலைப் புலிகள் அமைப்பு குறித்து அவர் தெரிவித்த கருத்து சர்ச்சைக்குள்ளானது. ஏற்கெனவே கற்பு குறித்து நடிகை குஷ்பு சொன்ன கருத்துக்குக் கொதித்தெழுந்த மக்கள் இந்த முறை அதிகமாகவே எதிர்ப்பைப் பதிவுசெய்தார்கள். சமூகவலைத்தளங்களிலும் பலர் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். சில எதிர்ப்பாளர்கள் நடிகை குஷ்புவின் தனிப்பட்ட வாழ்க்கையைக் கேள்விக்குள்ளாக்கி விமர்சித்த செயலும் அரங்கேறியது.

நம்பிக்கை நாயகிகள்

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கானல்நீராகவே இருக்கும் நிலையில், மாநில மற்றும் தேசிய அரசியலில் ஆங்காங்கே தென்படுகிற பெண் முகங்கள் நம்பிக்கை தருகின்றன.

ஆண்கள் ஆதிக்கம் நிறைந்திருக்கும் அரசியலில் தனி அடையாளத்துடன் செயல்பட வேண்டிய பொறுப்பும் கடமையும் மிக்க சில பெண் அமைச்சர்கள், தாங்கள் சார்ந்திருக்கும் கட்சி மற்றும் அமைப்புக்கு ஆதரவான கருத்துக்களைச் சொல்லி மக்கள் மத்தியில் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டனர்.

அரசியல்

முன்னாள் முதல்வர்

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு, பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியானது. தமிழக முதல்வராக இருந்தவர், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தீர்ப்புக்குப் பிறகு முன்னாள் முதல்வரானார். கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்கும் வரை ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், விதவிதமான வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் என அதிமுகவினரின் செயல்பாடுகள் அதிரடியாக இருந்தன. வழக்கின் தீர்ப்பை நீதிபதி முழுவதும் படித்து முடிப்பதற்குள் ஜெயலலிதா விடுதலை எனக் கொண்டாடி தீர்த்த தொண்டர்கள், தீர்ப்புக்குப் பிறகு அழுது புலம்பித் தீர்த்தனர்.

சர்ச்சை சாத்வி

டெல்லியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மத்திய இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, “கிறிஸ்துவர்களும் முஸ்லிம்களும் ராமர்களின் பிள்ளைகளே. இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை” என்றும், “ராமரைப் பின்பற்றுபவர்களின் ஆட்சி வேண்டுமா அல்லது முறைதவறிப் பிறந்தவர்கள் உங்களை ஆள வேண்டுமா?” என்றும் பேசினார். இது நாடு முழுவதும் எதிர்ப்பலையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து சாத்வி பதவி விலக வேண்டும் என்று நாடாளுமன்றத்திலும் எதிர்ப்பு பிரதிபலித்தது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பதவி யேற்ற நாள் முதலே சர்ச்சைகளின் நாயகியாக வலம்வந்துகொண்டிருக்கிறார். உயர் கல்வித் தகுதி இல்லாதவருக்கு கல்வித் துறை அமைச்சர் பதவியா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்து ஓயும் முன், அனைத்து மாநிலங்களிலும் உள்ள சி.பி.எஸ்.சி பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்று அடுத்த அஸ்திரத்தை ஸ்மிருதி இரானியே ஏவினார். ஆக்ராவில் முஸ்லிம்களை மதமாற்றம் செய்த நிகழ்வைத் தொடர்ந்து இவருக்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு வலுத்தது. முன்னாள் பிரதமர் வாஜ்பாயை கவுரவிக்கும் விதமாக அவரது பிறந்தநாளான டிசம்பர் 25-ம் தேதி நல்லாட்சி நாளாக அனுசரிக்கப்படும் என்றும் பள்ளிகளில் அன்று நல்லாட்சி தொடர்பான ஆவணப்படங்களை ஒளிபரப்ப வேண்டும் என்றும் ஸ்மிருதி இரானியின் துறை சார்பில் அறிவிப்பு வெளியானது. கிறிஸ்துமஸ் தினத்தன்று பள்ளிகள் இயங்க வேண்டுமா என்று எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து அந்த முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

லக அளவில் பல துறைகளிலும் பெண்கள் தடம்பதித்தனர். மேரி பாரா, உலகின் மிகப் பெரிய கார் நிறுவனமான அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸின் தலைமைச் செயல் அலுவலராகப் (சி.இ.ஓ.) பொறுப்பேற்றார். சர்வதேச கார் நிறுவனத்தின் தலைமைப் பதவி வகிக்கும் முதல் பெண் இவர். அதுவும் இயந்திரப் பொறியியல் துறையில் பெண்களுக்கு தலைமைப் பதவி கிடைப்பது அத்தனை எளிதல்ல. பல போராட்டங்களைத் தாண்டியே மேரிக்கு இந்த வெற்றி சாத்தியமாகியிருக்கிறது.

அவளுக்காக அவன்

ஹாலிவுட் மாயாஜால படமான ஹாரிபாட்டரில் ஒன்பது வயதில் அறிமுகமான எம்மா வாட்சன் இன்று இளம் நடிகையாக மட்டுமல்ல, ஐ.நா. சபையின் நல்லெண்ணத் தூதராகவும் அறியப்படுகிறார். ‘அவளுக்கான அவன்’ என்ற பரப்புரையைத் தொடங்கிய எம்மா, ‘பெண்ணியம் என்பது பெண்கள் சார்ந்தது மட்டுமல்ல. பெண்களும் ஆண்களும் சேர்ந்து ஒடுக்கப்பட்ட பெண்களுக்காகவும் பெண் குழந்தைகளுக்காகவும் குரல் கொடுப்பது’ என்று சொல்லியிருக்கிறார். இதன் மூலம் உலகத்தின் கவனத்தை எம்மா மீண்டும் தன்பக்கம் திருப்பியிருக்கிறார்.

வலைத்தள வெற்றி

அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநரான ஷெரில் காரா சாண்ட்பர்க், பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நடவடிக்கை அதிகாரியாகக் (C.O.O) கடந்த செப்டம்பர் மாதம் தேர்வு செய்யப்பட்டார். ஏற்கெனவே பேஸ்புக் நிறுவனத்தின் முதல் பெண் இயக்குநராகவும் ஷெரில் பதவி வகித்திருக்கிறார். போட்டி நிறைந்த சமூக வலைத்தளங்களுக்கு மத்தியில் பேஸ்புக் நிறுவனம் முதல் இடத்தைத் தொடர்ந்து தக்கவைத்திருப்பதில் வெளிப்படுகிறது ஷெரில் காராவின் திறமை.

உலகம் மலாலா

தலிபான்களுக்கு எதிராக எழுத்தையும் கல்வியையும் உயர்த்திப் பிடித்த மலாலா, நோபல் பரிசுக்காகக் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாகிஸ்தானின் மிக உயர்ந்த பொதுமக்கள் விருதான ‘சிதாரே-எ-சுஜாத்’ எனும் தைரியமான பெண் விருது பெற்ற பெருமையும் மலாலாவுக்கு உண்டு. மலாலா கடந்துவந்த எத்தனையோ விருதுகளுக்கு மகுடம் சூட்டும்விதமாகத் தற்போது கிடைத்திருக்கும் நோபல் பரிசை, பெண் கல்விக்கும் பெண்ணுரிமைகளுக்கும் கிடைத்த அங்கீகாரமாகக் கருதலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x