Last Updated : 26 Dec, 2014 01:19 PM

 

Published : 26 Dec 2014 01:19 PM
Last Updated : 26 Dec 2014 01:19 PM

பனிக்காலத்தில் ஒரு கூலிங் கிளாஸ்

தமிழ்த் திரைப்பட இயக்குநர்களில் மிகச் சிறந்த திறமைசாலிகளில் ஒருவரான ரஸ்பின் பயங்கர உற்சாகத்தில் இருந்தார். சமீபத்தில் வெளியான அவருடைய கைக்காசு படம் சக்க போடு போடுது. அந்தப் படத்தின் ஒரிஜினலை அவர் ரஷ்யாவிலிருந்து அமெரிக்காவுக்கு ப்ளைட்ல போகும்போதுதான் பார்த்தார். செர்பியப் படமான அதை எப்படியும் தமிழில் பண்ணிரணும்னு அர்த்த ராத்திரியில் அவருக்குத் தோணுச்சு.

உடனே தன்னோட லேப்டாப்பத் திறந்து வச்சு, அந்தப் படத்த அப்படியே வரிக்கு வரி தமிழில் எழுதி அமெரிக்க மண்ணில் காலடி எடுத்து வைத்தபோது தமிழ்ப் படத்தின் கதையை எழுதிமுடித்துவிட்டார். அவரது மனக் கண்ணில் படம் முடிந்தவுடன் போடும் எ ஃபில்ம் பை ரஸ்பின் என்னும் வாசகம் ஒளிர்ந்தது. ஒருமுறை உடலைச் சிலிர்த்துக்கொண்டார். கண்ணில் அணிந்திருந்த கறுப்புக் கண்ணாடியை லேசாக அசைத்துச் சரிசெய்தார்.

படம் தயாரிப்பதில் ஆர்வம் கொண்ட என்ஆர்ஐ சிலரை அமெரிக்காவில் பார்த்தார். சமூகத்துக்கு ஏதாவது நல்லது செய்யணும்னு துடிச்சிட்டிருந்த அவங்களுக்கு அந்தப் படத்தின் கதை ரொம்பப் பிடிச்சிப் போச்சு. கடைசிக் காட்சியில் மனித உணர்வூட்டும் மாத்திரைகளை வில்லன்கள் வாயில் திணிக்கும் காட்சியைப் பட்டை தீட்டியிருந்தார்.

என்ஆர்ஐகள், ரஸ்பினைத் தலையில் தூக்கி வச்சுக்கிட்டு ஆடாத குறையாகக் கொண்டாடினாங்க. அதுல ஒருத்தர் ரஸ்பின்னின் முதல் படமான பைத்தியம் பிடிக்குதடி படத்தின் ஒவ்வொரு காட்சியையும் வசனத்துடன் ஒப்புச்சார். அவர் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்திலயே ரஸ்பின் குறட்டைவிடத் தொடங்கிவிட்டார். ஆனால் ஆர்வம் காரணமாக அந்த ரசிகர் விடிய விடிய கதையைச் சொல்லி முடித்தபின்னர் உறங்கிவிட்டார்.

ரஸ்பின் தனியா இருக்கும்போது தன்னோட பழைய வாழ்க்கையை யோசித்துப் பார்ப்பார். வெகுளி வெள்ளச்சாமின்னு அவர எல்லோரும் கிண்டல் பண்ணுவாங்க. ஸ்கூலில் படிக்கும்போது ஆசிரியர் ஒவ்வொருவரிடமும் படிச்சு முடிச்சிட்டு நீங்க என்ன பண்ணப் போறீங்கன்னு கேட்டபோது, ஜெராக்ஸ் கடை வைக்கப்போறதா வெள்ள சொன்னான்.

