Published : 02 Jan 2015 12:35 PM
Last Updated : 02 Jan 2015 12:35 PM

கிரேசியைக் கேளுங்கள் 15 - கபாலி தாதா கதை

ஸ்ரீராம், சேலம்.

அண்மையில் மறைந்த ‘வானொலி அண்ணா’ கூத்தபிரானைப் பற்றிக் கூறுங்களேன்..?

‘ராமா… ராமா’ என்று இருக்க வேண்டிய 85 வயதிலும் ‘டிராமா… டிராமா’ என்று இருந்த இளைஞர் அவர். 1989-ல் எங்கள் ‘கிரேசி கிரியேஷன்ஸ்’ 10-வது ஆண்டு விழாவை கொண்டாடும் தருணத்தில், நாங்கள் மிகவும் ரசித்த 10 நாடகக் கலைஞர்களைக் கவுரவிக்க நினைத்தோம். எங்கள் நாடகக் குழு மொத்தமும் கோரஸாக முன்மொழிந்தது நடிகர் பூர்ணம் விஸ்வநாதனின் ‘தனிக்குடித்தனம்’ நாடகத்தில் குடை நாயுடுவாக வலம்வந்த கூத்தபிரான் சாரைதான்!

நானும் எங்கள் குழுவைச் சேர்ந்த கோபியும் (‘மைக்கேல் மதன காம ராஜன்’ படத்தில் கஷ்கத்தை சொறியும் வரதுகுட்டி) ‘வானொலி அண்ணா’ கூத்தபிரானின் ‘பாப்பா மலர்’ நிகழ்ச்சி யில் பங்கேற்கச் சென்றிருந்தோம். ஒத்திகையின்போது அடியேன் ‘பாரதி யார்’ என்பதை ‘பாதிரியார்’ என்று உளறினாலும், எனக்கு பாவமன்னிப்பு அளித்து சேர்த்துக் கொண்டவர் கூத்தபிரான் சார். மாணவப் பருவத்தில் என்னுள் நாடக விதையை விதைத்தது ‘ஜானகி டீச்சர்’ என்றால், அதை விருட்சமாக்கியது கூத்தபிரான்.

சோ-வின் ‘விவேகா ஃபைன் ஆர்ட்ஸ்’ அரங்கேற்றிய ‘தேன்மொழி யாள்’ என்ற நாடகத்தின் கதையை எழுதியவர் பகீரதன். அதனை நாடகமாக்கம் செய்தவர் கூத்தபிரான். கல்கியின் ‘அமரதாரா’ கதையையும் நாடகமாக்கம் செய்த பெருமை இவரைச் சேரும்.

தன்னுடைய கடைசி நாட்களிலும் ‘ரோபோவின் டைரி குறிப்பு’ என்ற மேடை நாடகத்தில் நடித்துவிட்டுத்தான் அமரரானார். என் சம்பந்தப்பட்ட எல்லா விழாக்களிலும் இந்தத் தமிழ் ‘நாடகத் தாத்தாவை’ப் பார்க்கலாம். சமீபத்தில் திருவல்லிக்கேணி ‘ஹியூமர் கிளப்’ எனக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியபோது, எனது குரு ‘சித்ராலயா கோபு’வோடு சேர்ந்து, அதனை கூத்தபிரான் சார் முன்னிலையில் வாங்கியது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

அந்த நிகழ்வு ‘மகன் தந்தைக்காற்றும்’ மனநிறைவை எனக்குத் தந்தது!

கே.ராஜராஜன், திருவிடந்தை.

அது என்னங்க பிராண்ட் அம்பாஸடர்? உங்களை பிராண்ட் அம்பாஸடர் ஆக்க ஆசைப்பட்டால், எந்த நிறுவனத்துக்காக போக ஆசைப்படுவீர்கள்… ஏன்?

அம்பாஸடர் அந்தக் காலத்து பிராண்ட். அடியேன் லேட்டஸ்ட் ‘ஐ - 10’ பிராண்ட். நான் பிராண்ட் அம்பாஸடராக போக (அவர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பது வேறு சமாசாரம்) நினைப்பது ‘ஏர்-ஸெல்’லுக்கு. ‘காதலா காதலா’படத்தின் ஷூட்டிங் சமயத்தில் தயாரிப்பாளர் எல்.தேனப்பன் (நான் இவரை போனப்பன் என்றுதான் செல்லமாக அழைப்பேன்) கமல் சாரோடு நான் வசதியாக சம்பாஷிக்க ‘ஏர்-ஸெல்லை’த் தந்தார். இன்றுவரை கமல் சாரோடு சம்பாஷணை ‘ஏர் ஸெல்’ மூலம் காற்றினிலே வரும் கீதமாகத் தொடர்கிறது. அதனால் செண்டிமென்டாக அந்த சிம்கார்டை நான் மாற்றவில்லை. ராமருக்கு ஓர் சொல்; இந்த சாக்லேட் கிருஷ்ணாவுக்கு ‘ஏர்-ஸெல்’!

வி.ராமலிங்கம், மதுக்கூர்.

