Published : 02 Dec 2014 12:26 PM
Last Updated : 02 Dec 2014 12:26 PM

தொழில் செய்ய ஆசை இருக்குதா?

‘‘யாருக்கோ வேலை செஞ்சது போதும். நானா தனியா ஏதாவது பண்ணலாம்னு பாக்கறேன். நல்ல பிஸினஸ் பிளான் இருந்தால் சொல்லுங்களேன்! என்று வந்து அமர்ந்தார் நண்பர்.

நல்ல பொண்ணு இருந்தா சொல்லுங்க. லவ் பண்ணனும்னு கேக்கற மாதிரி இருக்கு. உங்களுக்குத் தேவை இருந்தா இந்நேரம் ஆரம்பிச்சிருப்பீங்க. ஐடியா எல்லாம் கேக்கமாட்டீங்க! என்று உரிமையாய்ச் சொன்னேன்.

பெட்டிக்கடைத் தகுதி

வேலையில் சலிப்பு வரும் போது பலர் சொந்தமாகத் தொழில் செய்வதைப் பற்றி பேசுவர். “இந்த வேலை செய்யறதுக்கு பெட்டி கடை வைத்துப் பிழைத்துக் கொள்ளலாம்” என்பர். மகன் படிக்கவில்லை என்றால் “நீ ஆடு மாடு மேய்க்கத் தான் லாயக்கு” என்று சொல்வது போல. நிஜத்தில் பெட்டிக்கடை வைத்திருப்பதற்கும் மாட்டைப் பராமரிப்பதற்கும் சிறப்புத் தகுதிகள் தேவைப்படுகின்றன.

சின்னப் பெட்டி கடை வைத்திருப்பவர் ஒரு நாள் 14 மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்யணும். வெயில், மழை பாராது கடையைத் திறந்து வைக்கணும். பந்த் என்றால் கூட ஆறு மணிக்கு மேல் கடை திறக்கக் காத்திருக்கணும். விடுமுறை நாளெல்லாம் கிடையாது. உணவு இடைவேளைக்குக் கூடக் கடை மூட முடியாது. மூலையில் சாப்பிட உட்காருகையில் வாடிக்கையாளர் வந்தால் பொருள் தர எழுந்திருக்கணும். எல்லா வகை மனிதர்களையும் சமாளிக்கணும். போட்ட முதலை ஒவ்வொரு ரூபாயாக உட்கார்ந்து வேலை செய்து திரும்பப் பெறவேண்டும். இதையெல்லாம் செய்யத் தயாராக இருந்தால் தான் பெட்டிக்கடை வைப்பது பற்றி யோசிக்கணும்.

தொழில் ஆசை

நண்பர் கிளம்பும் போது சொன்னார். “இந்த வேலையில் நான் போட்ட உழைப்பைச் சொந்தத் தொழிலில் போட்டிருந்தால் எங்கோ போயிருப்பேன்!”

வேலையில் சலிப்பு வருகையில் நம்மில் பலர் ‘என்ன வேலை இது? இதுக்குச் சொந்தமாக நாமே ஏதாவது பண்ணினால் என்ன?” என்கிற எண்ணம் வருவது இயல்பு. இன்று பலர் நாற்பதுகளில் தனியாக ஆரம்பிக்கும் எண்ணத்தைக் கொண்டுள்ளனர். சிலர் வேலை செய்கையிலே தொழில் பண்ண முடியுமா என்றும் யோசிக்கின்றனர்.

வேலையா தொழிலா என்ற குழப்பத்தில் உள்ளவர்கள் பலர். அவர்கள் பிரச்சினை என்ன? வேலைக்கான ஸ்திரத்தன்மையும் வேண்டும். தொழிலில் உள்ள வளர்ச்சியும் வேண்டும். இந்த மாறுதலையும் உடனே செய்ய வேண்டும்.

வேறு வேறு திறன்கள்

நம்மைச் சுற்றி உள்ள வெற்றிக் கதைகளும் நம்மை ஒரே போல யோசிக்க வைக்கின்றன. ஃப்லிப்கார்ட் மூணு வருஷத்தில ஆயிரம் கோடிக்கு மேல போயிருச்சு. ஒரு ஆங்கிரி பேர்ட் கேம் உலகம் முழுதும் சக்கை போடு போடுகிறது. இப்படி வெற்றிக் கதைகள் மட்டும் தான் வெளிச்சத்திற்கு வருகின்றன. ஒரு விதத்தில் இது நம்பிக்கை செய்தியாகத் தெரிந்தாலும் வியாபார உலகின் உண்மைகளை இது உரைப்பதில்லை.

