Published : 07 Apr 2014 01:28 PM
Last Updated : 07 Apr 2014 01:28 PM

மத்திய அரசுப் பணியில் மருத்துவ அதிகாரி ஆகலாம்

மருத்துவர்களுக்கு மத்திய-மாநில அரசுத் துறைகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. தமிழக அரசுப் பணியில் சேர வேண்டுமானால் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக அசிஸ்டண்ட் சிவில் சர்ஜன் பணியில் சேரலாம். பொது மருத்துவம், மருத்துவக் கல்வி, மருத்துவக் கிராமப்புற சுகாதாரப் பணி எனக் குறிப்பிட்ட துறைக்குப் பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இதேபோல், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யூ.பி.எஸ்.சி.) ஒருங்கிணைந்த மருத்துவப் பணிகள் தேர்வெழுதி (Combined Medical Services Exmn) நேரடியாக ரயில்வே துறையில் உதவிக் கோட்ட மருத்துவ அதிகாரி, இந்திய ஆர்டினன்ஸ் பேக்டரி சர்வீசஸ் சுகாதாரப் பணியில் உதவி மருத்துவ அதிகாரி, மத்திய அரசின் சுகாதாரப் பணிகளில் மருத்துவ அதிகாரி, டெல்லி மாநகராட்சி மருத்துவ அதிகாரி போன்ற பணிகளில் சேரலாம். மாதச் சம்பளமாக சுமார் 85 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.

ஒருங்கிணைந்த மருத்துவப் பணிகள் தேர்வு எழுத குறைந்தபட்ச கல்வித்தகுதி எம்.பி.பி.எஸ். படிப்பு. எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பைப் பொறுத்தவரையில் பொதுப் பிரிவினருக்கு 32 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஓ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்புச் சலுகை உண்டு.

எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் மருத்துவ அதிகாரிகள் தேர்வுசெய்யப் படுகிறார்கள். எழுத்துத் தேர்வில் மருத்துவப் பாடங்கள் சம்பந்தப்பட்ட 2 தாள்கள் இருக்கும். ஒவ்வொரு தாளுக்கும் தலா 250 மதிப்பெண் வீதம் மொத்தம் 500 மதிப்பெண்கள். முதல் தாளில் பொது அறிவு தொடர்பான 30 கேள்விகள் இடம்பெறும். நேர்முகத்தேர்வுக்கு 100 மதிப்பெண்.

பொதுவான பட்டப் படிப்பு தகுதி கொண்ட அகில இந்திய தேர்வாக இருந்தால் போட்டி கடுமையாக இருக்கும். ஆனால், ஒருங்கிணைந்த மருத்துவப் பணிகள் தேர்வுக்கு மருத்துவம் படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் போட்டி குறைவுதான். தமிழ்நாட்டில் சென்னையிலும், மதுரையிலும் தேர்வு எழுதலாம்.

ஒருங்கிணைந்த மருத்துவப் பணிகள் போட்டித்தேர்வை யூ.பி.எஸ்.சி. ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு நடத்தப்பட உள்ள தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எழுத்துத்தேர்வு ஜூன் 22-ம் தேதி நடைபெற உள்ளது. ரயில்வே உதவி கோட்ட மருத்துவ அதிகாரி பணியில் 650 காலியிடங்களும், மத்திய சுகாதார பணியில் 150 காலியிடங்களும், டெல்லி மாநகராட்சியில் 75 இடங்களும் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. ஆர்டினன்ஸ் பேக்சரி சர்வீசஸ் மருத்துவ பணியில் காலியிடங்கள் எண்ணிக்கை இன்னும் இறுதிசெய்யப்படவில்லை. இதுவும் கணிசமான எண்ணிக்கையில் இருக்கும்.

தேர்வுக்கு ஆன்லைனில் (www.upsconline.nic.in) ஏப்ரல் 21-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தற்போது எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு படிப்பவர்களும் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு தொடர்பான விவரங்கள், பாடத்திட்டம் உள்ளிட்ட தகவல்களை யூ.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.upsc.gov.in) விரிவாக தெரிந்துகொள்ளலாம். ரெயில்வே மருத்துவப் பிரிவு, மத்திய சுகாதாரத் துறை போன்றவற்றில் உயர் பதவியை வகிக்க விரும்பும் எம்.பி.பி.எஸ். பட்டதாரிகளுக்கு யூ.பி.எஸ்.சி.யின் ஒருங்கிணைந்த மருத்துவப்பணிகள் தேர்வு ஓர் அரிய வாய்ப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x