Last Updated : 15 Apr, 2014 10:36 AM

 

Published : 15 Apr 2014 10:36 AM
Last Updated : 15 Apr 2014 10:36 AM

கோடையில் தொல்லை தரும் சிறுநீரகக் கற்கள்

தமிழகத்தில் வெயில் கொளுத்திவருகிறது. வெயில் காலத்தில் ஏற்படும் நோய்களுள் சிறுநீரகக் கற்கள் முக்கியமானவை. ‘உடலின் துப்புரவுத் தொழிலாளி' என்று அழைக்கப்படும் சிறுநீரகத்திலும், அதனுடன் அமைந்துள்ள சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப் பை, சிறுநீர்க் குழாய் ஆகியவற்றிலும் சிறுநீரகக் கற்கள் உருவாவது வாடிக்கை. மற்றப் பருவகாலங்களுடன் ஒப்பிடும்போது, கோடைக் காலத்தில் இவற்றின் தொல்லைகள் அதிகம். அதேவேளையில், கொஞ்சம் மனது வைத்து உணவு முறையைச் சரி செய்துகொண்டால், இந்தத் தொல்லைகளைக் குறைத்துக்கொள்ளவும் முடியும்.

சிறுநீரகக் கல்

நாம் குடிக்கும் தண்ணீரிலும் சாப்பிடும் உணவிலும் கால்சியம், பாஸ்பேட், ஆக்சலேட், யூரியா என்று பல தாது உப்புகள் உள்ளன. பொதுவாக உணவு செரிமானமான பிறகு, இவை எல்லாமே சிறுநீரில் வெளியேறிவிடும். சமயங்களில், இவற்றின் அளவு ரத்தத்தில் அதிகமாகும்போது, சிறுநீரில் வெளியேறுவதற்குச் சிரமப்படும். அப்போது சிறுநீரகம், சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப் பை ஆகிய இடங்களில் இந்த உப்புகள் படிகம்போல் படிந்து, கல் போலத் திரளும். சிறு கடுகு அளவில் ஆரம்பித்துப் பெரிய நெல்லிக்காய் அளவுக்கு வளர்ந்துவிடும். இதுதான் சிறுநீரகக் கல். இது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். வழக்கத்தில் பெண்களைவிட ஆண்களுக்கே இது அதிக அளவில் தோன்றுகிறது.

காரணம் என்ன ?

சிறுநீரகக் கல் தோன்றுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும். குறிப்பிட்டுச் சொல்வதானால், அதிகமாக வெயிலில் அலைவது / வேலை பார்ப்பது, போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, உடலில் ஏற்படும் நீர் வறட்சி, தவறான உணவு முறைகள், உப்பு, மசாலா மிகுந்த உணவு வகைகளை அடிக்கடி சாப்பிடுவது, சிறுநீரகப் பாதையில் நோய் தொற்றுவது, உணவிலும் குடிநீரிலும் கால்சியம், குளோரைடு மிகுதியாக இருப்பது, சிறுநீர் கழிப்பதைத் தள்ளிப்போடுவது, பேராதைராய்டு ஹார்மோன் மிகையாகச் சுரப்பது, புராஸ்டேட் சுரப்பி வீக்கம், உடல் பருமன், பரம்பரை போன்றவை சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகின்றன.

கற்கள் என்ன செய்யும் ?

