

பத்தாம் வகுப்பு அரசுத் தேர்வுக்கு இன்னும் நான்கு மாதங்கள்கூட முழுதாக இல்லை. படித்து முடிக்காத பாடங்களை முடிக்க வேண்டும். படித்து முடித்த பாடங்களைத் திரும்பப் படித்துப் பார்க்க வேண்டும். நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல வேண்டும்.
இந்தப் பரபரப்பு எதுவும் இல்லாமல் சோபாவில் அமர்ந்திருக்கிறார் மோதீஸ்வர். இவரும் இவரது நண்பர்கள் இருவரும் இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்து விட்டு அமைதியான புன்னகையுடன் நம்மை வரவேற்கின்றனர்.
இந்தியர்கள் முதல் முறை
சென்னை டி.ஏ.வி பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் சிவ மாணிக்கம், அக்ஷயா மெட்ரிக் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மோதீஸ்வர், செயின்ட் மைக்கேல்ஸ் அகாடமியில் 9-ம் வகுப்பு படிக்கும் ஆரோக் ஜோ ஆகியோர் ரஷ்யாவில் நடைபெற்ற 62 நாடுகள் கலந்து கொண்ட சர்வதேச ரோபோடிக் போட்டியில் பங்கேற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.
சர்வதேச ரோபோடிக் போட்டி கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் விருதுபெறுவது இதுதான் முதல் முறை.
செவ்வாய்க்கான ரோபோ
செவ்வாய் கிரகத்தை ஆராய உதவும் ரோபோ ஒன்றை இந்த மூவர் குழு தயாரித்துள்ளது. இதற்கு மார்ஸ் ரோவர்-இன்பினிட்டி எம் என்று பெயரிட்டுள்ளனர். தற்போது செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்டுள்ள ரோபோக்களில் என்ன குறைகள் உள்ளன என்பதைக் கண்டறிந்து, அவற்றை மேம்படுத்தி இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.
“செவ்வாய் கிரகத்தில் உள்ள நீர், வாயு, திடப் பொருள்களைச் சேகரித்துப் பரிசோதனை செய்யும் இந்த ரோபோக்கள் சூரிய ஒளியால் மட்டும் இயக்கப்பட்டன. எனவே, இருளில் செயல்பட முடியாது. ஆனால் “எங்கள் ரோபோவில் கூடுதலாகச் சிறிய காற்றாலை பொருத்தப்பட்டுள்ளதால் சூரிய ஒளி இல்லாத இடங்களிலும் இயங்கும்” என்கிறார் சிவமாணிக்கம்.
“செவ்வாய் கிரகத்துக்கு நாசா அனுப்பிய ‘கியூரியாசிட்டி’ ரோபோ நகர முடியாமல் சிக்கிக் கொண்டது என்று கடந்த மாதம் வெளியான செய்தியைக் கேட்டவுடன் இவர்கள் பதறிப் போய்விட்டனர். உடனே இவர்கள் தங்களுடைய ரோபோவில் உள்ள சக்கரங்களைப் புதிய வடிவில் மாற்றியமைத்தனர் ” என்று கூறும்போது ஆரோக் ஜோவின் தந்தை சில்வஸ்டர் கண்களில் பெருமிதம் மின்னியது. அவர் மட்டுமல்ல, மூன்று குடும்பங்களுமே தற்போது ஆர்வத்துடன் ரோபோடிக்ஸ் பேசும் குடும்பமாக மாறிவிட்டனர்.
உலக அளவில் ரோபோடிக்ஸ் துறைக்கு முக்கியத்துவம் வளர்ந்து வருகிறது. ரஷ்யா போன்ற நாடுகளில் ரோபோடிக்ஸ், தனிப் படிப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் இதைப் பற்றிய கவனம் மிகவும் குறைவாக உள்ளது. இந்தச் சூழலில்தான் 2016-ம் ஆண்டுக்கான சர்வதேச ரோபோடிக்ஸ் போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளன.
சந்திரயான், மங்கள்யான் போன்ற சாதனைகளை விண்வெளி அறிவியலில் நாம் படைத்துவரும் சூழலில், அடுத்த தலைமுறைக்குப் புதிய தொழில்நுட்ப அறிவைத் திட்டமிட்டுக் கற்றுத் தருவதன் அவசியம் அதிகரித்திருக்கிறது. சாதிப்பதற்கு மாணவர்களும் தயாராகத்தான் இருக்கிறார்கள்.