Published : 30 Dec 2014 01:25 PM
Last Updated : 30 Dec 2014 01:25 PM

கமாவும் மேற்கோளும் உங்களுக்குக் கேள்விக்குறியா?

“நண்பரே, உணர்வற்ற நிலை எம்மோடு சேரும்போது கிடைப்பது என்ன என்பதை உம்மால் கூற முடியுமா?’’ என்று ஒரு வாசகர் கேட்டதோடு நின்றுவிடாமல் ‘பதில் கேள்வியிலேயே இருக்கிறது’ என்றும் கூறி உசுப்பேற்றியிருக்கிறார்.

நிற்க. நிறுத்தக் குறிகளில் Colon, Semi-colon ஆகியவற்றை எப்போது பயன்படுத்துவது என்பதில் சிலருக்குக் குழப்பம் இருக்கிறது. அப்படியே மீதி நிறுத்தக் குறிகள் பற்றியும் கொஞ்சம் வேகமாகப் புரட்டிப் பார்த்து விடுவோமே.

Full stop என்பதை வாக்கியங்கள் மற்றும் கட்டளைகளின் முடிவில் பயன்படுத்துவோம். This is one such sentence. Understand.

கேள்விகள் முடிவில் கேள்விக்குறி (Interrogative mark). Is this not a question?

வியப்பை வெளிப்படுத்தும் வார்த்தை மற்றும் வாக்கியங்களுக்குப் பிறகு வியப்புக் குறி (Exclamatory mark). What an intelligence!

அரைப்புள்ளி எனப்படும் comma வை எப்போது பயன்படுத்துவது?

நிறைய வார்த்தைகள் ஒரு பட்டியலாக வரும்போது அரைப் புள்ளி கள் பயன்படுத்தப்படுகின்றன. I like apples, bananas, grapes and oranges.

ஒரு phrase அல்லது clause ஆகியவற்றின் தொடக்கத்திலும் comma பயனாகிறது. Later that day, we went to cinema. When I broke my leg, I was hospitalised.

ஒரு phrase வாக்கியத்தின் நடுவே ‘புதைக்கப்படும்போது’ அதன் இருமுனைகளிலும் comma இடப்படுகின்றன. Kamala, waving her hand, hurried away.

ஒரு வாக்கியத்தில் பேச்சுப் பகுதியும், விளக்கப் பகுதியும் கலந்திருந்தால் அவற்றைப் பிரித்துக் காட்டவும் comma பயன்படுவதுண்டு. “A very nice gift”, said Prakash.

புதிர் போடவும்கூட comma பயன்படுத்தப்படுகிறது! “நண்பரே, உணர்வற்ற நிலை எம்மோடு சேரும்போது கிடைப்பது என்ன என்பதை உம்மால் கூற முடியுமா?’’ என்ற கேள்விக்கு பதில் comma-தானே! (இதற்கும் மேல் coma + m (அதாவது எம்) = comma என்றெல்லாம் நான் விளக்கினால் உங்களுக்குக் கோபம் வரக்கூடும்).

மேற்கோள் குறி (Inverted commas) பேச்சுப் பகுதிக்கு முன்னும், பின்னும் இடம் பெறும். Apostrophe எப்போது, எப்படி இடம் பெறும் என்பதைத் தெளிவாகவே முன்பொரு பகுதியில் பார்த்திருக்கிறோம்.

இப்போது semi-colon-க்கு வருவோம். ஒரு வாக்கியம் பிரிந்திருப்பதை உணர்த்த இது பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம் comma-வைவிட அதிக அழுத்தத்துடன் ஒன்றை உணர்த்துகிறது. ஒரு தத்தில் அந்த வாக்கியத்தின் இருபகுதிகளையும் இணைப்பதுபோலச் செயல்படுகிறது என்றும் கூறலாம். இந்த விளக்கங்கள் உங்களுக்கு அளிக்கக்கூடிய லேசான குழப்பத்தைக் கீழே உள்ள வாக்கியங்களில் semi colon பயன்படுத்தப்பட்டிருக்கும் விதத்தைப் பார்த்தால் தீர்த்துக் கொள்ளலாம்.

My first attempt was a failure; next time I succeeded.

I like her; however, I hate the way she dresses.

