

மத்திய ஆசியாவைச் சேர்ந்த அறிஞர் அல்பெருனி, இந்தியாவில் வாழ்ந்த காலத்தில் தான் பார்த்த மக்களின் பழக்கங்களையும், வாழ்க்கை முறையையும் பற்றி பலவிதமான தகவல்களைக் குறித்து வைத்துள்ளார். இந்தத் தகவல்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வட இந்தியாவைப் பற்றிய விவரங்களைத் தருகின்றன.
இந்தியர்கள் முதலில் கால்களைக் கழுவிக் கொண்ட பிறகே, முகத்தைச் சுத்தம் செய்து கொண்டனர். நகங்களை நீளமாக வளர்த்துக்கொண்டனர். தனியாக உட்கார்ந்து சாப்பிட்டனர். வெற்றிலை, பாக்கு போட்டனர். சாப்பிடுவதற்கு முன் மது அருந்தினர்.
வாழ்க்கை முறை
குதிரைகள் மீது சேணம் இன்றியே சவாரி செய்தனர். உடை வாளை வலது பக்கம் செருகிக்கொண்டனர். யார் வீட்டுக்குப் போனாலும் நேராக வீட்டுக்குள் சென்று விடுவார்கள். அதேநேரம், விடைபெற்ற பிறகே புறப்பட்டு வெளியே சென்றனர். பலரும் கூடி அமரும்போது சம்மணம் போட்டு உட்கார்ந்தனர். நான்கு பேர் சேர்ந்து சதுரங்கம் - ஆடு புலி ஆட்டம் போல ஒரு விளையாட்டை விளையாடினர்.
ஆடைகள் என்று பார்த்தால் பெரும்பாலோர் இடுப்பில் ஒரு துண்டையே கட்டியிருந்தனர். இன்னும் சிலர் அகலமான துணியைக் கால்கள்வரை தொங்கும்படி கட்டிக்கொண்டனர். மார்பு, கழுத்து, தலையைச் சுற்றி மேலாடை ஒன்றைப் போர்த்திக்கொண்டனர். ஆண்களும் பெண்களைப் போலவே காதணிகளும் வளையல்களும் அணிந்துகொண்டனர். பெண்கள் மட்டும் தோளில் இருந்து இடுப்புவரை குர்த்தாக்கள் எனப்படும் நீளம் குறைவான சட்டைகளை அணிந்தனர்.
சாதியும் உணவும்
அல்பெருனி காலத்தில் தீண்டப்படாதவர்களும் கீழ் சாதி என்று கருதப்பட்டவர்களும் இருந்தனர். அவர்கள் கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் வெளியே வாழ்ந்தனர். சூத்திரர்களும் தாழ்த்தப்பட்டவர்களாகவே கருதப்பட்டனர். அவர்களுள் செப்பிடு வித்தைக்காரர்கள், கூடை-கேடயம் செய்வோர், மீன் பிடிப்பவர்கள், விலங்கு - பறவைகளை வேட்டையாடும் வேட்டையாடிகள், சலவைத் தொழில் செய்வோர், தோல் தொழிலாளர்களான செம்மான்கள், நெசவாளர்கள் இருந்தனர். இவர்களைத் தவிர ஹதி, தோமா, சண்டாளர், படாத்தோ ஆகியோர் எந்தப் பிரிவிலும் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. அவர்கள் கிராமங்களைத் துப்புரவு செய்தனர். அது மட்டுமில்லாமல் தனித்தனியாகவும் வாழ்ந்துவந்தனர்.
சமூக ரீதியில் சாதிகள் ஒன்றுக்கொன்று தொடர்பற்று இருந்தன. ஒரே சாதிக்காரர்களும் கூடி உண்ணும்போது ஒவ்வொருவரும் மற்றொருவருக்கு இடையே பலகைத் தடுப்பு ஒன்றை வைத்துக்கொண்டனர். அல்லது இடையில் ஒரு கோட்டை போட்டுக்கொண்டனர். ஒவ்வொருவருக்கும் தனித்தனித் தட்டில் உணவு பரிமாறப்பட்டது.