Published : 18 Jan 2015 03:39 PM
Last Updated : 18 Jan 2015 03:39 PM

ஒழுக்கமும் ஒரு தகுதியே

நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்ட பாலியல் வழக்கில் தொடர்புடைய தருண் தேஜ்பால், சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டது குறித்து ஜனவரி 11 தேதியிட்ட பெண் இன்று இணைப்பில் கருத்து கேட்டிருந்தோம். அது தொடர்பாக வாசகர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகளில் சில இங்கே உங்கள் பார்வைக்கு.

மேடை ஏற ஒரு தகுதி நிச்சயம் வேண்டும். பொது நிகழ்சிகளில் சிறப்பு விருந்தினர்களை அழைத்து அவர்களின் பேச்சின் மூலம் நல்ல தகவல்களைச் சொல்வது என்பதுதான் நிகழ்ச்சி நடத்துபவரின் நோக்கம். அதனால் அந்தப் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் அதற்கேற்ற தகுதியுடன் இருந்தால்தான் அவர்கள் பேசும் கருத்துக்கு மக்கள் மத்தியில் மதிப்பிருக்கும். இது போன்று பெண்ணை இழிவுபடுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் ஒருவர் எதைச் சொன்னாலும் மக்கள் நிச்சயம் அதை ஏளனமாகவேக் கருதுவார்கள். அதனால் இது போன்றவர்களை சிறப்பு விருந்தினராக அழைப்பதே மிகத் தவறு.

- உஷாமுத்துராமன், திருநகர்

தெஹல்கா இதழின் முன்னாள் ஆசிரியரை தன் நூல் வெளியீட்டு விழாவுக்கு அழைத்ததில் தவறில்லை. அந்நிகழ்வில் அவர் கலந்து கொண்டதும் தவறில்லை. முழுமுற்றான தகுதியிருக்கும் ஒருவர்தான் மேடையேற வேண்டும் என நாம் வாதிட்டால் இங்கு யாராலும் மேடையேற முடியாது. ‘குற்றம் செய்யாதவர்கள் என்மீது முதல் கல்லை எறியட்டும்’ எனும் ஏசுவின் கூற்று இன்றுவரை உயிரோடு இருப்பதை அறியாதவர்களா நாம்? மேலும், தருண் தேஜ்பால் பல்லாயிரம் பேர் கூடும் பொதுநிகழ்வுக்கு வரவில்லை.

நூற்றுக்கும் குறைவானோர் கூடும் ஒரு நவீன நாவல் வெளியீட்டு விழாவுக்கே அழைக்கப்பட்டிருந்தார். இன்னும் சொல்லப்போனால், தருண் தேஜ்பால் வந்து போனதை ஊடகங்கள் அதிகம் கண்டுகொள்ளவில்லை. அதற்காக அவர் மீது பெண் ஊழியர் சுமத்தி இருக்கும் பாலியல் குற்றச்சாட்டை அவமதிப்பதாகக் கருதிவிட வேண்டாம். அந்தக் குற்றச்சாட்டிலிருந்து முழுமையாக எப்போதும் அவரால் வெளிவந்துவிடமுடியாது. நீதிமன்றத்தீர்ப்பு அவருக்குச் சாதகமாக இருப்பினும் பொதுத்தளத்தில் நிகழ்ந்த அவமானம் தொடர்ந்தபடியே இருக்கும். அதற்காக வெட்கப்பட வேண்டியவரும் அவர்தான்; எனினும், அந்த ஒன்றின் பொருட்டே புறக்கணிக்கப்பட வேண்டியவரல்ல.

- முருகவேலன், கோபிசெட்டிபாளையம்.

வேண்டாதவர்களைப் பழி வாங்க எண்ணும் போது அல்லது ஒருவரின் பெயருக்குக் களங்கம் கற்பிக்க நினைக்கும்போது இது போன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் உயர் நிலையில் ஒரு யுக்தியாகவே கருதப்படுகிறது. அவர் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறாரே தவிர நிரூபிக்கப்பட்ட தண்டனைக் கைதி அல்ல. குற்றத்தின் தன்மை கருதியே நீதிமன்றமும் பினையில் விட்டிருக்கிறது. அதற்காக இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ள அளவுகோல் வைப்பது முறைல்ல.

