Last Updated : 30 Dec, 2014 01:38 PM

 

Published : 30 Dec 2014 01:38 PM
Last Updated : 30 Dec 2014 01:38 PM

வெட்டிவேரு வாசம் 16 - வழி நடத்தும் வாசனை!

எனக்கும் வாசனைக்கும் இடையிலானதொரு நெருக்கமான உறவு சிறுவயதில் இருந்தே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கறிக்குழம்பு, வேலியோரப் பாம்பு, மழை நனைத்த மண், புளியோதரை சாப்பிட்ட கை, மிருகக்காட்சி சாலை புலி… என்று அடையாளம் சொல்ல ஒவ்வொன்றுக்கும் பிரத்யேக வாசம் உண்டு.

வாசனை என் வாழ்க்கையில் நிறைய விளையாடி இருக்கிறது. வியக்க வைத்திருக்கிறது. அழ வைத்திருக்கிறது. பயமுறுத்தி இருக்கிறது. எச்சரித்து இருக்கிறது.

வாசம் வசமில்லாத ஜலதோஷத்தின்போது, சிகரெட் ருசிக்காது. எதைச் சாப்பிட்டாலும் மண்ணாகத் தோன்றும். சிறுவயது நண்பன் மூர்த்தி வீட்டில் பந்தி முடிந்ததும், அவனது அம்மா சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்து வைத்திருப்பார். சாம்பார், ரசம், பெருங்காயம், மோர் எல்லாம் சேர்ந்து கலவையான மணம் கூடத்தை நிரப்பியிருக்கும். அந்தக் கவர்ச்சியான மணம் எனக்குப் பிடிக்கும்.

வங்கியில் வேலைக்குச் சேர்ந்த பிறகு திருவையாறு சென்றிருந்தேன். ஒரு அச்சாபீஸைக் கடக்கும்போது, அந்தப் பழகிய வாசனை நாசியைத் தாக்கியது. மிகவும் பிடித்த அதே வாசனை. எப்படி இது சாத்தியம்?

யோசிக்காமல் அச்சாபீஸில் நுழைந்தேன்

‘‘யாரு… என்ன வேணும்?’’

‘‘ஒண்ணுமில்ல, வாசனை உள்ள இழுத்துரிச்சி...’’

‘‘மை வாசனையா? இந்தத் தாள் வாசனையா? அச்சாபீஸ்ல வேற என்ன வாசனை இருக்கு?’’

அச்சாபீஸின் பின்புறத்தில் இருந்து மூர்த்தியின் அம்மா வெளியே வந்து, அங்கே கொஞ்சமும் என்னை எதிர்பார்க்காமல் விழிகளை விரித்து அகலமாகச் சிரித்தார். ஒரு வாசனை நட்பைப் புதுப்பித்த கதை இது!

திருவல்லிக்கேணி ஒண்டுக் குடித்தன வீட்டில் ஒருமுறை புதிதாக அட்டகாசமான ஊதுவத்தி வாசம் எங்கிருந்தோ மிதந்து வந்து நாசியை வருடியது. மூன்றாவது வீட்டில் எரியும் ஊதுவத்தியில் இருந்துதான் அது பரவுகிறது என்பதை துப்பறிந்து கண்டு

பிடித்தேன். அன்றைய தேதியில், கொஞ்சம் விலை உயர்ந்த சரக்கு. இருந்தாலும் எப்படியோ காசு திரட்டி வாங்கி நான்கு நாட்களுக்கு ஒருமுறை அதை வீட்டில் ஏற்றி வைத்து, கண்மூடி வாசனையை அனுபவிக்கும்போது ஆஹா!

அதே வீட்டில், என் அன்பான அம்மா திடீரென்று ஒருநாள் ‘‘என் கால் கட்டை விரல் ஜிலு ஜிலுன்னு இருக்குடா...’’ என்றாள். கட்டைவிரல் நகக் கண்ணில் இருந்து பிசின் போல் மெலிதான திரவம் கசிந்தது. விரலில் தொட்டு முகர்ந்தேன். குமட்டிக் கொண்டு வந்தது. என்னவோ தப்பு!

டாக்டர் பரிசோதித்துவிட்டு, ‘‘காலுக்கு ரத்தம் போகவில்லை. ரத்தக் குழாயில் அடைப்பு’’ என்று பயமுறுத்தினார். என்னென்னவோ பரிசோதனைகள் செய்தும் கூட, அடைப்பு எந்த இடத்தில் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. கண்ணெதிரே அந்தக் கால் அழுகியது. வேறு வழியின்றி, முழங்கால் வரை அறுத்து எடுத்தார்கள்.

