Last Updated : 06 Jan, 2015 03:06 PM

 

Published : 06 Jan 2015 03:06 PM
Last Updated : 06 Jan 2015 03:06 PM

பலவகைத் திறமையைத் தேர்வில் தெரிவிக்கலாமா?

நீங்கள் எதில் சிறப்பு பெற்றவர்?

இப்படி ஒரு கேள்விக்குக் கீழ் ஒரு பட்டியலே அளிக்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அதில் “மார்க்கெட்டிங், மனிதவளம், பைனான்ஸ், விளம்பரத்துறை, மனநல ஆலோசனை, திட்டமிடுதல்’’ இப்படி விரிகிறது அந்தப் பட்டியல்.

சைகோமெட்ரிக் தேர்வில் இப்படி ஒரு கேள்வி கேட்கப்பட்டால் பழக்கத் தோஷத்தில் நீங்கள் இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்கக் கூடாது. கேள்வியில் வேறுமாதிரி குறிப்பிடப்பட்டிருந்தாலொழிய, நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட விடைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

ஆனால் இது தெரிந்தும் ஒருவர் ஒரே ஒரு விடையைத்தான் டிக் செய்துவிட்டு வந்திருந்தார். வியப்புடன் கேட்டபோது விளக்கினார்.

தெரிவிக்கக் கூடாதா?

“நிறைய பதில்களை டிக் செய்தால் அது யானை தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக்கிட்ட மாதிரிதான். எனக்குப் பிடித்தத் துறை பைனான்ஸ். நான்பாட்டுக்கு இதனோடு கூடவே ஹெச்.ஆர்., மனநல ஆலோசனைன்னு டிக் செய்து வெச்சா, என்னை அந்தப் பதவிகளில் போட்டுட்டா என்ன ஆகும்? என் இலக்கே மாறிப்போய் விடுமே’’.என்றார்.

அவரை வருத்தப்பட வைக்க நான் விரும்பவில்லை. என்றாலும் இப்போது என் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளாவிட்டால் அது வருங்காலத்தில் அவர் பிற நிறுவனங்களில் எழுதக்கூடிய சைகோமெட்ரிக் தேர்வுகளில் அவரைப் பாதிக்குமே என்ற அக்கறையால் அவருக்கு விளக்கினேன்.

“நண்பரே, சைகோமெட்ரிக் தேர்வு வைத்த நிறுவனத்தில் நீங்கள் உட்பட மூன்றுபேரை இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரே ஒரு துறையில் மட்டுமே சிறப்பு பெற்ற உங்களைத் தேர்ந்தெடுப்பார்களா? அல்லது இரண்டு, மூன்று துறைகளைத் தேர்வில் டிக் செய்தவரைத் தேர்ந்தெடுப்பார்களா?’’ என்று கேட்டேன்.

“அகல உழுவதைவிட ஆழ உழுவதே மேல் இல்லையா? இரண்டு மூன்று துறைகளில் கொஞ்சம் கொஞ்சம் தெரிந்து வைத்திருப்பதைவிட ஒரே துறையில் முழுக்கத் தெரிந்து வைத்திருப்பது நல்லதுதானே?’’ என்று அவர் திருப்பி பதில் சொன்னார்.

அலைய விட்டால்?

“நிறுவனம் அப்படி நினைக்க வேண்டும் என்பது அவசியமில்லை. இரண்டு, மூன்று துறைகளை டிக் செய்தவர் அந்த இரண்டு , மூன்றிலுமே தேர்ந்தவராக இருக்கலாம். அல்லது அவற்றில் ஒன்றில் ஆழமாகவும் மற்றவற்றில் ஓரளவும் தேர்ச்சி பெற்றவராக இருக்கக் கூடும். இப்படிப்பட்டவர்களை வேலைக்குச் சேர்த்தால் மேலும் பயனுள்ளவர்களாக இருப்பார்கள் இல்லையா?’’ என வாதிட்டேன்.

இதற்கும் ஒரு தயார் பதிலை வைத்திருந்தார் அந்த நண்பர். “என்ன சொல்றீங்க? நான் மார்க்கெட்டிங்லே சிறப்பு பெற்றவன்னு டிக் செய்திருந்தா, என்னை வெளியே அலைய விடுவாங்களே? பின்னால் அப்படி அவஸ்தைப் படுவதைவிட தொடக்கத்திலேயே தெளிவாகத் தெரிவித்துவிடுவது நல்லதுதானே?’’.