விருந்துக்கு வந்த இடத்திலேயே திருடின கதையாக, சிறுநீரகப் பாதையில் உருவாகும் கல் முதலில் சிறுநீர் ஓட்டத்தைத் தடை செய்யும். இதன் விளைவாக, சிறுநீரகத்திலோ, சிறுநீர்ப் பையிலோ சிறுநீர் தேங்கும். இது சிறுநீரகத்துக்குப் பின்னழுத்தத்தைக் கொடுக்கும். இதனால் சிறுநீரகம் வீங்கும். இதை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால், சிறுநீரகம் பழுதாகி, பின்னர் செயலிழந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

அறிகுறிகள்

சிறுநீரகத்தில் கல் இருந்தால் ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் தோன்றாது. கல் நகரும்போதும், சிறுநீரகக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்போதும்தான் வலி உண்டாகும். முதுகில், விலா எலும்புகளுக்குக் கீழ் திடீரெனக் கடுமையாக வலி உண்டாகி, முன் வயிற்றுக்குப் பரவும். சிறுநீரகக் குழாயில் கல் இருந்தால், அடிவயிற்றில் வலி தோன்றி, பிறப்புறுப்புக்குப் பரவும். சிறுநீர்ப்பையில் கல் இருந்தால், தொப்புளுக்குக் கீழ் வலி தொடங்கி, சிறுநீர் வெளியேறும் புறவழித் துவாரம்வரை பரவும். இத்துடன், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலி, ரத்தம் கலந்து வருதல், குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகளும் சேர்ந்துகொள்ளலாம்.

பரிசோதனைகள்

சிறுநீரகக் கல்லைக் கண்டறிய வயிற்றை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சி.டி. ஸ்கேன் பரிசோதனைகளைச் செய்துகொண்டால் போதும். கல் எந்த இடத்தில் உள்ளது, அதன் அளவு என்ன, எந்த வகையான கல், சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதா எனப் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடியும். இதைக் கொண்டு கல்லுக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கலாம் என்பதையும் முடிவு செய்துவிடலாம்.

வகைகள்

கால்சியம் கற்கள், யூரிக் ஆசிட் கற்கள், சிஸ்டின் கற்கள், ஸ்டுரூவைட் கற்கள் என சிறுநீரகக் கற்கள் நான்கு வகைப்படும். இவற்றில் கால்சியம் கற்கள்தான் பெரும்பாலோருக்கு இருக்கும். இவை கால்சியம் ஆக்சலேட், கால்சியம் பாஸ்பேட்டாக இருக்கும். ஆக்சலேட் என்பது பசலைக் கீரை, முட்டைக்கோஸ், அவரை, தக்காளி, கோதுமை, முந்திரிப் பருப்பு, மீன், இறைச்சி, சாக்லேட் போன்ற பல உணவுகளில் அதிகமுள்ளது. இது தவிர நம் கல்லீரலும் ஆக்சலேட்டை உற்பத்தி செய்கிறது.

சில உணவு வகைகள் வளர்சிதை மாற்றம் அடையும்போது தோன்றும் பிரச்சினைகளாலும் ஆக்சலேட்டின் அளவு ரத்தத்தில் அதிகரிக்கும். அப்போது கால்சியம் ஆக்சலேட் கற்கள் உருவாகின்றன. பாஸ்பேட் தாது முழுப் பயறுகள், எண்ணெய் வித்துகள், கொட்டைகள், கேரட், பால் போன்ற பொருள்களில் உள்ளது.

கீல் வாதப் பிரச்சினை உள்ளவர்களுக்கு யூரிக் ஆசிட் கற்கள் உருவாகின்றன. மேலும் புரதச்சத்து அதிகமுள்ள உணவு வகைகளையும் இறைச்சி உணவு வகைகளையும் அதிக அளவில் சாப்பிடுவோருக்கு இந்த வகைக் கற்கள் ஏற்படுவதுண்டு.

சிஸ்டின் கற்கள் பரம்பரை வழியாக வருவது. இவர்களுடைய சிறுநீரகங்கள் சிஸ்டின் எனும் அமினோ அமிலத்தைச் சிறுநீரில் ஒழுகவிடும். அப்போது அது சிறுநீரகப் பாதையில் படிகங்களாகப் படிந்து கற்களாக உருவாகிவிடும். ஸ்டுரூவைட் கற்கள், சிறுநீரகத்தில் அடிக்கடி நோய்த்தொற்று ஏற்படுவதன் காரணமாகத் தோன்றுகின்றன.

