Last Updated : 15 Dec, 2014 05:05 PM

 

Published : 15 Dec 2014 05:05 PM
Last Updated : 15 Dec 2014 05:05 PM

ஐடியா மட்டும் போதுமா?

தொழில் தொடங்குவதற்கு என்னிடம் ஏராளமான ஐடியாக்கள் உள்ளன. அதைக் கொண்டு தொழிலதிபராவது எப்படி என்று தவிப்போர்கள் பலர். எந்தத் தொழிலைத் தொடங்குவது என்ற குழப்பமே இதற்குக் காரணம். என் முன் உள்ள தொழில் யோசனைகளில் எந்தத் தொழிலைத் தேர்ந்தெடுப்பது. இப்போது புழக்கத்தில் உள்ள முறையில் தொழில் தொடங்கி கூட்டத்தோடு கூட்டமாக ஐக்கியமாகிவிடுவதா என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். தொழில் முனைவோர் பலரது மத்தியில் இதுபோன்ற அடிப்படைக் கேள்விகள் எழுவது இயல்பே. நான் நடத்திய பல்வேறு கருத்தரங்குகளில் இத்தகைய கேள்விகளைக் கேட்போரே அதிகம்.

உங்களிடம் உள்ள பல யோசனைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதைத் தொழிலாக்குவதற்கு மிகுந்த ஆலோசனை, சிந்தனை அவசியம். தொழில்முனைவோர் பலரும் தேர்ந் தெடுத்த யோசனையை தொழிலாக மாற்றுவது தெரியாமல் குழம்பி விடுகின்றனர். இந்தக் கட்டுரையில் ஒரு தொழில் யோசனையை எப்படி தொழிலாக மாற்றுவது என்பதைப் பார்க்கலாம்.

விருப்பமான யோசனையை தேர்வு செய்யுங்கள்

உங்களுக்குப் பிடித்தமானதைச் செய்யும் மகத்தான சந்தர்ப்பத்தை இந்த வாழ்க்கை உங்களுக்கு அளித்திருக்கிறது. உங்களுக்கு எது சந்தோஷம் தருமோ, எதில் உங்களுக்கு நாட்டம் அதிகமோ அதைத் தேர்வு செய்யுங்கள். பெரும்பாலான தொழில் முனைவோரது கருத்தும் முதலில் கடினமாக உழைத்துவிட்டு, பணத்தை சம்பாதித்தபிறகு தங்களுக்கு விருப்பமான தொழிலை செய்யப் போவதாகக் கூறுகின்றனர். ஆனால் பெரும்பாலும் இதுபோன்ற தேர்ந்தெடுக்கும் தொழிலுக்கு எதிர்மறையான விளைவுகள் ஏற்படுவதுண்டு.

வேலை என்பது ஒருபோதும் வேலையாக இருக்கக் கூடாது. மகிழ்ச்சியோடு அந்த வேலையைச் செய்ய வேண்டும்.

உங்களுக்கு கிரிக்கெட் மீது தீராத காதல் இருப்பதாக வைத்துக் கொள்வோம். எந்த ஒரு கிரிக்கெட் போட்டி பார்ப்பதையும் நீங்கள் தவறவிட்டதே கிடையாது. கிரிக்கெட் பற்றிய அத்தனை விஷயங்களும் உங்கள் விரல் நுனியில். அந்த அளவுக்கு கிரிக்கெட் விஷயங்கள் உங்களுக்கு அத்துபடி. குறிப்பிட்ட நாளில் உங்களுக்கு மிக முக்கியமான அலுவல். தொடர்ந்து 10 மணி நேரம் பணியாற்றிவிட்டு வீட்டுக்கு வருகிறீர்கள். வீட்டுக்கு வந்தவுடன் உங்களுக்குப் பிடித்தமான கிரிக்கெட் போட்டியை டி.வியில் பார்க்க உட்காருகிறீர்கள்.