குற்றம் சுமத்தபட்டவர்கள் அல்லது குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப்படுபவர்கள் பொது நிகழ்வு மேடைகளில் ஏற தகுதியை வரையறை செய்தோமானால் அரசியல்வாதிகளிலிருந்து ஆன்மிகவாதிகள் வரை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கபட்டவர்கள் வெளியில் வரும்போது இந்தச் சமூகமும் குடும்பமும் அவர்களை வெறுத்து ஒதுக்கி வைப்பதில்லை. குற்றவாளிகளுக்குச் சார்பாக வழக்கறிஞர்களும் வாதிடுகிறார்கள் என்பதற்காகப் பெண்ணினத்துக்கு எதிரானவர்கள் என்று எண்ண முடியாது. எனவே ஆண், பெண் என்ற அளவீட்டைத் தருண் தேஜ்பால் விஷயத்தில் புகுத்துவது நல்லதல்ல.

- மு.க. இப்ராஹிம், வேம்பார்.

கண்ணால் காண்பதும் பொய் , காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று சொல்வார்கள். வழக்கு நீதிமன்றத்தில் நடக்கிறது. தருண் தேஜ்பால் குற்றவாளியா இல்லையா என்பதை நீதிமன்றம் சொல்லட்டும். அதற்குள் நாமாகவே ஒரு முடிவுக்கு வந்து அவர் குற்றம் சாட்டப்பட்டவர், வெளியில் எங்கும் வரக்கூடாது, வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டும் என்று கூப்பாடு போடுவது எந்த வகையில் நியாயம்? ஒருவேளை அவர் குற்றமற்றவராக இருந்தால் அவர் பட்ட அவமானத்துக்கும் வேதனைக்கும் யார் பொறுப்பு? அதற்கு என்ன விலை தரப்போகிறோம்?

- செல்வமுருகன்.

தருண் தேஜ்பால் விழாக்களுக்கு போகிறாரோ, அல்லது வம்படியாக செல்கிறாரோ தெரியாது . ஆனால் இது போன்ற விழாக்களுக்கு யாரும் அவரை அழைக்கவே கூடாது. விழா மேடையில் அமரவைக்கவும் கூடாது. ஒரு முறையேனும் மேடையில் அப்படி அவமானப்படுத்தினால்தான் இது போன்றவர்களுக்கு அறிவு வரும்.

- சரவணன்.

தருண் தேஜ்பால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார் என்பதை அறிந்தும் அவரை அழைத்த அழைப்பாளரைக் கண்டிக்க வேண்டும். அவர் குற்றம் செய்தார் அவரைப் புறக்கணியுங்கள் என்று சொல்லவில்லை. தருண் தேஜ்பால் தன்னை குற்றமற்றவர் என்று நிரூபிக்கும்வரை அவரைத் தனிமைப்படுத்துங்கள். தன் நிலை உணராத ஒருவரை ஒரு பொது விழாவுக்கு அழைத்தது, ஒட்டுமொத்த சமூகத்துக்கும் வெட்கக்கேடு.

- ஜெ. சாந்தக்குமார், மதுரை.

தருண் தேஜ்பாலைக் குற்றம்சாட்டுவதற்கு முன், அவரை விழாவுக்கு அழைத்தவரின் துணிச்சலை என்னவென்று சொல்வது? தருண் தேஜ்பால் தன்னைக் குற்றவாளியல்ல என்று இன்னும் நிரூபிக்காத வரையில் இப்படி விழாக்களில் கலந்துகொள்ள அவரது உள்ளுணர்வு உறுத்தவில்லையா? இந்தக் குற்றத்தை மற்ற குற்றங்களுடன் ஒப்பிடுவதே தவறு. இதிகாசங்களில் தொடங்கி இதே நிலைதான். கற்பு நிலையில் முதலில் சீதாவுக்குத்தான் அக்னிப் பரீட்சை, ராவணனுக்கு அல்ல. இதுபோல் பல குற்றங்கள் வெளியுலகுக்குத் தெரிவதில்லை.

- என். வெங்கட்ராமன்.

