Published : 12 Dec 2014 10:27 AM
Last Updated : 12 Dec 2014 10:27 AM

“நீங்க என்னை வாயிலேயே குத்தலாம்” - ஆர் ஜே பாலாஜி பேட்டி

சமூக வலைதளங்களான சவுண்ட் க்ளவ்டு, ட்விட்டர், ஃபேஸ்புக் என எங்கு சென்றாலும் நீங்கள் பாலாஜியைப் பார்க்கலாம். பிக் எஃப்.எம் பாலாஜியை ரேடியோ கேட்கும் அனைவரும் தெரிந்துவைத்திருக்கக்கூடும். தொழில்நுட்பத்துக்கு ஏற்பத் தன்னை அப்டேட் செய்து கொள்வார். தற்போது யூடியூப்பில் ‘பஞ்சுமிட்டாய் தயாரிப்பு நிறுவனம்’ என்ற பெயரில் ஒரு சேனல் தொடங்கி எளியவர்களுக்குப் பிரியாணி வழங்கிய வீடியோவை முதலில் வெளியிட்டார். தற்போது, காவ்யா என்ற குழந்தைக்கு இதயம் வேண்டும் என்று வெளியிட்ட வீடியோ இணையத்தில் நெகிழ்ச்சியுடன் பரவியது. அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து...

‘பஞ்சு மிட்டாய் தயாரிப்பு நிறுவனம்’ தொடங்க என்ன காரணம்?

4 வருடங்களாக ரேடியோவில் பண்ணிய விஷயங்களை இணையத்தில் தொடர்ச்சியாக அப்லோட் செய்து வருகிறேன். எதுவுமே வீடியோ அல்ல. ஆடியோதான். ‘க்ராஸ் டாக்’ என்ற ஷோ காமெடியாகப் பண்ணினேன். ஜோக் அடித்துக் கொண்டிருந்தவன், திடீரென்று நாட்டைத் திருத்துவது மாதிரி எதையும் சொன்னால் நம்ப மாட்டார்கள். இவன் ஒரு விஷயம் சொன்னால், சரியாக இருக்கும் என்பதற்காக சினிமா விமர்சனம் பண்ண ஆரம்பித்தேன். படம் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்களோ, அதை நான் சொல்ல ஆரம்பித்ததால் அந்த ஷோ நல்லாப் போச்சு.

நான் சொல்லும் விஷயத்தை ஒருவர் சீரியஸாகக் கேட்க வேண்டும் என்பதால்தான் சினிமாவில் ஆரம்பித்தேன். எக்ஸ்பிரஸ் அவன்யூவில் பார்க்கிங், வீட்டு வாடகைக் கொள்ளை என என்னைப் பாதித்த விஷயங்களைப் பற்றி எல்லாம் பேச ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் நாம் நிறைய விஷயம் சொல்லிவிட்டோம். இனிமே நாம் வேறு ஏதாவது பண்ண வேண்டும் என்று தோன்றியது. ‘ஐஸ் பக்கெட் சேலஞ்ச்’ எல்லாரும் பண்ணாங்க.

அப்போ நான் என்னுடைய நண்பர்களோடு உட்கார்ந்து பேசி ‘ரைஸ் பக்கெட் சேலஞ்ச்’ பண்ணலாம் என்று பேசினேன். ஆனால் அதைச் செய்யவில்லை. சில நாட்கள் கழித்து இணையத்தில் ரைஸ் பக்கெட் சேலஞ்ச் மிகவும் பாப்புலரானது. உடனேதான், இதே மாதிரி விஷயங்கள் பண்ணினால் மக்களுக்குப் பிடிக்கும் என்று யோசித்தேன். அப்படித் தொடங்கியதுதான் ‘பஞ்சு மிட்டாய் தயாரிப்பு’. நானே என்னுடைய போனில் வீடியோ எடுத்து அப்லோட் செய்கிறேன்.

அதிலும், இசை வெளியீட்டு விழாவைக் கிண்டல் செய்து வீடியோ பதிவு செய்திருக்கிறீர்கள். இது தொடருமா?

