Published : 27 Dec 2014 02:51 PM
Last Updated : 27 Dec 2014 02:51 PM

கனவு இல்லம் நனவாகும் நேரம்

ஒவ்வொரு மனிதனுக்கும் உண்ண உணவு, உடுக்க உடை, தங்க உறைவிடம் ஆகியவை தான் அத்தியாவசியத் தேவைகள். இவை ஒவ்வொருவரது வசதிக்கும், வாய்ப்புக்கும், அந்தஸ்துக்கும் ஏற்றவாறு மாறுபடுகிறது என்றாலும், இவற்றின் தேவை மனிதகுலம் உள்ளவரை நிலைத்திருக்கும் என்பது தான் நிதர்சனமான உண்மை.

அந்த வகையில் ஒவ்வொரு குடும்பமும் தனக்கென ஓர் உறைவிடத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் கவனம் செலுத்திவருகிறது. ஒவ்வொருவரது கனவு இல்லத்தை நனவாக்கும் வகையில் இன்று ஏராளமான கட்டுமான நிறுவனங்கள் வீடுகளைக் கட்டி வருகின்றன. அது அடுக்குமாடி குடியிருப்புகளாகவோ, தனி வீடுகளாகவோ இருக்கின்றன. இருப்பினும் மக்களின் தேவைக்கும் கட்டப்படும் வீடுகளுக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி இருக்கிறது.

மக்களின் ஆனாலும் எதிர்பார்ப்பையும், அவர்களது ஆசையையும் பூர்த்தி செய்யும் வகையில் கட்டுமானத் தொழில் திருச்சி மாநகரத்தில் குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றுள்ளது என்பதை மறுக்க முடியாது. பல்வேறு சிறப்புகளைக் கொண்ட திருச்சியில் கட்டுமானத்துறை ஆண்டுதோறும் பெரும் வளர்ச்சி பெற்று வருகிறது.

திருச்சியில் 1986-ம் ஆண்டுகளில் தொடங்கப்பட்ட ‘அடுக்குமாடி குடியிருப்புகள்’ கலாச்சாரம் 90-களில் வளர்ச்சியடைத் தொடங்கியது. இருப்பினும் கடந்த 10 ஆண்டுகளில் மாநகர் முழுவதும் மலைக்கோட்டைக்கு நிகராக வண்ண, வண்ண வானுயர்ந்த கான்கிரீட் கட்டிடங்கள் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கின்றன.

திருச்சி மாநகரைப் பொறுத்தவரையில் தஞ்சாவூர் சாலை, சென்னை சாலை, வயலூர் சாலை, மதுரை சாலை, திண்டுக்கல் சாலை என அனைத்துத் திசைகளிலும் அடுக்குமாடி வீடுகளின் வளர்ச்சி அதிக அளவில் உள்ளன.

குறிப்பாக திருச்சி மாநகருக்குள் ஸ்ரீரங்கம், தில்லை நகர், கன்டோன்மென்ட், கிராப்பட்டி, கருமண்டபம், உறையூர், வயலூர் சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் இந்தக் குடியிருப்புகள் அதிக அளவில் வளர்ந்து வருகின்றன. மாநகருக்குள் வசிக்க மக்கள் அதிகம் விரும்புவதால், இந்தப் பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.

திருச்சியில் ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற மக்களின் கனவு இல்லத்தை நனவாக்க ஏதுவாக ஃபேர்புரோ 2015 என்ற வீடுகள் விற்பனைக் கண்காட்சியை கிரெடாய் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து ஃபேர்புரோ 2015 கண்காட்சி அமைப்புக் குழுத் தலைவர் எம். ஆனந்த் கூறியது: திருச்சி கிரெடாய் அமைப்பு சார்பில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கண்காட்சியை 3,000 பேர் வந்து பார்த்துச் சென்றனர். இதன் மூலம் குறிப்பிடத்தக்க அளவில் வீடுகள் விற்பனையும் நடைபெற்றது.

தற்போது, இரண்டாவது ஆண்டாக நடத்தப்பட உள்ளது. திருச்சி சங்கம் ஹோட்டலில் வரும் ஜனவரி மாதம் 2, 3, 4 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியில் பிரபலமான 31 கட்டுமான நிறுவனங்கள் சார்பில் நூறுக்கும் மேற்பட்ட இடங்களில் கட்டப்பட்டுள்ள, கட்டப்பட்டு வரும் வீடுகள் அந்தந்த கட்டுநர்களால் காட்சிப்படுத்தும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சியில் கிரெடாய் அமைப்பின் உறுப்பினர்களாக உள்ள கட்டுநர்களே பங்கேற்கின்றனர்.

வீடுகள் வாங்க விரும்பும் மக்கள் பல இடங்களுக்குச் செல்ல வேண்டியதைத் தவிர்க்கும் நோக்கில் ஒரே இடத்தில் பல்வேறு கட்டுநர்களின் குடியிருப்புகளைப் பார்வையிட்டு தேர்ந்தெடுக்க வசதியாக இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியை ஆண்டுதோறும் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

கண்காட்சி அமைப்புக் குழுவின் இணைத் தலைவர் வி. கோபிநாதன் கூறியது: இந்தக் கண்காட்சியில் பங்கேற்கும் அனைத்துக் குடியிருப்புகளும் வங்கிகள் மூலமாக ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டவை. கண்காட்சியில் 7 வங்கிகளும் பங்கேற்கின்றன. வீடுகள் வாங்குவோருக்குத் தேவையான வங்கிக் கடனுதவியை அதிகாரிகள் பைசல் செய்வார்கள்.