உங்கள் பள்ளிக்கூடத்தில் நடந்த நகைச்சுவை சம்பவத்தைச் சொல்லுங்களேன்?

நான் பி.எஸ் பள்ளியில் எட்டாவது படிக்கும்போது என் வகுப்பில் கபாலி என்றொரு தாதா (எட்டாவதை எட்டாவது தடவையாக படித்துக் கொண்டிருக்கும் தாத்தா) இருந்தான். சிக்ஸ்-பேக், சிகரேட்-பேக் சகிதமாக ஆறடிக்கு ஓங்கி உலகளந்த அதமன் அவன். ‘பிற்காலத்தில் நீ என்னவாக ஆசைப்படுகிறாய்?’ என்று யாராவது பெருசு கேட்டால் நான் ‘கபாலியாகவே விரும்புகிறேன்’என்று கூறும் அளவுக்கு அவன் ஹீரோ.

அவன் சிக்ஸர் அடித்த டென்னிஸ் பந்துகள் புவி ஈர்ப்புக்கு சவாலாக இன்னமும் ஆகாசத்திலேயே உள்ளன. அந்தக் காலத்திலேயே பள்ளிக்கு ‘ஜாவா’ மோட்டார் பைக்கில் வந்து, ரஜினி ஸ்டைலில் வாசலில் இறங்கிக் கொள்வான். அந்த ‘ஜாவா’ கபாலிக்கு பயந்து… தானாகவே சென்று ஸ்டாண்ட் போட்டுக் கொண்டு சமர்த்தாக பார்க்கிங் செய்துகொள்ளும்.

கபாலிக்கு என் ஜியாமெட்ரி பாக்ஸில் ஒன்றரை கண். ‘தர மாட்டேன்’ என்று நான் சொல்ல, கபாலி என் வலது கையைத் துணி பிழிவது போல பின்பக்கம் திருப்பினான். நான் வலி தாங்காமல் கழுத்தை நிமிர்த்தி சூரியனைப் பார்த்தேன். பிஸியோதெரபி மாதிரி இந்த ‘பிழியோதெரபி’ எனக்கு தினமும் நடந்தது.

‘பொறுத்தது போதும் மனோகரா... பொங்கி எழு’ ரேஞ்சில் கபாலியின் துவம்ஸத்தை என் பாட்டியிடம் புகார் செய்தேன். மறுநாள் பாட்டி

கிளாஸ் ரூமுக்குள் வந்து தமிழ் வாத்தியாரிடம் கபாலியின் அட்டூழியத்தை அம்பலமாக்கிவிட்டாள். தமிழ் வாத்தியார் ‘இரணியன் வதம்’ நாடகத்தில் நரசிம்மராக மேக்கப் போடாமல் நடிக்கலாம். அப்படி ஆஜானுபாகுவாக இருப்பார் அந்த அழகிய சிங்கர். பரீட்சையில் பிட் அடித்தால் ‘பிட்டுக்கு மண் சுமக்க வைத்து பிரம்படி கொடுப்பார்’. கபாலியை இரு தொடைகளில் குப்புறக் கிடத்தி என் பாட்டிக்குத் திருப்தியாக கோட்டை கொத்தள அறை அறைந்தார்.

இத்தனை அடியிலும் கபாலி சொட்டு கண்ணீர்விடாமல் ‘தென் பாண்டி சீமையிலே... யாரடித்தாரோ யாரடித்தாரோ’ என்று என்னையே உற்றுப் பார்த்துக் கறுவிக் கொண்டிருந்தான்.

மறுநாள் பள்ளிக்குச் சென்றால் எங்கே கபாலியால் ‘சிசுபால வதம்’ஆவேனோ என அஞ்சி, தினமும் பள்ளிக்குச் செல்வதாகக் கிளம்பிப் போய் சாந்தோம் பீச்சில் சாயங்காலம் பள்ளி விடும்வரை ‘கல்யாணப் பரிசு’ தங்கவேலு ஆபீஸ் போகிறேன் என்று பூங்காவுக்குப் போய்விட்டு வருவது போல, ஆறு மாதங்கள் போய்க் கொண்டிருந்தேன். என் பாட்டி கூட ‘‘என்னடாது... உன் ஷூவுல இவ்வளவு மண்ணு?’ என்று கேட்பாள்.

‘‘பையனை கபாலிக்கு பயந்து ஸ்கூல் மாத்திடேளா பாட்டி?’’ என்று தமிழ் வாத்தியார் கேட்க, மந்தைவெளி மார்க்கெட்டில் என் குட்டு அம்பலமானது.

சமீபத்தில் ஒரு சினிமா கதை விவாதத்துக்காக சாந்தோம் பீச்சுக்குச் சென்றபோது, அங்கே என் கையை முறுக்கிய கபாலி ‘கை முறுக்கு’ விற்றுக் கொண்டிருப்பதை பார்த்தேன். நெற்றி நிறைய விபூதியோடு கபாலீஸ்வரராக சாந்தமாகக் கபாலி காட்சியளித்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x