அம்மா உடைந்து போனாள். “உங்களையெல்லாம் உட்கார்த்திவைத்து செய்துபோட முடியாமல், நான் உட்கார்ந்து போவதா? ஐயோ, இந்த ஊனத்துடன் வீட்டுக்குத் திரும்பி வர மாட்டேன்..” என்று பிடிவாதம் பிடித்தாள். சமாதானம் செய்தோம். ஆனால், அவளது பிடிவாதம் வென்றது. வீட்டுக்கு அழைத்துவர தயாராகிப் போனால்..

தூக்கத்தில் இறந்து போயிருந்தாள். மாரடைப்பு என்றார்கள். செரிப்ரல் ஹெமரேஜ், என்றார்கள்.

அதே வீட்டுக் கூடத்தில் பனிக்கட்டிக ளின் மீது அவளது உடல் கிடத்தப்பட்டது. துக்கத்துக்கு வந்தவர்களில் பலர், நான் ரசிக்கும் ஊதுவத்தியையே கொண்டுவந்து அதன் வாசனையால் கூடத்தை நிரப்பினார்கள். இன்று வரை என்னால் தாங்க முடியாத வாசனையாகிவிட்டது அது.

பல வருடங்கள் கழித்து, நண்பன் ரமேஷின் வீட்டுக்குள் நுழைந்தவுடன் ஒரு வாசம் தாக்கியது. அம்மாவின் கால் கட்டைவிரலில் முகர்ந்த அதே வாடை. திக்கென்றது. உள்ளறையில் இருந்து ரமேஷின் அம்மா வந்தார். குசலம் விசாரித்தார். தன்னிச்சையாக அவரது கால் கட்டை விரல்களைப் பார்த்தேன். வலது காலில் அதே பிசின் பளபளப்பு.

ரமேஷைத் தனியே அழைத்தேன். ‘‘அம்மா கால்ல ஜில்லுனு இருக்கறதா சொன்னாங்களா?’’ என்று கேட்டேன்.

கண்களை அகல விரித்து, ‘‘ஆமா. ஒனக்கு எப்படித் தெரியும்?’’ என்றான்.

விவரத்தைச் சொன்னேன். உடனே ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று பரிசோதனைகள் செய்ய வைத்தேன். மருத்துவ விஞ்ஞானம் முன்னேறி இருந்தது. ஆடுசதை ரத்தக் குழாயில் அடைப்பு இருந்ததைக் கண்டுபிடித்து, அறுவை சிகிச்சை மூலம் அடைப்பை நீக்க முடிந்தது.

ரமேஷின் அம்மா நலமாக இருக்கிறார்கள். இன்னொரு அன்னையைக் காப்பாற்றிவிட்ட திருப்தி எனக்கு.

வாசனை விவகாரம் ‘அயன்’ திரைப்படத்திலும் உண்டு. தேவா (சூர்யா), தன் குடும்பக் கடையில் காதலியுடன் சரசமாட நினைக்க, குறுக்கில் நந்தி போல் அம்மா.

“அம்மா, உள்ள காஸ் லீக்காவுற வாசனை வரலை?’’ என்று அவளை உள்ளே அனுப்புவான். அம்மாவும் அப்பாவியாய் உள்ளே போய்ப் பார்த்துவிட்டு… ஏமாந்து வெளியே வருவாள்.

தேவா காதலியுடன் (தமன்னா) நெருக்கமாக இருப்பான். அம்மா திகைத்து, “யார்றா இந்தப் பொண்ணு?” என்று விவரம் கேட்கும்போது, ‘‘அம்மா.. நெஜமாவே காஸ் வாசனை வருதும்மா…” என்று தேவா பதற, மகன் மறுபடி விளையாடுகிறான் என்று கத்த ஆரம்பித்து, உண்மையிலேயே காஸ் வாசனை வருவதை உணர்ந்து, அம்மா உள்ளே போவாள். வாசனையால் இழுக்கப்பட்டு, தேவாவும் பின்னாலேயே போவான். ஒரு மாபெரும் தீ விபத்திலிருந்து அம்மாவைக் காப்பாற்றுவான்.

காஸ் வாசனை ஒவ்வொருவர் வீட்டி லும் அன்றாட அனுபவமாகவே இருப்பதால், வாசனையை வைத்து அமைக்கப்பட்ட இந்தக் காட்சி மக்கள் மனதில் ஓர் இயல்பான குடும்ப நிகழ்வாக அப்படியே பளிச் என்று பதிந்துவிட்டது.

- வாசம் வீசும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: dsuresh.subha@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x