Published : 30 Dec 2014 01:24 PM
Last Updated : 30 Dec 2014 01:24 PM

இயல்பாய் வெல்லலாம் இயற்பியலை

பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி மேற்படிப்புகளுக்கு அவசியமான பாடங்களில், இயற்பியலுக்குத் தனித் தயாரிப்பு செய்வது நல்லது. பெரும்பாலான மாணவர்கள் சிறு தவறுகள் மூலமே பெருமளவில் மதிப்பெண்களை இழக்கலாம் என்பதால் பதற்றத்துடனே இயற்பியலுக்குத் தயாராவார்கள்.

காரணம் பாடங்கள் ஒவ்வொன்றும் மற்றொன்றுடன் தொடர்புடையதாக இருக்கும். ஏதேனும் ஒரு பாடத்தில் தயாரிப்பு பிசகினால், மற்றப் பாடங்களிலும் அது எதிரொலிக்கும். இதனால் மனப்பாடம் செய்ய முயல்வார்கள். அதுவும் கைகொடுக்காது. இது மாணவர்களை மன அழுத்தத்தில் தள்ளும். இதைத் தவிர்க்க, வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்தும்போதே கூர்ந்து கவனித்து, சந்தேகங்களைப் போக்கிப் படிக்க வேண்டும். செண்டம் கனவில் இருப்பவர்களுக்கு இது மிக அவசியம்.

இயற்பியலில் மதிப்பெண்கள் பெற, நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் எஸ்.கே.வி. கல்வி நிறுவனங்களின் இயற்பியல் துறை இயக்குநர்களான டி.ஏ.அன்பழகன், ஆர்.வெங்கடேசன் வழிகாட்டுகிறார்கள்.

1 மார்க் வினாக்கள்

1 மார்க் வினாக்கள் மொத்தம் 30 உள்ளன. அவற்றில், பாடப்பகுதியில் உள்ள வினாக்களில் இருந்து எளிதானவையாக 14 வரும். அதே பகுதியிலிருந்து சற்றே மாற்றத்துடன் 2 வினாக்கள் கேட்கப்படும். 14 வினாக்கள் பாடப்பகுதியின் உள்பகுதியிலிருந்து வரும். இந்த 14- ல் 2 வினாக்கள் மாணவர்களின் புரிந்துகொள்ளும் திறனைச் சோதிக்கும்படியாக, ஆழமான வினாக்களாக இடம்பெறும்.

1 மார்க் வினாக்களில் கணக்கு தொடர்பானவை 5 வரும். பாடத்தின் கணக்குகளில் ஒரு சிலவற்றின் விபரங்களைச் சற்றே மாற்றிப்போட்டு வினாத்தாளில் கேட்கும்போது, கவனக்குறைவால் தவறு வரலாம். அதேபோல விடைக்கான அலகுகளைக் குறிப்பதிலும் தவறுகள் வரலாம். இவற்றை மனதில் கொண்டு விடையளிக்க வேண்டும்.

3 மார்க் வினாக்கள்

குறைவாக எழுதி அதிக மதிப்பெண்கள் அள்ளும் பகுதி இது. ஆனால் மாணவர்கள் குறைவான முக்கியத்துவம் அளிப்பதால் மதிப்பெண் இழப்பும் இதில்தான் நேர்கிறது. 20 வினாக்களில் 15 - க்கு விடையளிக்க வேண்டும். வரையறை, விதிகள், பண்புகள் ரீதியிலான கேள்விகளே அதிகம் இடம்பெறும். புத்தகத்திலிருப்பதை வார்த்தை மாற்றாது ஒருசில வரிகளில் எளிதாக விடையளிக்கக்கூடியவை இவை.

ஒவ்வொரு கேள்வியையும் மனதில் இருத்திக்கொள்ளவும், ஒரே மாதிரியான கேள்விகளை வித்தியாசப்படுத்திக் கொள்வதற்கும் ஷார்ட்கட் உபாயம் கைகொடுக்கும். விளையாட்டு போல அதைப் பின்பற்றலாம். ஒவ்வொரு பாடத்திலிருந்து அதிகபட்சம் 25 மூன்று மார்க் கேள்விகளைப் பட்டியலிட்டு, அவற்றைப் படித்து எழுதிப் பார்க்கலாம்.

5 மார்க் கட்டாய வினா

5 மார்க் வினாக்களில் 1 கட்டாய வினா இடம்பெறும். இது கணக்கு கேள்வியாக அமையும். ஏதேனும் ஒரு பாணியிலான கேள்வியில், தீர்க்கப்பட்ட கணக்குகளில் இருந்து ஒன்றும், பயிற்சி கணக்குகளில் இருந்து ஒன்றும் கேட்கப்பட்டிருக்கும். இரண்டுமே ஒரே பாடத்திலிருந்தும் கேட்கப்படும்.

ஏனைய 11-ல் இருந்து 6 வினாக்களுக்கு சாய்ஸில் பதிலளிப்பதாக இருக்கும்.

டிரைவேஷன் எழுதுவதில் தொடக்கத் தடுமாற்றம் மற்றும் பிற பதில்களுடன் குழப்பம் எழலாம் என்பதால், முதல் வரியை எளிதில் நினைவுபடுத்திக் கொள்ளும் வழிமுறைகளைச் சுயமாகப் பழகிக்கொள்வது நல்லது.

10 மார்க் வினாக்கள்

எட்டில் 4 என தாராள சாய்ஸ் வினாக்களாக 10 மார்க் கேள்விகள் அமையும். பொதுவாக நூற்றுக்கு நூறு பெற விரும்புபவர்கள் புத்தகத்தில் உள்ளது போலவே எழுதுவார்கள். சொந்தமாக வார்த்தைகளைப் பிரயோகிப்பதாக இருந்தால், கருத்து மற்றும் பொருள் பிறழாது எழுதவேண்டும்.