கூடப் படிச்சவங்க எல்லோரும் மாடியில இருந்து கீழ விழுந்து சிரிச்சாங்க. ஏன் அப்படிச் சொன்னோம்னு வெள்ளைக்கே தெரியல. ஏனோ தோணுச்சு சொன்னான். அவ்வளவுதான். அவன் எப்போதுமே அப்படித்தான் எதையாவது கோக்குமாக்கா சொல்வான். கேட்பவங்க எல்லாரும் அதுல ஏதோ அர்த்தம் இருக்குதுன்னு நினைச்சுக்குவாங்க. படம் பண்ணும்போதும் அப்படித்தான் ஏன் எதுக்குன்னு தெரியாம இஷ்டத்துக்கு எதையாவது எடுப்பான் அதுல அந்தக் கூறு இருக்கு இதுல இந்தக் கூறு இருக்குன்னு விமர்சகர்கள் பிச்சி மேய்வாங்க. ஆனா ரஸ்பின்னுக்குத் தெரிஞ்சதெல்லாம் கத்தரிக்கா கூறுதான்.

அவர் எடுத்த தெருநாயும் கருங்கல்லும் படம் தமிழ்நாட்டில் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது. அந்தப் படத்துக்கு எல்லா வேலையையும் அவர் பார்த்தார். போஸ்டர் ஒட்டினாரு, கவுண்டருல டிக்கெட் கொடுத்தார் இன்னும் என்னவெல்லாமோ பண்ணினாரு.

தெருநாய் மேல பாசம் வைத்து அதோட பிறந்தநாளை ஒரு கல்லறையில் கேக் வெட்டிக் கொண்டாடும் காட்சியில் அவருடைய நடிப்பைப் பார்த்து அந்த நாயே கண்ணீர்விட்டதெனப் பத்திரிகைகள் புகழ்ந்தன. சுமார் அரைமணி நேரம் தேம்பித் தேம்பி தனது கதையை அந்த நாயிடம் சொல்லுவார் ரஸ்பின். நாயையும் சக தோழனாக நினைத்து தோழமை காட்டும் மனித நேயமான காட்சிக்கு எல்லா தியேட்டர்களிலும் ஆரவாரமான வரவேற்பு கிடைத்தது.

டைரக்டர் ஆகுறதுக்கு முன்னால, வெள்ளை ஒரு புத்தகக் கடையில் கொஞ்சநாள் வேலை பார்த்தார். அங்க உள்ள புத்தகங்களை எல்லாம் ஒண்ணுவிடாம தொடச்சி வைக்கணும், அதுதான் அவரோட வேலை. புத்தகங்கள் அவரை ரொம்ப கஷ்டப்படுத்தும். பெரிய பெரிய ரஷ்ய இலக்கியங்களால் அவருக்கு ஆஸ்துமாவே வந்துவிட்டது. அதைத் தான் அவர் முதலில் அவரைப் பேட்டி எடுத்த செய்தியாளரிடம் சொன்னார். ரஷ்ய இலக்கியங்கள் என்னைப் பாதித்தன என்னும் தலைப்பில் அவர் பேட்டியை பேப்பரில் போட்டார். அன்றிலிருந்து ரஸ்பின்னுக்குப் பெரிய அறிஞர் அந்தஸ்து கிடைத்துவிட்டது.

தன்னை வித்தியாசமா காட்டிக்கொள்ள என்ன பண்ணனுன்னு வெள்ளை யோசித்தார். அவரோட நண்பன் கொடுத்த ஐடியா கறுப்புக் கண்ணாடி போட்டுக்கோ தமிழ்நாட்டுல பெரிய ஆளுங்க எல்லாம் கறுப்புக் கண்ணாடி போட்டவங்கதான்னு உசுப்பேத்தினான். அன்றிலிருந்து ரஸ்பின் கறுப்புக் கண்ணாடியுடன் தான் எப்போதும் இருந்தார். உறங்கும் போதும், குளிக்கும்போதும் கூட அவர் அந்தக் கண்ணாடியைக் கழற்றுவதேயில்லை.

அதே போல் புரியாத மாதிரி எதையாவது சொல்லு. ஜனங்களுக்கு ஒன்னும் புரியாது ஆனா சூப்பராயிருக்குன்னு சொல்லிருவாங்கன்னான். உதாரணத்துக்கு நடிகர் டமால்ஹாசன் பேட்டி ரெண்டு மூண எடுத்துக் காண்பிச்சான். எல்லாமே ஒரே விஷயம்தான் ஆனால் எதுவுமே புரியாத மாதிரி கந்த கோலமா இருந்துச்சு. அதன் பின்னர் பேட்டிகளில் ரஸ்பின் பொளந்து கட்டுனார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x