ஒரு அரசியல் தலைவர், ஒரு திரைப்படக் கலைஞர் அல்லது சமுதாயத்தில் பெரும்பான்மையோரால் அதிகம் பேசப்படுகிறவர் இவர்களெல்லாரும் ஐந்து நட்சத்திர விடுதிகளில் ராத்தங்கிவிட்டு, அடுத்த நாள் காலையில் உரிய பாதுகாப்புடன், அமோக வரவேற்புடன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லையா? கடவுள் மாதிரி தரிசனம் தந்துவிட்டுச் செல்வதில்லையா? ஆடைகளையும் , செருப்புகளையும் கழற்றிவிடுவதுபோல் குற்றஉணர்வு என்று ஒன்று இருக்குமானால், அதனையும் தங்கும் விடுதியிலேயே விட்டுவிட்டு, பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வதில்லையா? இதுபோன்ற எண்ணற்ற தருண் தேஜ்பால்கள் நம் நாட்டில் துணிவுடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

கடந்தவைகளை மறந்துவிட்டு, அல்லது மறைத்துவிட்டு, ஒரு முன்னாள் இதழாசிரியர் என்ற முறையில் நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு அவரை அழைத்திருக்கிறார்கள், அவ்வளவுதான். இந்தச் சூழலில் , கறைபடுத்தப்பட்ட ஒருவரை அவர் ஆணாகவோ, பெண்ணாகவோ யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்வதா, நிராகரிப்பதா என்பது இந்தச் சமூகத்தின் மனநிலையைப் பொறுத்தது. ‘கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே’ என்பதைக் காலம் இன்னும் அநேகருக்குப் புரிய வைக்கவேண்டியிருக்கிறது, குறிப்பாகப் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு.

- சந்திரா மனோகரன், ஈரோடு.

சமூகத்தில் முன் மாதிரியாக இருக்க வேண்டியவர்களில் பத்திரிகை ஆசிரியரும் ஒருவர். எவ்வாறு பள்ளி ஆசிரியர் மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கக் கடமைப்பட்டுள்ளாரோ அதேபோல் சமூகத்தில் பத்திரிகை ஆசிரியரும் தன் சிறந்த ஒழுக்கத்தின் மூலம் மக்களுக்கு ஒரு உதாரணமாக இருக்க வேண்டியவர். ஆனால் தருண் தேஜ்பால் தன் செய்கையின் மூலம் பெண் சமூகத்துக்கு இழுக்கு ஏற்படுத்தியிருக்கிறார்.

தன்னுடன் பணிபுரிந்த பெண்ணிடம் தவறாக நடந்தவர் எப்படிப் பொது நிகழ்வுகளில் மக்களுக்கு அறிவுரை கூற இயலும்? ஒரு சாதாரண மனிதருக்கும், பத்திரிகை ஆசிரியருக்கும் பொறுப்புகள், கடமைகள் வேறுபடும். இவர் செய்துள்ள செயலுக்கு இவருக்கு சிறப்பு விருந்தினர் தகுதியளித்து கௌரவிப்பது பெண்மைக்கு அளிக்கும் அவமானமாமே.

- ஜீவன்பி.கே, கும்பகோணம்.

தருண் தேஜ்பால், புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டது நிச்சயம் ஏற்கத்தக்கதல்ல. பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட அவமானமே இது. அதிகாரத்தில் இருக்கும் ஆண்கள் என்ன செய்தாலும் தப்பிக்கலாம் என்ற மனநிலையே இதற்குக் காரணம். குற்றம் சாட்டப்பட்டவர் எந்தத் தயக்கமுமின்றி பொது நிகழ்வில் கலந்துகொள்ளும் தைரியத்தை வழங்கியது எது ? பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண் அடையும் அவமானங்களும், ஆண்கள் பெறும் அங்கீகாரமும் மறைமுகமாக இந்நிகழ்வில் அரங்கேற்றப்பட்டுள்ளது.

தைரியமாய்ப் புகார் அளித்த அந்தப் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட கொடுமை இது. இத்தகைய நிகழ்வுகள் தவறு செய்பவர்களுக்கு இன்னும் தைரியத்தையே தரும். மனதளவில் அந்தப் பெண்ணை வலுவிழக்கச் செய்யவே இந்நிகழ்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதோ என்றே தோன்றுகிறது. எந்த நாகரீக முன்னேற்றம் வந்தாலும் பெண்ணை ஆணின் நுகர்பொருளாகவே எண்ணும் ஆதி மனநிலையை இந்நிகழ்வு இன்னும் வலுவூட்டுகிறது. ஊடகம் போன்ற துறைகளில் பெண்கள் உள்ளே வரத் தயங்கும் சூழலில் இவையெல்லாம் தடைகளை இன்னும் உறுதிப்படுத்துகின்றன. எழுத்தாளரென்று தன்னைக் கூறிக்கொள்ளும் இவருமே தார்மீகப் பொறுப்புடன் இவ்விழாவில் கலந்து கொண்டிருக்கக் கூடாது.

