Last Updated : 23 Dec, 2014 12:10 PM

 

Published : 23 Dec 2014 12:10 PM
Last Updated : 23 Dec 2014 12:10 PM

நிறுவனத்துக்காகப் பொய் சொல்வீர்களா?

சைகோமெட்ரிக் தேர்வு எழுதிவிட்டு வந்த ஓர் இளைஞருக்குச் சில குழப்பங்கள். என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

“பொய் சொல்பவர்களை வேலைக்குச் சேர்ப்பாங்களா?’’ என்றார்.

“நானாக இருந்தால் சேர்க்க மாட்டேன்’’ என்றேன்.

“நேற்று எழுதின தேர்விலே ஒரு கேள்வி கேட்டிருந்தாங்க’’ என்று நிறுத்தினார்.

“நீங்கள் பொய் சொல்வதுண்டா’’ என்ற கேள்வியா? அதற்கு ‘’இல்லை’’ என்று இவர் பதிலளித்திருந்தால் அது நம்பப்படுமா? அது தவறுதான் (பொய் சொல்லாதது தவறல்ல, பொய்யே சொன்னதில்லை என்று சொல்வது) என்பதை நிரூபிக்கும்படி வேறு ஏதாவது குறுக்குக் கேள்வி கேட்கப்பட்டிருக்குமே எனப் பலவாறாக நான் யோசித்தேன்.

நிறுவனத்துக்காகப் பொய்

இளைஞர் தொடர்ந்தார். அந்தத் தேர்வில் கேட்கப்பட்டிருந்த கேள்வி இதுதான்.

“நிறுவனத்துக்காக நீங்கள் பொய் சொல்வீர்களா?’’

“மார்க்கெட்டிங் மேனேஜருக்கு ஆள் எடுக்கறாங்க. மார்க்கெட்டிங், சேல்ஸ் இதிலே எல்லாம் பொய் சொல்லாமல் இருக்க முடியுமா? அப்படியிருக்கும்போது நான் என்ன பதிலை எழுதியிருக்க வேண்டும்? பொய் சொல்வேன் என்றா?

பொய் சொல்ல மாட்டேன் என்றா? தனிப்பட்ட முறையில் பொய் சொல்ல மாட்டேன், ஆனால் நிறுவனத்துக்காக என்றால் பொய் சொல்வேன் என்றா?’’ என்றார்.

பேச்சின் கடைசிப் பகுதியைச் சொன்னபோது அவர் முகத்தில் தெரிந்த ஒளி மூன்றாவது பதிலைத்தான் எழுதிவிட்டு வந்திருக்கிறார் என்பதை உணர்த்தியது.

பதில்கள் பலவிதம்

“தனிப்பட்ட எனது வாழ்வில் சொந்த விவகாரங்களுக்காகப் பொய் சொல்ல மாட்டேன். ஆனால் நிறுவனத்துக்குத் தேவை என்றால் பொய் சொல்வேன்’’ என்று ஒருவன் கூறினால் அதை எப்படி எடுத்துக் கொள்வது? ‘இதுவே ஒரு பொய்’ என்றா? அல்லது ஊதியம் தந்தால் பொய் சொல்லத் தயார் என்றா?

சங்கடமான கேள்விதான். ஆனால் இதை வேறுவிதமான பதில்களின் மூலம் எதிர்கொள்ள முடியும். இதுதான் பதில் என்பதில்லை. ஆனால் கூறியிருக்கக் கூடிய சில விடைகள் கீழே உள்ளன.

“அது நானும் நிறுவனமும் எந்த அளவுக்கு ஒருவரையொருவர் சார்ந்திருக் கிறோம் என்பதைப் பொறுத்தது’’.

“அந்தப் பொய் நிறுவனத்துக்கு நன்மையாக இருந்து, வேறு யாருக்கும் பாதிப்பு உண்டாக்காமல் இருக்குமென்றால் பொய் சொல்வேன்’’.

“எந்தப் பொய்யும் ஒரு நாள் வெளிவந்து விடும். அந்தச் சூழலை இன்றே சந்திக்கலாமே? பொய் சொல்ல மாட்டேன்’’.