எனக்கு காமெடி நல்லா வரும். அதனால் நான் பண்ற விஷயங்களில் அது இருக்கும். சினிமாவைப் பற்றிப் பேசும்போது எல்லாருமே கிண்டல் பண்ற என்றார்கள். இருக்கிற விஷயத்தை நான் என்னுடைய பேச்சில் சொன்னது காமெடியாக இருந்தது அவ்வளவுதான். ஆடியோ வெளியீட்டு விழாக்களில் என்ன நடக்கிறது என்பது நான் நீண்ட நாட்களாக பார்த்துச் சிரிக்கிற விஷயம். நான் அந்த வீடியோவில் என்ன பண்ணினேனோ, அதையேதான் எல்லாருமே ஆடியோ வெளியீட்டு வீடியோவில் கீழே கமெண்ட்டாக போட்டிருப்பார்கள். அது சும்மா ஜாலியாகப் பண்ணியது. அதையே தொடர்ச்சியாகப் பண்ண இருக்கிறேன்னு நினைத்தால் அது தவறு.

சினிமாவைக் கிண்டல் பண்ணுவதற்கோ, தனி மனிதனைக் கிண்டல் பண்ணுவதற்கோ நான் இதை ஆரம்பிக்கவில்லை. என்னைப் பாதித்த விஷயங்களை வீடியோவாகப் பண்ண வேண்டும் என்று தொடங்கப்பட்டதுதான் ‘பஞ்சுமிட்டாய் தயாரிப்பு’. அந்த வீடியோ பற்றி யாருமே எனக்கு போன் செய்யவில்லை. நான் பண்ணவில்லை என்றால், வேறு யாராவது பண்ணுவார்கள். அதை காமெடியாக எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு நல்லதுதான். ஏன் இப்படிக் கிண்டல் பண்றே அப்படின்னு ஒவ்வொருத்தராகப் போய்த் தடுக்க முடியாது.

தற்போது நீங்களும் ஒரு நடிகர். உங்களுடைய பட இசை வெளியீட்டு விழாவில் என்ன பேசுவீர்கள்?

என்னுடைய பட இசை வெளியீட்டு விழாவில் போய், “எனக்கு அன்றே தெரியும். நான் ஆஸ்கர் விருது வாங்குவேன்” என்று பேசினால் என்னுடைய வீட்டிலேயே என்னை உள்ளே சேர்க்க மாட்டார்கள். அப்படிக் கண்டிப்பாக நான் பேச மாட்டேன். அப்படி நான் பேசினேன் என்றால் நீங்கள் என்னை வாய்லேயே குத்தலாம்.

மீண்டும் ரேடியோவில் சினிமா விமர்சனம் பண்ணும் திட்டம் இருக்கிறதா?

பிரச்சினை வரவில்லை என்றால்கூட, நானே ஒரு புள்ளியில் விமர்சனம் செய்வதை நிறுத்தி இருப்பேன். நான் திரும்பி பண்ணுவதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை. நான் செய்து முடித்து விட்டேன். ஏற்கெனவே முடித்த வேலையை ஏன் திரும்பவும் தொடங்கனும் சொல்லுங்க. மறுபடியும் அதே விஷயங்களப் பண்ணுவதற்குப் பிடிக்கவில்லை. இப்போது வேறு நிறைய விஷயங்கள் புதிதாக இருக்கின்றன. இன்னொரு காரணம், இப்போது நான் சினிமாவிலும் நடித்துவருகிறேன். ஆகவே, சினிமாவில் இருந்துகொண்டே அதைக் கிண்டல் செய்வது தவறாகத் தெரியும்.

நீங்கள் விமர்சனம் பண்ணக் கூடாது என்றார்கள். ஆனால் தற்போது யார் வேண்டுமானாலும் விமர்சனம் பண்ணலாம் என்ற சூழ்நிலை நிலவுகிறதே?

நான் நிறுத்திவிட்டேன். இன்னும் தொழில்நுட்பம் என்பது வளரத்தான் செய்யும் என்று நிறுத்தும்போதே சொன்னேன். திருட்டு விசிடிக்கும், சினிமாவுக்கும் இப்போதுவரை ஒரு போர் நடந்துகொண்டே இருக்கிறது. இதையெல்லாம் நம்மால் அழிக்க முடியாது. சென்னை, தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் நடக்கிற விஷயத்தை நீங்கள் எப்படித் தடுக்க முடியும். ஒருவரை அழித்தால் இன்னொருவர் புதிதாக வருவார். நான் விமர்சனம் பண்ணுவதை நிறுத்தி ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனால், இப்போது யார் வேண்டுமானாலும் விமர்சனம் பண்ணலாம் என்று ஆகிவிட்டது. யாரையும் நிறுத்தவே முடியாது.