

மகெல்லனின் தலைமையிலான கப்பல்கள் 1519-ல் தென்னமெரிக்கத் துறைமுகத்தை அடைந்தன. குளிர் காலத்தைத் தென்னமெரிக்காவின் முனையில் இருந்த சான் ஜூலியனில் மகெல்லன் குழுவினர் கழித்தனர். அங்கே இருந்த உள்ளூர் மக்களை மகெல்லன் குழுவினர் பட்டகான்ஸ் அல்லது பெருங்கால் கொண்டவர்கள் என்று அழைத்தனர்.அங்கிருந்து புதிய பெருங்கடலை அடைய முடியுமா என்று அறிவதே அவர்களுடைய திட்டமாக இருந்தது.
நெருக்கடி
மகெல்லனின் ஐந்து கப்பல்களில் சான் அண்டோனியோ உட்பட 3 கப்பல் குழுக்களுக்கான துணைத் தலைவர்கள் கலகத்தில் ஈடுபட்டனர். அவர்களைக் கொன்ற மகெல்லன், மற்ற இரண்டு துணைத் தலைவர்களை அங்கேயே தனியாக விட்டுவிட்டு வந்துவிட்டார். அவர்களுடைய கப்பல்களில் ஒன்றான சான்டியாகோ தென்னமெரிக்கத் துறைமுகத்தில் மோதி உடைந்தபோது, மதிப்புமிக்க பொருட்கள் அழிந்து போயின.
இப்படிக் கடுமையான நெருக்கடி நிலவிய நேரத்தில் இரண்டு கப்பல்கள் வேறு காணாமல் போயின. அவை பிற்பாடு திரும்பியபோது, புதிய கடல் வழியை அவை கண்டறிந்தது தெரிய வந்தது. அவ்வளவு காலம் வரை தென்னமெரிக்க முனைக்கு அந்தப் பக்கம் எந்தக் கப்பலும் சென்று வழி கண்டறிந்திருக்கவில்லை.
புதிய வழி
இப்படி மகெல்லன் தலைமையிலான குழு புதிய பாதையைக் கண்டறிந்ததால், அது ‘மகெல்லன் நீரிணை' என்று அழைக்கப்படுகிறது. திட்டவட்டமாகத் தெரியாத அந்தக் கடல் கால்வாய் வழியாக 1520 அக்டோபரில் அவர்கள் பசிஃபிக் பெருங்கடலை அடைந்தனர். பசிஃபிக் தீவுகளைக் கண்டறிந்தவரும் மகெல்லன்தான்.
அவர்கள்தானே உலகிலேயே முதன்முதலில் பசிஃபிக் பெருங்கடலைக் கப்பலில் கடக்கின்றனர். அது உலகின் மாபெரும் கடல் என்பது அவர்களுக்குத் தெரியாது. பசிஃபிக் கடலைக் கடக்கும் அவர்களுடைய பயணம் எதிர்பார்த்ததைவிடக் கடுமையாக இருந்தது. கப்பல் குழுவினரில் பலரும் வைட்டமின் சி குறைபாடான ஸ்கர்வி நோய் தாக்கியும் கொலைப் பட்டினியாலும் இறந்தனர்.
பிலிப்பைன்ஸ் பலி
இந்தத் தடைகளை எல்லாம் கடந்து மகெல்லன் மேற்கிலிருந்து கிழக்காக அல்லாமல் மேலும் மேலும் மேற்கே போய், பின்கதவு வழியாகப் பூமிக்கு வருவதைப் போல, பூமியின் கிழக்குப் பக்கத்தை வந்தடைந்தார். 1521-ல் குவாம் என்ற துறைமுகத்தை அவர்கள் அடைந்தனர்.
முதன்மைக் கப்பலான டிரினிடாட் உடன் வந்த சரக்குக் கப்பல்களை நறுமணத் தீவுப் பகுதியில் போர்த்துக்கீசியர்கள் கைப்பற்றிக் கொண்டனர். அதில்தான் நறுமணப் பொருட்கள் எடுத்துவரப்பட்டன.
ஆனால், இத்தனை நெருக்கடிகளையும் மகெல்லன் கடந்து என்ன பயன், பிலிப்பைன்ஸ் தீவுகளில் ஒன்றான மக்டான் தீவு மக்களால் அவர் கொல்லப்பட்டார். அவருக்குப் பிறகு நாடு திரும்பும் குழுவுக்குக் கப்பல் தலைவனாக செபாஸ்டியன் டெல் கானோ இருந்தார்.
தேய்ந்த கட்டெறும்பு
அவர்கள் திரும்பிய பாதை மிக மிக நீண்டது, பயங்கரமானதும்கூட. அவர்களுக்கு அறிமுகம் இல்லாத போர்த்துக்கீசியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கடல் வழிகளில் அவர்கள் திரும்ப வேண்டியிருந்தது. விக்டோரியா என்ற ஒரே ஒரு கப்பல் மட்டும்தான் 1522-ல் ஸ்பெயினுக்குத் திரும்பியது. கடுமையான தட்பவெப்பநிலை மாற்றத்தையும் போர்த்துக்கீசியர்கள் தாக்குதல் ஆபத்தையும் சமாளித்து அது திரும்பியது. மகெல்லனின் குழுவில் மொத்தம் இருந்த 260 பேரில் 18 பேரும், நறுமணத் தீவுகளைச் சேர்ந்த 4 பேரும் மட்டுமே ஸ்பெயின் திரும்பினர்.