யார் முயற்சி செய்தாலும் வெல்லலாம் என்பது நல்ல எண்ணம் தான். ஆனால் அது எத்தகைய முயற்சி என்பது பற்றி விரிவான பார்வையை அது வளர்ப்பதில்லை.

வேலைத்திறன்களும் வியாபாரத் திறன்களும் வேறு வேறு. ஒரு நல்ல சமையல் கலைஞர் ஒரு லாபகரமான உணவுச் சாலையின் முதலாளியாக மாற முடியும் என்று அவசியமில்லை. பெரிய நிறுவனத்தில் நல்ல மேலாளராக உள்ளவர்கள் பலர் தங்கள் வியாபாரத்தில் நல்ல மேலாளர்களாகச் செயல்படுவதில்லை. காரணம் களங்கள் வேறு. பொறுப்புகள் வேறு.

வேறு வேறு விரக்திகள்

மாதம் பிறந்தால் சம்பளம். விடுமுறைகள் நாட்கள் அதிகம் வந்தால் ஓய்வு கிடைக்கும். நம் வேலையை மட்டும் சரிவரப் பார்த்தால் போதும். இது பணியாளர் மன நிலை. அவரே ஒரு முதலாளி ஆகிவிட்டால் மாதம் பிறந்தால் பணியாளர் சம்பளத்திற்கு வழி செய்ய வேண்டும். விடுமுறை நாட்கள் வந்தால் பணி நாட்கள் குறைகிறதே என்கிற கவலை. தன் வேலையே நிறுவனத்தின் எல்லா வேலைகளையும் பராமரிப்பது எனும் போது பொறுப்புகள் கூடும்.

பணியாளருக்கு ஒரு முதலாளியைத்தான் திருப்திபடுத்த வேண்டும். நீங்கள் ஒரு தொழி புரிபவர் என்றால் ஒவ்வொரு வாடிக்கையாளரும் முதலாளி தான். அதனால் பணியில் ஏற்படும் விரக்தியை விட வியாபாரத்தில் விரக்தி ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

தன்னம்பிக்கை முக்கியம்

வேலையில் சஞ்சலப்பட்டு வியாபாரத்தைச் சிந்திக்காதீர்கள். எது வந்தாலும் தாங்கும் உறுதிதான் வியாபாரத்தில் ஈடுபட முதல் தகுதி. ஆரம்ப காலத்தில் வருமான இழப்பைத் தாங்க வேண்டும். வேலையில் உள்ள சமூக அந்தஸ்தை தற்காலிகமாக இழக்க நேரலாம். உங்களைப் போல உங்கள் குடும்பமும் கொஞ்சம் சிரமங்களை அனுபவிக்க வேண்டி வரும். அவர்கள் அதற்குத் தயாராக இருக்கிறார்களா என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

திரும்ப வேலைக்கு வந்தால் சில வேலைகள் கிடைக்கக் கூடியவை. சில வேலைகளை விட்டால் மீண்டும் பெற முடியாது. அதனால் வியாபாரம் என்பது முயற்சி செய்து பார்க்கும் விஷயம் அல்ல. அது ஒரு வாழ்க்கை முடிவு.

தனியாகத் தொழில் செய்யத் துணிந்து ரிஸ்க் எடுக்கும் மன நிலை, எது வந்தாலும் உறுதியான மனம், மிகுந்த தன்னம்பிக்கை மிக மிக முக்கியம். தெரிந்த தொழில், அதில் ஓரளவு நேரடி அனுபவம், வழி காட்டத் தொழில் துறை ஆசான்கள், வங்கி போன்ற ஸ்திரமான அமைப்பில் குறைந்த வட்டியில் கடன், நீண்ட காலத் தொழில் திட்டம், அனுபவஸ்தர்களை மேலாளர்களாகக் கொள்ளல் போன்றவை உங்கள் தொழில் முயற்சிக்கு உதவும்.

இதற்கெல்லாம் தயார் என்பவர்கள் வேலையிலிருந்து சொந்தத் தொழில் செய்ய மெல்ல அடி மேல் அடி எடுத்து வையுங்கள்.

லட்சத்தில் ஒருவர்

ஒரு சினிமாப் பாட்டில் வியாபாரக் காந்தம் ஆகும் கனவைக் கலைத்து நிஜத்திற்கு வாருங்கள். லட்சக்கணக்கான உயிரணுக்கள் தோற்று ஒன்று ஜெயிப்பது போல லட்சத்தில் ஒன்றுதான் தொழில் வெற்றியும். அந்த ஒருவர் நீங்களாகவும் இருக்கலாம்.

தொழில் ஆசை இருந்தால் வேலையில் இருக்கும் போது கனவு காண்பதுடன் உங்களைத் தகுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

தொடர்புக்கு:gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x