- மோனிகா மாறன், வேலூர்.

மேடையேற எது தகுதி என்று தனிப்பட்ட ஒரு நபர் தன்னைப் பார்த்துக் கேட்கும் இந்தக் கேள்வியைவிட ஒருவரை மேடை ஏற்ற எது தகுதி என்று விழா நடத்துபவர்கள் புரிந்து செயல்பட்டாலே போதும். தருண் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. அவர் குற்றம் சாட்டப்பட்டவர்தான், நாளையே அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டு அவர் தண்டிக்கப்படலாம். அவ்வாறு தண்டிக்கப்பட்டால் விழாவில் அவருக்குக் கொடுத்த அத்தனை மரியாதைகளுக்கும் கௌரவங்களையும் திரும்பப் பெறமுடியுமா?

அளிக்கப்பட்ட அனைத்து மரியாதைகளையும் ஒரு குற்றவாளிக்கு எனும்போது விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் விழா ஏற்பாடு செய்தவர்கள் ஏமாற்றி விட்டதாகத்தானே அர்த்தம்? ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏதோ ஒரு சூழ்நிலையில் உருவாக்கிவிட்டால் அந்த ஒரு தவறு காலகாலத்திற்கும் அழிக்கப்பட முடியாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கும். சம்ப்ந்தப்பட்டவருக்குத் தண்டனை கிடைக்காவிட்டால் அந்தச் சூழ்நிலை வேறு ஆனால் ஒரு குற்றம் சாட்டப்பட்டவர் தன்மீது தவறில்லை என்று நீதி மன்றங்கள் தீர்மானிக்கும் வரையில் பொது மேடைகளில் அவர்களை அழைப்பது கூடாது. இதைவிட சம்பந்தப்பட்ட நபர்களே தார்மீக ரீதியில் தாங்கள் குற்றவாளி இல்லை என்ற தீர்ப்பு வரும்வரை பொது விழாக்களில் பங்கேற்பதைத் தவிர்ப்பது நல்லது.

- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.

பாலியல் வழக்கில் தொடர்புடைய ஒரு ஆண் அது குறித்து எந்த அவமானமும் இல்லாமல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது அதே வழக்கில் தொடர்புடைய ஒரு பெண் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஏன் தயங்க வேண்டும்? இன்றைக்கு ஆயிரம் பேசும் சமூகம் நாளைக்குத் தனிப்பட்ட நபராக இதைப் போன்ற நிலையைச் சந்திக்கும் போது இதே சமூகத்தைதான் சாட நேரிடும். நம்மை இந்தச் சமூகம் சாடுவதற்குள் நாமே அவர்களிடம், தங்கள் தரப்பைத் துணிச்சலுடன் முன்வைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் என்று இந்தச் சமூகம் குறைகூறும் என்று பயந்துகொண்டே இருந்தால் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்படும் பெண்கள் யாரும் புகார் அளிக்கவே முன்வரமாட்டார்கள் என்ற ரீதியில் யோசித்து நடந்து கொள்ள வேண்டும்.

- ம.சுந்தரேஸ்வரி, மதுரை.

பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட தருண் தேஜ்பால் குற்றவாளியா இல்லையா என்பது நிரூபிக்கப்படாதவரை, அவர்மீது சுமத்தப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் இருந்துகொண்டிருக்கும் நிலையில் அவர் ஒரு குற்றவாளிதான். அவரைப் போல் அந்த வழக்கில் தொடர்புடைய பெண் அனைத்து காயங்களையும் கடந்து வெளிவந்துவிட முடியுமா என்றால் முடியாது என்றுதான் சொல்ல வைக்கிறது இந்தச் சமுதாயம். இங்கே ஆணாதிக்கம்தான் மேலோங்கி நிற்கிறது என்பதுதான் யதார்த்தம்.

நிச்சயமாக, தருண் தேஜ்பால் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக் கூடாது என்பதுதான் நீதியும் நியாயமும். ஆணாதிக்கத்துக்கு இந்தச் சமுதாயம் ஏன் சவுக்கடி கொடுக்கத் தயங்குகிறது? பெண்ணைத் தாயென்றும் தெய்வம் என்றும் போற்றுவது வெறும் உதடுகள் உச்சரிக்கும் எச்சங்கள்தான் என்று இந்தச் சமுதாயம் சொல்லாமல் சொல்கிறது. இந்த நிலை மாறவேண்டும். இதற்கு ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் சேர்ந்து மாற்றவேண்டும்.