இங்கு கற்களின் வகைகளைப் பற்றிப் பேசுவதற்குக் காரணம், ஒரு முறை கல் உருவாகி, சிகிச்சை பெற்றுச் சரியானவர்களுக்கும் மீண்டும் மீண்டும் கல் உருவாவதற்கு 50 சதவீத வாய்ப்பு உள்ளது. எனவே, ஒருமுறை அகற்றிய கல்லின் வகையை அறிந்து, அது உருவாகத் துணைபுரியும் உணவு வகைகளைத் தவிர்த்துவிட்டால், மீண்டும் கல் ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

சிகிச்சை முறைகள்

சுமார் 5 மி.மீ. வரை அளவுள்ள கற்களைச் சரியான உணவு, போதுமான தண்ணீர் குடிப்பது, மருந்து, மாத்திரைகள் மூலமே கரைத்துவிடலாம். 1.5 செ.மீ. வரை அளவுள்ள கற்களை எந்தவித அறுவை சிகிச்சையும் இல்லாமல், ‘ஷாக் வேவ் லித்தோட்ரிப்ஸி' எனும் முறையில் வெளியிலிருந்தே ஒலி அலைகளைச் செலுத்தி, கல்லின் மீது அதிர்வை ஏற்படுத்தி உடைத்துவிடலாம்.

சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப் பை, சிறுநீர்க் குழாய் ஆகியவற்றில் உள்ள கற்களை ‘யூரிட்ரோஸ்கோப்பி' எனும் முறையில் வளையும் தன்மையுள்ள குழாய் போன்ற ஒரு கருவியைச் சிறுநீர்ப் புறவழி வழியாக உள்ளே செலுத்திக் கற்களை நசுக்கியும் லேசர் கொண்டு உடைத்தும் எடுத்துவிடலாம். ஆனால், சிறுநீரகத்தில் உள்ள கற்களை இந்த முறையில் எடுக்க முடியாது. 2 செ.மீ.க்கும் அதிகமான அளவில் உள்ள கற்களை ‘நெப்ரோ லித்தாட்டமி' எனும் முறையில் முதுகில் சிறிய துளை போட்டு அறுவை சிகிச்சை செய்து அகற்றிவிடலாம்.

என்றாலும், மீண்டும் கல் உருவாவதைத் தடுக்கக் கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது மிக அவசியம்.

வெயிலில் அலையாதீர்கள் !

பெரும்பாலும் வெயிலில் அலையும்போதும் வேலை செய்யும்போதும் உடலில் வெயில் தோற்றுவிக்கும் நீர் வறட்சிதான் சிறுநீரகக் கற்கள் உருவாகத் துணைபுரிகிறது. எனவே, கோடையில் 2 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. அவசியம் செல்ல வேண்டுமென்றால் குடையை எடுத்துச் செல்லுங்கள். முடிந்தவரை நிழலில் செல்வது நல்லது.

வெயிலில் அதிக நேரம் பயணிக்க வேண்டியிருந்தால், கண்களுக்கு ‘சன் கிளாஸ்' அணிந்து கொள்ளலாம்

உப்பைக் குறைக்கவும் !

உணவில் உப்பைக் குறைக்க வேண்டும். ஒருவருக்குத் தினமும் 2.5 கிராம் உப்பு (சோடியம் குளோரைடு) போதும். சோடியம் அதிகமானால், அது சிறுநீரில் கால்சியத்தை அதிக அளவில் வெளியேற்றும். அப்போது கால்சியமானது ஆக்சலேட், பாஸ்பேட்டுடன் சேர்ந்து சிறுநீரகக் கற்களை உருவாக்கும். இதைத் தவிர்க்கவே உப்பைக் குறைக்க வேண்டும் என்று சொல்கிறோம். தவிர, பதப்படுத்தப்பட்ட உணவு, விரைவு உணவு, பேக்கிங் சோடா கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் போன்றவற்றில் உப்பு அதிகமாக இருக்கும். இவற்றைத் தவிர்ப்பது நல்லது.