“நண்பரே, உங்களுக்கு எந்தத் துறையிலே வேலை செய்யப் பிடிக்கும் என்பது கேள்வியில்லை. எந்தத் துறைகளில் நீங்கள் சிறப்பு பெற்றவர்னுதான் கேட்கப்பட்டிருக்கு’’.என சளைக்காமல் அவரைக் கேட்டேன்.

நண்பர் முகத்தைப் பார்த்தால் புரிந்து கொண்டதுபோலவும் இருந்தது. கொஞ்சம் குழப்பத்திலும் இருக்கிறார் என்பது போல இருந்தது. எனவே ஒரு உதாரணத்தை அளித்தேன்.

“உங்களுக்கு கணக்கு எளிதாக இருக்கலாம். ஆனால் கணிதப் பேராசிரியராக ஆக வேண்டுமென்ற ஆசை உங்களுக்கு இல்லாமல் போகலாம். மருத்துவராக வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். தமிழ் பாடல்களிலும், செய்யுள்களிலும் ஆர்வம் கொண்ட பலரும் தமிழ்த் துறையிலா தங்கள் வேலைவாய்ப்பைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்?’’.

மாத்தி யோசி

என் கேள்வி அவரை யோசிக்க வைத்திருக்க வேண்டும். என்றாலும் தான் கூறியதையே மீண்டும் கேட்டார். அதாவது மார்க்கெட்டிங் பிடிக்கும் என்றால் களப்பணியில் இறங்கச் சொல்லிவிடுவார்களே என்று.

“இது அசட்டுத்தனம். உங்களுக்கு மார்க்கெட்டிங்கில் சிறப்பு இருக்கிறது என்றால் நீங்கள் வேறு சிலவற்றை உணர்த்துகிறீர்கள். பிறரைச் சந்திக்க உங்களுக்குப் பிடித்திருக்கிறது. வாடிக்கையாளர்களை மிகவும் மதிக்க வேண்டும் என்பதையும், பிரச்சினையை வாடிக்கையாளர் கோணத்திலிருந்து அணுக வேண்டும் என்பதையும் நீங்கள் நன்கு அறிந்திருக்கிறீர்கள். நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும் மேற்படி குணாதிசயங்கள் நிறுவனத்துக்கு நன்மை பயக்கும்.

மனநல ஆலோசனை அளிக்க உங்களால் முடியும் என்றால், நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும் உங்கள் குழுவில் பிரச்சினைகள் எழாமல் உங்களால் பார்த்துக் கொள்ள முடியும். பிரச்சினைகள் எழுந்தாலும் தீர்த்துக் கொள்ள முடியும். இப்படித்தான் நிறுவனம் யோசிக்கும். பைனான்ஸ் துறைக்கு என்று வேலைவாய்ப்பை விளம்பரப்படுத்தி இருக்கும்போது, அதற்காகத் தேர்வு எழுத வந்துள்ள உங்களை அந்த நிறுவனம் தானாகவே வேறொரு பதவியில் உட்கார வைத்துவிட முடியாது’’ என்றேன்.

இந்த இடத்தில் சைகோமெட்ரிக் தேர்வுகளின் ஒரு பகுதி தொடர்பாக வேறொரு ஆலோசனையையும் வழங்கலாம் என்று தோன்றுகிறது. இப்போதெல்லாம் Numerical reasoning வகைத் தேர்வுகளுக்குச் சில நிறுவனங்கள் கால்குலேட்டர்களை அனுமதிக்கின்றன. காரணம் அந்தத் தேர்வில் உங்கள் கணிதத் திறமை சோதிக்கப்படுவதில்லை.

கிடைக்கும் எண் சார்ந்த தகவல்களை நீங்கள் எந்தவிதத்தில் பயன்படுத்துகிறீர்கள் என்பதையும், அவற்றைக் கொண்டு எப்படிப்பட்ட தீர்வுகளை எடுக்கிறீர்கள் என்பதையும்தான் சோதிக்கிறார்கள். எனவே உங்கள் கால்குலேட்டரை எப்போது பயன்படுத்தலாம் என்பதிலும் அதிலுள்ள ஒவ்வொரு வசதியையும் எப்படிப் பயன்படுத்த முடியும் என்பதிலும் தெளிவாக இருங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x