- பேராசிரியர் டாக்டர் எஸ். கே. ஹயாத் பாஷா, வாணியம்பாடி.

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆண்களைவிடப் பெண்களே அதிக பாதிப்புக்கும் அவமானத்துக்கும் உள்ளாகிறார்கள். இந்த அவலத்துக்குப் பயந்தே எத்தனையோ பெண்கள் சமுதாயத்துக்கு முன் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை வெளிப்படுத்த முன்வருவதில்லை. ஆனால் ஆண்கள் சிறிதும் குற்றஉணர்வின்றி பொதுவெளியில் உலா வருகிறார்கள். பெண் என்பவள் எந்தக் காலத்திலும் பழிச் சொல்லுக்கு அஞ்சியே இங்கு வாழவேண்டி உள்ளது.

ஆரம்ப நாட்களில் அந்த ஆணின் மீது வெளிப்படும் சமுதாயத்தின் கோபம் நாளாக நாளாக நீர்த்து விடுகிறது. இதற்கு முக்கியக் காரணம் வெறும் பரபரப்பு மட்டுமே. குற்றச் சாட்டுக்கு முக்கிய காரணிகளைப் பற்றி யாரும் ஆராய்வதில்லை.

பாலியல் குற்றச்சாட்டில் ஏன் ஆணுக்கு அதிக தண்டனை என்றால் இயற்கையாகவே பெண்ணுக்கு மட்டுமே உடலளவிலும், மனதளவிலும் அதிக பாதிப்புகள் ஏற்படும் என்பதாலேயே. இத்தகைய குற்றச்சாட்டுக்கு ஆளான ஆண்கள் பகிரங்கமாக ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடிகிறது. அந்த நிகழ்ச்சிக்குத் தலைமையும் தாங்கமுடிகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்கள் வீட்டை விட்டு வெளியில்கூட வரமுடிவதில்லை. சமுதாயத்தால் தீண்டத் தகாதவர்களாக ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள்.

அல்லது பிற ஆண்களாலும் தவறான அணுகுமுறைக்கு உள்ளாகிறார்கள். சூரியநெல்லி பிரச்சினையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் அவமானத்துக்குப் பயந்து ஊரை விட்டே காலிசெய்த அவல நிலையும் இந்தப் புண்ணிய தேசத்தில்தான் நடந்தது. பெண்களை இந்தச் சமூகம் ஓடஓட விரட்டுகிறது. ஓடிக் கொண்டே இருக்கும் பெண்கள் திரும்பி எதிர்க்க ஆரம்பித்தால் இந்தச் சமூகம் அடிபணியும் காலம் விரைவில் வரத்தான் போகிறது.

- தேஜஸ், காளப்பட்டி.

சிறப்பு விருந்தினராக வருபவருக்கு என்று சில தன்மைகள் உண்டு. அவற்றில் முதன்மையாகக் கருதுவது அவரின் குண நலன், ஒழுக்கம் இரண்டுமே. ஏனென்றால் அவரது கருத்தை, பேச்சைக் கேட்கப் பலர் விருப்பப்படுவார்கள். அவரது மேடைப் பேச்சு, கல்வி அறிவு இவற்றை மட்டுமே கணக்கில் கொண்டு அவர்களை சிறப்புரை ஆற்ற அழைத்தால் அது நல்லதல்ல. இன்னும் அரசியலில் காமராஜ், .கக்கன் போன்ற பெரியோர்களை உதாரணமாகக் காட்டுவது அவர்களது சீரிய அருங்குணத்தால் மட்டுமே .எனவே தலைவராகவோ, சிறப்பு விருந்தினாராகவோ ஒருவர் வரவேண்டும் எனில் முதன்மைப் பண்பாக கருதுவது ஒழுக்கமே.

- பானு பெரியதம்பி , சேலம்.

நீதிமன்றம் தருணை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். ஆனால் பொது வாழ்க்கையில் இந்த மாதிரிப் பெரும் தவறைச் செய்து விட்டுச் சுதந்திரமாக நடமாடினால் எல்லா ஆண்களுக்கும் தாங்கள் செய்தது தவறு என்றே தெரியாது. இன்னும் இந்த மாதிரி தவறுகள் அதிகளவில்தான் நடைபெறும். பிறகு பெண்கள் நிம்மதியாக இருக்க முடியாது. அதனால் இந்த மாதிரி பேர்வழிகளைச் சமூகம் ஒதுக்கி வைத்தால்தான் அவர்கள் தான் செய்தது தவறு என்று உணர்ந்து திருந்துவார்கள்.