எதைச் சாப்பிடக் கூடாது?

காபி, தேநீர், பிளாக் டீ, கோலிசோடா போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. குளிர் பானங்கள், இதர மென்பானங்கள், ஐஸ்கிரீம், சாக்லேட் ஆகவே ஆகாது. இவற்றில் பாஸ்பேட் மிகுந்துள்ளது. இதுபோல் உலர் பழங்கள், பாதாம்பருப்பு, வாதாம்பருப்பு, முந்திரிப்பருப்பு, பீட்ரூட், சோயாபீன்ஸ், சேனைக் கிழங்கு, பசலைக் கீரையைச் சாப்பிட வேண்டாம். இவற்றில் ஆக்சலேட் மிகுந்துள்ளது.

உணவில் காரம், புளி, மசாலாவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். கேழ்வரகு, கீரைகள், கருணைக் கிழங்கு, வெள்ளைப் பூண்டு, முள்ளங்கி, மீன், இறால், நண்டு, முட்டையின் வெள்ளைக் கரு, பால், பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகளான தயிர், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி, பால்கோவா, பால் அல்வா போன்ற உணவுகளைத் தவிருங்கள். இவற்றில் கால்சியம் அதிகம். இதுபோல், கால்சியம் மாத்திரைகளையும் சாப்பிடக் கூடாது. ஆட்டு இறைச்சி வேண்டவே வேண்டாம். இதில் உள்ள புரதமானது ரத்தத்தில் யூரிக் அமிலத்தை அதிகப்படுத்தும். சிட்ரேட் அளவை குறைக்கும். இந்த இரண்டுமே சிறுநீரகக் கற்களை உருவாக்கும். எனவேதான் இந்த எச்சரிக்கை!

தண்ணீர் அருந்துங்கள் !

வெப்பப் பிரதேசமான நம் நாட்டில் தினமும் மூன்றிலிருந்து ஐந்து லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம். (சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த ஆலோசனை பொருந்தாது. இவர்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் அளவுக்குத் தண்ணீர் குடித்தால் போதும்). பாட்டில் மற்றும் பாக்கெட் தண்ணீரைவிட கொதிக்கக் காய்ச்சி, ஆறவைத்த தண்ணீர்தான் சுகாதாரமானது. அதிக அளவில் திரவ உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக அளவில் நீர் அருந்துவதும் திரவ உணவை அதிகப்படுத்துவதும் சிறுநீரகக் கல்லை வெளியேற்றும் இயற்கையான செயல்பாட்டை ஊக்குவிக்கின்றன.

எந்த உணவைச் சாப்பிட வேண்டும்?

சிறுநீரகக் கல் வந்துவிட்டால் திரவ உணவுகளான இளநீர், சிட்ரஸ் பழச்சாறுகள், வாழைத்தண்டுச் சாறு, பார்லி தண்ணீர், நீர்மோர் போன்றவற்றை அதிக அளவில் அருந்த வேண்டும். நார்ச்சத்து மிகுந்த கம்பு, சோளம், குதிரைவாலி, தினை, சாமை போன்ற சிறுதானிய உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யா, பேரீச்சை, இலந்தைப்பழம், சீத்தாப்பழம், வெள்ளரிக்காய், தர்ப்பூசணி, கிர்ணி, அன்னாசி போன்ற பழங்களையும், சுரைக்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய், சௌசௌ போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகளையும் முடக்கத்தான் கீரையையும் அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை சிறுநீரின் அமிலத் தன்மையைக் குறைக்கும். சிறுநீர்க் கழிப்பை அதிகப்படுத்தும். அப்போது சிறிய அளவில் உள்ள கற்கள் கரைந்து வெளியேறிவிடும், கல் உருவாவதும் தடுக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x