10 மணி நேரம் உழைத்த களைப்புக்கு நீங்கள் ஓய்வு எடுக்கவில்லை. மாறாக உங்களுக்குப் பிடித்தமான கிரிக்கெட் போட்டியை பார்க்கத் தொடங்குகிறீர்கள். பிடித்த வேலையை செய்யும்போது ஓய்வு தேவை யிருக்காது. அதனால்தான் பிடித்தமான, நேசிக்கும் விஷயத்தை தொழிலாக மாற்றுங்கள். அப்படி தேர்ந்தெடுத்தால் உங்கள் தொழில் லாபகரமானதாக இருக்கும் என்பதை சொல்லத் தேவை யில்லை.

விளையாட்டு சார்ந்த தகவல்களை அளிக்கும் நிறுவனத்தை நீங்கள் தொடங்கினால், அனைத்து ஐபிஎல் அணிகள்தான் உங்களது வாடிக்கையாளர் இலக்கு. நீங்கள் உருவாக்கும் ஒரு தயாரிப்பு அல்லது தகவல், கிரிக்கெட் ஐ-கான் ஆகியன உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் அல்லவா? இந்த தொழிலைத்தானே நீங்கள் மிகவும் நேசிப்பீர்கள். இதுபோன்ற வேலை யைத்தானே நீங்கள் விரும்புவீர்கள். எனவே உங்களுக்கு எது விருப்பமாக உள்ளதோ அது சார்ந்த தொழிலையே தேர்ந்தெடுங்கள்.

நிறைய வருமானம் தரும் என நினைத்து ஒரு தொழிலை நீங்கள் தொடங்கி விட்டீர்கள் என வைத்துக் கொள்வோம். உங்களுக்கு விருப்பமானதைச் சார்ந்த அந்த தொழிலில் அதிக பணம் கிடைக்கவில்லையென்றாலும் நீங்கள் தொடர்ந்து அதை மேற்கொள்வீர்கள். தனியாக தொழில் தொடங்கினால் நீண்ட நேரம் உழைக்க வேண்டியிருக்கும். உங்களுக்கு பிடித்தமானதை தேர்வு செய்து அதை தொழிலாக்கினால் உழைப்பது அலுப்பு தட்டாமல் இருக்கும். உங்கள் கவனமும் சிதறாமல் இருக்கும். ஸ்திரமான, நீண்ட நேர உழைப்பு உங்களுக்கு உரிய பலனை அளிக்கும்.

எது பிடித்தமானதாயிருக்கிறது என்பதை எப்படி கண்டுபிடிப்பது என பலரும் என்னிடம் கேட்கின்றனர். நீங்கள் எந்த வேலையில் அதிக நேரம் செலவிடுகிறீர்கள் என்பதை கண்டு பிடியுங்கள். அந்த வேலைதான் உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்று அர்த்தம்.

ஓய்வு நேரங்களில் அல்லாமல் முழு நேரமும் எந்த வேலை உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதை ஆராயுங்கள். எந்த பலனும் இல்லாமல் பிறருக்கு சொல்லித் தருவது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதுதான் நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய வேலை. உங்களுக்குப் பிடித்தமானதை அடையாளம் கண்டு விட்டீர்கள் என்றால் பிறகு அதை தொழிலாக மாற்றுவது எப்படி என்று கண்டுபிடிக்கலாம். உங்களது ஆசை, விருப்பத்தையும் தொழிலாக மாற்றுவது எப்படி? உங்களது ஒற்றை யோசனையை தொழிலாக மாற்றுவதற்கு பல உத்திகள் இப்போது உள்ளன. இதனால் தொழில் தொடங்க பல வாய்ப்புகள் உங்கள் முன்பு உள்ளது. உங்களுக்கு விருப்பமான ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டியது நீங்கள்தான்.

- கே.சுவாமிநாதன்
aspireswaminathan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x