இந்தக் கண்காட்சியில் வீடுகளின் அளவு, அமைந்துள்ள இடம், அதிலுள்ள உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றுக்குத் தகுந்தவாறு குறைந்தபட்சம் ரூ.25 லட்சம் முதல் வீடுகள் விற்பனைக்கு உள்ளன என்றார்.

கிரெடாய் திருச்சி தலைவர் டி.வி. முரளி கூறியது : தமிழகத்தில் சென்னை, கோவைக்கு அடுத்து கட்டுமானத் தொழிலில் திருச்சி குறிப்பிடத்தக்க கேந்திரமாகத் திகழ்கிறது. தமிழகத்தின் மத்திய பகுதியாக திருச்சி அமைந்துள்ளதும், இங்கு பெரிய அளவிலான போக்குவரத்து நெரிசல் இல்லாததும், சுகாதாரமான சுற்றுச்சூழல், தடையில்லாத நிலத்தடி நீராதாரம், சுற்றிலும் மிகச் சிறந்த கல்வி நிலையங்கள், சீரான தொழில் வளர்ச்சி, வேளாண் தொழில், போக்குவரத்துக்கு விமானம் மற்றும் ரயில், பேருந்து வசதிகள் அனைத்தும் உள்ளதுமே இதற்கான முக்கியக் காரணங்கள் என்றார்.

கிரெடாய் திருச்சி செயலர் எம். நூர்முகம்மது கூறியது : கட்டுமானத் தொழிலில் கடந்த ஆண்டில் நிலவிய சற்று மந்தமான நிலை மாறியுள்ளது. கட்டுநர்களுக்கு வீடுகள் தொடர்பாக மக்களிடமிருந்து அழைப்புகள் வருகின்றன. இதற்கு மத்தியில் நிலையான ஆட்சி அமைந்துள்ளதும், பணப்புழக்கம் அதிகரித்துள்ளதும் காரணமாகும்.

கம்பிகள், சிமென்ட், கட்டுமானத் தொழிலாளர்களின் கூலி ஆகியவை உயர்ந்து கொண்டே வருவதால் தற்போது வாங்கும் வீட்டின் விலையைவிட ஓராண்டு கழித்து வாங்கினால் சுமார் 20 சதவீதம் அதிகமாக கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். வீடுகள் வாங்க இது நல்ல தருணம் என்றார் அவர்.

ஏன் கிரெடாய்?

கிரெடாய் தமிழ்நாடு செயலர் வி. கெளதமன் கூறியது:

கிரெடாய் அமைப்பில், முன் அனுபவம் வாய்ந்த கட்டுநர்களே உறுப்பினர்களாக முடியும். இந்த அமைப்பில் உள்ள கட்டுநரால் கட்டப்படும் கட்டிடங்களில் உரிய சட்ட விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றன. கிரெடாய் உறுப்பினர்களுக்கெனத் தனியாக விதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படியே கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகிறது. அனைத்துப் பணிகளுக்குமே நிபுணத்துவம் வாய்ந்த கன்சல்டன்சி மூலம் திட்டங்கள் தீட்டப்பட்டுச் செயல்படுத்தப்படுகிறது.

கட்டுமானத்துக்குத் தரமான பொருள்கள் பயன்படுத்தப்படுகிறது. விற்பனைக்கு பிந்தைய கட்டிடப் பராமரிப்பு மற்றும் சேவைகள் உறுதியளிக்கப்படுகிறது. வீடு வாங்கியவர்களின் குறைகளைத் தீர்க்க குறைதீர்க்கும் பிரிவையும் கிரெடாய் வைத்துள்ளது. தரமான பொருட்கள், வெளிப்படையான செயல்பாடு, நம்பகத்தன்மை ஆகியவையே கிரெடாய் அமைப்பின் கோட்பாடுகள் எனச் சொன்னார்.

கண்காட்சியைப் பார்வையிட்ட பிறகு வீடுகளைப் பார்க்க விரும்புவோரை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்படும். கண்காட்சியில் வீடுகளை புக்கிங் செய்பவர்களுக்கு ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள ஐ-பேட் ஏர் 2 பரிசாக வழங்கப்படும். கண்காட்சியில் வீடு புக்கிங் செய்து, வங்கிக் கடனுதவி பெறுவோருக்கு நடைமுறைக் கட்டணம் கிடையாது.

வங்கிக் கடனுதவி வேண்டுவோர், மாதச் சம்பளக்காரர்களாக இருந்தால் ஊதியப் பட்டியலும், வியாபாரம் செய்பவராக இருந்தால் 3 ஆண்டுகள் வருமான வரி கட்டியதற்கான ஆவணம் மற்றும் இருப்பிடச் சான்று உள்ளிட்டவற்றைக் கொண்டு வந்தால் போதுமானது. பல இடங்களுக்குச் செல்வதை விட ஒரே இடத்தில் அனைத்து தரமான குடியிருப்புகளையும் பார்த்து, அதில் தங்களுக்கு பிடித்த வீட்டைத் தேர்ந்தெடுக்க இந்தக் கண்காட்சி மிகவும் உதவியாக இருக்கும்.

ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை வாங்கும்போது உடனடியாகக் குடியேறி விடலாம். இதனால் வீடுகள் கட்டும் வரையில் தவணை செலுத்த வேண்டிய தேவை இருக்காது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x