“இது தொடர்பாக நிறுவனத்தின் சீனியர்களைக் கேட்டு அவர்கள் சொல்படி நடந்து கொள்வேன்’’.

ஒவ்வொரு பதிலையும் மனதில் சீர்தூக்கிப் பாருங்கள். மொட்டையாகப் ‘பொய் சொல்வேன்’ அல்லது “பொய் சொல்ல மாட்டேன்’’ என்பதைவிட இவை மேலும் உருப்படியான பதில்களாக உள்ளன என்பது புரியும்.

இப்படித்தான் சில கேள்விகளுக்குப் பதில்களைத் தேர்ந்தெடுப்பதில் சிரமங்கள் உண்டாகும்.

நவீனப் பிரச்சினை

பல நிறுவனங்கள் எதிர்கொள்ளும் ஒரு நவீனப் பிரச்சினை இது. வேலைக்கு ஆள் எடுப்பார்கள். மாதக் கணக்கில் உரிய பயிற்சி கொடுப்பார்கள். அதற்கு லட்சக்கணக்கில் செலவாகும். பயிற்சிக் காலம் முடிந்த பிறகு கொஞ்சம் அதிகச் சம்பளம் கிடைக்கிறது என்று வேறு ஏதாவது நிறுவனத்துக்குச் சென்று விடுவார்கள். அவர்களைப் பயிற்றுவிக்க நிறுவனம் மேற்கொண்ட உழைப்பும், செலவும் வீணாகிவிடும். ஏதோ ஒரு சிலர் இப்படி வேலையை மாற்றிக் கொண்டால் பிரச்சினை இல்லை. கொத்துக் கொத்தாக இடம் பெயர்ந்தால்?

இதை அடிப்படையாகக் கொண்டு வேலைக்கான ஒரு நுழைவுத் தேர்வில் இதைக் கேட்டிருந்தார்கள். மனித வளத்துறை உதவி மேலாளருக்கான தேர்வு அது.

(மேலே உள்ள பிரச்சினையைக் கொடுத்துவிட்டு) இந்த நிலையைத் தவிர்க்க ஒரு மனிதவளத்துறை மேலாளராக நீங்கள் என்ன செய்வீர்கள்?

அ) இதற்கெல்லாம் என்ன செய்ய முடியும்? காலியாகும் பதவிகளுக்கேற்ப புதிதாக வேறு பலரை வேலைக்குச் சேர்க்க வேண்டியதுதான்.

ஆ) எவ்வளவு பேர் தேவையோ அதைவிட அதிக அளவில் வேலைக்கு எடுத்துப் பயிற்சி கொடுக்க வேண்டும்.

ஒரு பகுதியினர் போய்விட்டாலும் மீதிப் பேரை வைத்துக் கொண்டு பிரச்சினை இல்லாமல் நிறுவனத்தை நடத்தலாம்.

இ) எதனால் அப்படிப் போகிறார் கள் என்பதற்கான உண்மையானக் காரணத்தைக் கண்டுபிடிப்பேன்.

ஈ) சம்பளத்தை அதிகப்படுத்தினால் மாற்று நிறுவனங்களுக்குப் போக மாட்டார்கள்.

ஒவ்வொரு விடையிலும் தர்க்கரீதியான ஓர் அணுகுமுறை இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் காரணத்தை அலசி ஆராய்ந்து கண்டுபிடிப்பது ஒரு தொலைநோக்குப் பார்வை. வசதியானப் பணிச் சூழல் இல்லாதது, மனிதாபிமானமில்லாத மேலதிகாரிகள் போன்ற சூழல்கள் இருந்தால் வேறு என்ன வசதிகளைச் செய்து கொடுத்தாலும், எண்ணிக்கையில் அதிகம் பேரை வேலைக்குச் சேர்த்தாலும் அவை நிலையானத் தீர்வுகளாக இருக்காது.

இவற்றை நீங்கள் வெளிப்படுத்த முடியும் அளவுக்கு இது Open ended கேள்வியாக இருக்குமானால் உங்கள் விடை சிறப்பானதாகக் கருதப்பட வாய்ப்பு மிக அதிகம்.

தொடர்புக்கு:

aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x