அரசுப் பணியும் துறைத் தேர்வுகளும்

அரசுப் பணியும் துறைத் தேர்வுகளும்
Updated on
1 min read

அரசுப் பணியில் சேர்ந்த ஒருவர் தெரிந்துகொள்ள வேண்டியதைத் தெரிந்து கொண்டாரா என்பதை அறியத்தான் துறைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

திறனாளியா என அறிவது போட்டித் தேர்வு. அதில் தேர்வு செய்யப்பட்டவரின் திறன் நிலையை அறிதல் துறைத் தேர்வு. துறைத் தேர்வுகள் நான்கு வகைப்படும்.

1. நியமிக்கப்பட்ட பணியில் நீடிக்கத் தேவையான தேர்வு (தனிப்பட்ட ஒரு சிலருக்கு மட்டும்)

2. தகுதிகாண் பருவம் நிறைவு செய்ய அவசியமான தேர்வு (ஒரு சில பதவிகளுக்கு மட்டும்)

3. ஊதிய உயர்வுக்கு இன்றியமையாத தேர்வு

4. பதவி உயர்வுக்கு இன்றியமையாத தேர்வு

என அவற்றை நான்காகப் பிரிக்கலாம்.

முதலாவது தேர்வில் முக்கியமானது தமிழ்நாட்டில் அரசுப்பணி செய்வதற்குத் தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்பது. பள்ளி இறுதி தேர்வைத் தமிழ்வழியில் பயின்று தேர்வு எழுதியிருக்க வேண்டும்.அல்லது தமிழை ஒரு பாடமொழியாக எடுத்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழ் தெரியாதவரும் அரசுப் பணியில் சேரலாம். ஆனால் அவர் அதிகபட்சமாக நான்காண்டுகளுக்குள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்துகிற இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இல்லையென்றால் பணியில் நீடிக்க முடியாது.

இரண்டாவது தேர்வில்

கருவூலத் துறையில் கணக்கர் உள்ளிட்ட சில பதவிகளுக்கு நேரடியாக நியமனம் செய்யப்பட்ட ஒருவர் பணியில் சேர்ந்த இரண்டு ஆண்டுகளுக்குள் சார்நிலை அலுவலர்களுக்கான கணக்குத் தேர்வு அரசு அலுவலக நடைமுறை நூல் தேர்வு எனும் இரண்டு தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். அதிகபட்சமாகக் காலக்கெடு ஐந்தாண்டுகளாக நீட்டிக்கப்படும்.

மூன்றாவதான, ஊதிய உயர்வுக்கான தேர்வில் பலவகை உள்ளன. நான்காவதான பதவி உயர்வுக்கான தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றுத் தயாராக இருக்க வேண்டும். பதவி உயர்வு வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்தால் நம்மைவிட்டுப் பதவி உயர்வு போய்விடும்.

ஊழியர் நலன், நிர்வாக நடைமுறை தொடர்பான விதிநூல்களே இந்தத் தேர்வுகளுக்கான பாடநூல்களாக இருக்கின்றன. ஒரே ஒரு விதி நூலைப் பாடமாக வைத்து நடக்கும் தேர்வும் உண்டு. தமிழ் அல்லது ஆங்கிலம் அல்லது இரண்டும் கலந்து தேர்வு எழுதலாம்.

58 தேர்வுகள் புத்தகம் இல்லாமலும் 88 தேர்வுகள் புத்தகத்துடனும் எழுத வேண்டியவை. புத்தகம் இருந்தாலும் எந்தப் புத்தகத்தில் எந்த விதி எங்கு உள்ளது என அறியவில்லை என்றால் தேர்வில் தேற முடியாது. அரசுப் பணியில் இல்லாதவரும் இந்தத் தேர்வுகளை எழுதலாம்.பணியில் சேர்ந்தபிறகு பயன்படுத்திக்கொள்ளலாம்.

- ப.முகைதீக் சேக்தாவூது,
உதவிக் கருவூல அலுவலர் (ஓய்வு)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in