Last Updated : 22 Dec, 2014 04:14 PM

 

Published : 22 Dec 2014 04:14 PM
Last Updated : 22 Dec 2014 04:14 PM

வீதி நாடகத்தில் இருந்து வெள்ளித்திரைக்கு

செம்மலருக்குப் பல முகம். உழைத்துச் சலித்த கருத்த முகமாய், சாராய நாற்றத்தில் தள்ளாடும் குடும்பத்தில் சராசரி மனைவியாய் திரையில் தோன்றும் செம்மலர், வீதி நாடகத்தில் தலைவிரிகோலமாய் வந்து கூட்டத்தினரை ஈர்க்கிறார். இன்னொரு பக்கம் கையில் மைக் பிடித்து மக்களிடம் கருத்துக் கேட்கப் புறப்படுகிறார்.

கோவையைச் சேர்ந்த செம்மலர் அன்னம், ஒரு முகத்துடன் மட்டும் தன் அடையாளத்தை நிறுத்திக்கொள்ள விரும்பவில்லை. வீதி நாடகங்கள், பறை இசை நடனங்கள், குறும்படங்கள் எனப் பல அடையாளங்களுடன் வலம்வருகிற இவருக்கு 24 வயது. பத்துக்கும் அதிகமான குறும்படங்களில் நடித்திருக்கும் இவர், சமூகப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசும் மூன்று குறும்படங்களை இயக்கியிருக்கிறார். 25-க்கும் அதிகமான வீதி நாடகங்களில் தடம் பதித்திருக்கிறார். தணியாத ஆர்வத்துடன் தொலைக்காட்சி தொகுப்பாளராக, உதவி இயக்குநராகத் தன்னை மெருகேற்றியபடி ஓடிக்கொண்டிருக்கிறார்.

களம் அமைத்த நாடகங்கள்

“பள்ளிக்கூடத்துல படிக்கும் போதே மேடை நாடகம் நடத்துறது, அதுக்கான திரைக்கதை எழுதுறது, இயக்கம், நடிப்பு எனக் காட்சித் தொடர்பியல் மேல அதிக ஆர்வம் இருந்தது. அது அடுத்தகட்ட தேடலுக்கு உதவியாக இருந்தது. காலேஜ்ல விஷுவல் கம்யூனிகேஷன் துறையைத் தேர்வு செய்து, திரைமொழிக்கான திறமைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக் கொண்டேன்” என்று சொல்லும் செம்மலர், முதன் முதலில் ‘மலர்மதி’ என்னும் குறும்படத்தை இயக்கி உள்ளார். உறவினர் வீட்டில் வளரும் சிறுமிக்கு அந்த வீட்டைச் சேர்ந்தவர்களே பாலியல் தொல்லை தருவதைக் குறித்த குறும்படம் அது. சென்னையில் நடந்த குறும்படப் போட்டியில் மூன்று பிரிவுகளில் அந்தப் படத்துக்கு விருதுகள் கிடைத்தன.

அதற்கடுத்து விதவை மறுமணம் குறித்துப் பேசும் ‘கோணங்கள்’ குறும்படத்தையும், குடியால் சீரழியும் குடும்பத்தில் வளரும் சிறுமியின் சூழல் தொடர்பாக ‘மது’ என்ற குறும்படத்தையும் இயக்கினார்.

“நான் அதிகமாகப் பார்த்துப் பழக்கப்பட்ட அடித்தட்டு மக்களின் சூழ்நிலைகளையும், என்னை அதிகம் பாதித்த சமூக நிகழ்வுகளையுமே குறும்படங்களாக இயக்கினேன்” என்று சொல்லும் அன்னம், வீதிநாடகங்களைத் தன் முன்னேற்றத்துக்கான காரணங்களில் ஒன்றாகக் குறிப்பிடுகிறார்.

“பலருக்கு முன்னால் கூச்சப்படாமல் என்னை நிற்க வைத்தவை வீதிநாடகங்கள். நடனம், நடிப்பு, உச்சரிப்பு என அனைத்தையும் வெளிக்காட்டியது இதன் மூலமாகத்தான். கல்லூரியில் படிக்கும்போது இயற்கைப் பாதுகாப்பு, வன உயிரினப் பாதுகாப்பு எனப் பல தலைப்புகளில் வீதி நாடகங்கள் நடத்தினோம். இப்போதும் எங்கேயாவது பறை இசை கேட்டால் என் கால்கள் தன்னால் ஆடத் தொடங்கிவிடும்” என்று செம்மலர் புன்னகையுடன் சொல்கிறார்.

புதிய பயணம்

கோவை பொதிகை தொலைக்காட்சியில் காற்று சிம்மாசனம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும், ஜாலி டூர், வேளாண் செய்திகள், இளைஞர்கள் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்குத் தொகுப்பாளராகவும் பணிபுரிந்த அனுபவம் செம்மலருக்கு உண்டு. தற்போது பிரபல இயக்குநர் ஒருவரிடம், உதவி இயக்குநராகப் பணியைத் தொடங்கியுள்ளார்.

“என் அம்மா, அப்பா கொடுத்த ஊக்கம் என் திறமைகளை வளர்த்துக்கொள்ள உதவியா இருந்துச்சு. இப்போ என் கணவர் தரும் ஊக்கம் என் திறமைகளைச் சரியா வெளிக்கொண்டுவர உதவுகிறது” என்று சொல்லும் செம்மலர் அன்னம், எதிர்ப்படுகிற சிக்கல்களை உறுதியுடன் எதிர்கொள்கிறார். அதுதான் அவரை வெற்றியின் வழி நடத்துகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x