- பிருந்தா ரமணி, மதுரை.

பெண் சட்டென உணர்ச்சிவசப்பட்டு பெரும்பாலான முடிவுகளை எடுப்பதுதான் பல பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து விடுகிறது. ஆபத்தான விஷயங்களில் இருந்து விலகியிருப்பதுமில்லை. நான் சமாளிப்பேன் என்ற அசட்டு துணிச்சல். உண்மையில் துணிச்சல் என்பது என்ன? பிரச்சினைகளிலிருந்து விலகியிருப்பதும், தவிர்க்க முடியாத சமயங்களில் சாதுர்யமாக செயல்படுவதும்தான். ஆணை விமர்சிப்பதை விட்டுவிட்டு, தனக்கான எல்லைகளைச் சரியாக உணர்ந்துகொண்டு, தன் பாதையில் பயணப்படத் தெரிந்து கொண்டால், பெண் ணின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.

- வசந்தி ஸ்ரீநிவாசகம்.

‘தாயைக் கொன்றவனுக்கு ஊருல பாதி' என்பது பழமொழி. அன்றிலிருந்து இன்று வரை குற்றம் புரிந்தவரை ஆதரித்து ஜால்ரா தட்டும் ஒரு கூட்டம் எங்கும் இருக்கிறது. பொது விழாக்களுக்குச் சென்று மற்றவர்களுக்கு ஆலோசனையும் அறிவுரையும் கூறுபவர்கள் எந்தக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவர்களாக இருப்பது அவசியம். ஏனெனில் அப்படி இல்லாத போது 'இவன் என்ன யோக்கியனா? இவன் சொல்வதைக் கேட்க வேண்டுமா?' என்ற எண்ணம் தோன்றி அந்த விழாவின் நோக்கம் பயனற்றுப் போவது ஒரு புறம் என்றால், 'எந்தத் தவறு செய்தாலும் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருந்தால் உலகம் நம்மை மதிக்கும்' என்று எதிர்மறையான எண்ணம் தோன்றவும் வாய்ப்புண்டு.

பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்ணை களங்கமானவள் எனத் தூற்றும் உலகம், அந்தக் குற்றம் புரிந்த ஆணைத் தலையில் வைத்துக் கொண்டாடுவது தரம் தாழ்ந்த செயல் மட்டுமல்ல, தவிர்க்கப்பட வேண்டிய செயலும்கூட. விழாவில் கலந்துகொண்ட தருண் தேஜ்பாலை குறை சொல்வதைவிட அவரைப் புத்தக வெளியீட்டுக்கு அழைத்தவர்களைக் குறைகூறுவதே சரியானதாக இருக்கும். குற்றம் புரிந்தவர் எந்தத் துறையைச் சேர்ந்தவராய் இருந்தாலும் ஆணாய் இருந்தாலும் பெண்ணாய் இருந்தாலும் புறக்கணிக்கப்பட வேண்டும். அப்படிச் செய்யும் போதுதான் குற்றம் செய்யத் தயங்குவார்கள். இல்லையேல் குற்றவாளிகள் பெருகுவார்களே தவிர குறைய மாட்டார்கள்.

-ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி நீதிமன்ற விசாரணையில் இருக்கும் தருண் தேஜ்பாலை, நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தவர்கள் சற்று யோசித்திருக்க வேண்டும். அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளத்தான் வேண்டுமா என்பதை தருண் தேஜ்பாலும் சிந்தித்திருக்க வேண்டும்.

எப்படி இருந்தாலும் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உண்மையல்ல என்பதை நிரூபித்த பிறகே பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைப் பற்றிச் சம்பந்தப்பட்டவர்கள் யோசித்திருக்க வேண்டும். கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு போன்றவற்றில் ஈடுபடுபவர்களை மேடையேறுவதற்கான தகுதியானவர்களாக ஆக்குகிறதா இந்தச் சமூகம்? பொது மேடையில் தோன்றுபவர்கள் மனசாட்சியுடன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

- மா. பழனி, கூத்தப்பாடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x