முக்கிய பாடங்கள்

மிச்சமிருக்கும் மாதங்களில் தேர்வுக்குத் தயாராக விரும்பும் சராசரி மாணவர்கள் 1,4,6,8 ஆகிய பாடங்களில் முதன்மையாகத் தயாராக வேண்டும். 150க்கு 130 நிச்சய இலக்கு என்பவர்கள் 1,2,4,6,7,8 ஆகிய பாடங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். செண்டம் மாணவர்கள் 10 பாடங்களிலும் தயாராவதுடன் 3,5,9,10 ஆகிய பாடங்களில், பாடங்களின் உள்ளிருந்தும் தயாரிப்பை மேற்கொள்ள வேண்டும்.

குழப்பும் வினாக்கள்

படம், அதற்கான விளக்கம், டிரைவேஷன்ஸ் மற்றும் தொடர்புடைய கணக்கு ஆகியவற்றில் ஒன்றிரண்டு மட்டுமே ஏனைய தொழிற்கல்வித் தயாரிப்புக்கான பாடங்களில் வரும். ஆனால், இயற்பியலில் பெரும்பாலான கேள்விகளில் இவையனைத்துமே இடம்பெறும் என்பதால் கவனமாகத் தயாரிப்பை மேற்கொள்ள வேண்டும். அதிலும் சிறு வித்தியாசத்தை மட்டுமே உள்ளடக்கிய ஒரே மாதிரியான கேள்விகளுக்கு நன்றாகப் படிக்கும் மாணவர்களும் மாற்றி எழுதிவிடுவது உண்டு.

அது போலவே, பாடநூலில் உள்ள கேள்வியைச் சற்றே மாற்றிப்போட்டுத் தேர்வு வினாக்கள் இடம் பெறலாம். இதில் கவனம் சிதறுவதைத் தவிர்க்க, பாடங்களைப் படிக்கும்போதே அம்மாதிரியான கேள்வி பதில்களைத் தொகுத்துக்கொண்டு தயாராவது சிறப்பான வியூகமாகும். ஒன்றுக்கு 2 முறை வாசித்து உள்வாங்கிக்கொண்டு விடையளிப்பதன் மூலம் குழப்பங்களைத் தவிர்க்கலாம்.

அதேபோல 3 மற்றும் 5 மதிப்பெண் களில் பல்வேறு பாடங்களின் வெவ்வேறு கேள்விகளில் வினாத்தாளை வாசிக்கையில் மாணவர்கள் குழம்பி விடுவார்கள். இந்தப் பிசகுகளைத் தவிர்க்க, இது போன்ற வினா விடைகளை ஆசிரியர் உதவியுடன் ஒன்றாகத் தொகுத்து, அவற்றுக்கிடையேயான வேறுபாடுகளை உணர்ந்து பாடத் தயாரிப்பை மேற்கொண்டால் போதும்.

கணக்கில் பிணக்கா?

கணக்குக் கேள்வியில் பிணக்கு தேவையில்லை. இதில் மதிப்பெண் குறைய வாய்ப்பில்லை என்பதுடன், பிற கேள்விகளைவிட குறைவான நேரத்தில் விடையளிக்கலாம் என்பதால் சாய்ஸ் கேள்விகளில் இவற்றுக்கே முன்னுரிமை வழங்கலாம்.

கேள்வியில் கொடுக்கப்பட்ட விபரங்களை எடுத்து எழுதுதல், பார்முலா எழுதி அவற்றுக்கான மதிப்புகளைப் பிரதியிடுதல், படி நிலைப்படி தீர்த்தல், +, - குறிகள், அலகுகள் ஆகியவற்றைக் கவனமாக இடுதல் ஆகியவற்றை முறைப்படி எழுதி 5 மார்க் கணக்கு வினாக்களைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

படத்துக்கும் முக்கிய இடம்

படம் வரையப் பேனாவைத் தவிர்த்துவிட்டுப் பென்சில் உபயோகிப்பது நல்லது. மேலும் ஓரத்தைத் தவிர்த்துவிட்டுப் பக்கத்தின் மையத்தில் வரைவது எடுப்பாக அமையும். படத்தைப் பார்த்து விளக்கம் எழுதுவதற்கு வசதியாக, பக்கத்தின் கடைசியில் படம் வரைவதைத் தவிர்க்கவும். படத்தில் அம்புக்குறிகளைக் குறிப்பது, +,- குறி களை இடுவதில் கவனம் அவசியம்.

10 மார்க் விடையளிப்பில் 2 முதல் 4 மார்க் படத்துக்குச் செல்லும். படி நிலைக்கூறுகளை எழுதும்போது மனப்பாடம் செய்து எழுதுவதைவிட சாராம்சத்தைப் புரிந்து எழுதுவது, பதிலைச் சிறப்பாகக் காட்டும்.

தடுமாற்றங்களைத் தவிர்க்க

நேர மேலாண்மை இயற்பியல் தேர்வில் நிரம்பவே கைகொடுக்கும். 1 மார்க் பகுதிக்கு 15 முதல் 20 நிமிடங்கள், 3 மார்க் பகுதிக்கு 45 நிமிடங்கள், 5 மார்க்கில் 50 நிமிடங்கள், 10 மார்க்கில் ஒரு கேள்விக்கு 12 நிமிடம் என அப்பகுதிக்கு மொத்தமாக 50 நிமிடங்கள். இவற்றோடு திருப்புதலுக்கு 15 நிமிடங்கள் ஒதுக்கிப் பயிற்சித் தேர்வுகளில் பழக வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x