Colon என்பதைக் கீழே உள்ள சந்தர்ப்பங்களில் பயன்படுத்துவோம். நாடகங்களில், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பெயருக்குப் பின்னால் (வசனத்துக்கு முன்னால்).

Traffic Police : Show me your driving licence.

Murthy : I have not brought it.

Traffic Police : Show me the Certificate of Registration of your vehicle.

Murthy : I have not brought it. But I have brought my purse sir.

ஒரு பட்டியலை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக colon-ஐப் பயன்படுத்துவோம்.

Tomorrow you have to bring: a bag, two apples, a knife and a rain coat.

MASSACRE – GENOCIDE – ASSASSINATION - MURDER

Massacre என்பது mass killing. அதாவது கண், மண் தெரியாமல் பலரையும் கொடூரமாகச் செய்யும் படுகொலை. வன்ம உணர்ச்சியோடு செய்யப்படுகிறது.

Genocide என்பது இனப் படுகொலை. இது ஓர் இனத்தைச் சேர்ந்த ஒவ்வொருவராகத் தேடிக் கொல்வதாகவும் இருக்கலாம். கொலை செய்திருக்க வேண்டும் என்பதல்ல, குறிப்பிட்ட இனம் வருங்காலத்தில் பரவாமல் தடுக்க எடுக்கப்படும் வழிமுறைகூட Genocideதான். ஓரினத்திலுள்ள இளம் பெண்களுக்கெல்லாம் மருத்துவத்தின் மூலம் அவர்கள் கருவுறாமலே இருக்கச் செய்வதும் genocideதான். ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள் மற்றொரு இனத்திற்கு கட்டாயமாக மாற்றப்படுவதும் genocideதான். Massacre செய்வதன் நோக்கம்கூட genocideஆக இருக்கலாம்.

Assassinating என்பதற்கும் murdering என்பதற்கும் என்ன வித்தியாசம்?

சாமானியர்கள் கொல்லப்பட்டால் அதை murder என்றும், அசாதாரணமானவர்கள் கொல்லப்பட்டால் அதை assassination என்றும் குறிப்பிடுகிறார்கள். சாதாரணக் குடிமக்கள் கொல்லப்பட்டால் அது murder. காந்தியோ இந்திரா காந்தியோ கொல்லப்பட்டால் அது assassination.

கூலிக்காக ஒருவன் கொலை செய்தால் அதை assassination என்று ஆங்கில க்ரைம் புதினங்களில் குறிப்பிடுகிறார்கள். (ஆனால் நாளிதழ்களில் அப்படிப் பயன்படுத்தியதை நான் அறியவில்லை).

Character assassination என்பது வேறுவிதமான படுகொலை. இதில் பாதிக்கப்படுபவர் நேரில் இருக்க வேண்டுமென்பது கூட இல்லை. காரணம் தாக்கப்படுவது உடல் இல்லை, உள்ளம்!. Character assassination என்பது தற்செயலாக நடப்பதில்லை. வேண்டுமென்றே செய்யப்படுவது. ஒருவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் ஒன்றைக் கூறுவதையோ, களங்கமான செய்தி பரப்புவதையோ இப்படிக் குறிப்பிடு​கிறோம்.

முழுமையான பொய்யினால் மட்டுமல்ல, உண்மையைத் திரித்துக் கூறுவது, சேர்த்தோ குறைத்தோ கூறுவது ஆகியவற்றின் ​மூலமும் character assassination செய்ய முடியும். The magazine engaged in a deliberate campaign of character assassination against her.

Smear campaign, Discredit ஆகிய வார்த்தைகள் கிட்டத்தட்ட character assassination என்பதுடன் ஒத்துப் போகின்றன.

Assassin என்பது இத்தாலிய வார்த்தையான Assassino என்பதிலிருந்து வந்தது, இந்த வார்த்தை அரேபிய வார்த்தையான ‘Hashshashin’ என்ற வார்த்தையிலிருந்து வந்தது. இதற்குப் பொருள் ‘Hashis’ சாப்பிடுபவர்கள். இது கொஞ்சம் கேவலமாகப் பிறரைத் திட்ட பயன்படுத்தப்பட்ட ஒரு வார்த்தை. போதைப் பொருளை Hashis என்பதுண்டு.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x