Published : 05 Apr 2014 01:00 PM
Last Updated : 05 Apr 2014 01:00 PM

முன்கூட்டியே கட்டப்படும் வீட்டுக் கடன்: வங்கிகள் தரும் ஆவணங்கள் என்ன?

கடன் தொகையை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கு முன்பாக அடைக்க முடியுமா? நிச்சயம் முடியும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை முன் கூட்டியே வீட்டுக் கடனை அடைத்தால் 2 சதவீத அபராதக் கட்டணத்தையும் வங்கிக்கு செலுத்த வேண்டிய நிலை இருந்தது. வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு மிகப்பெரிய சுமையை ஏற்படுத்திய இந்த அபராதத்தை ரிசர்வ் வங்கி தலையிட்டு ரத்து செய்தது.

ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு வாடிக்கையாளர்கள் பலன் அடைய ஆரம்பித்தனர். இதன் காரணமாக வீட்டுக் கடன் வாங்கிய பலர் கடனை முன்கூட்டியே அடைப்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஒரு வங்கியில் இன்னொரு வங்கியைவிட அதிக வட்டி வசூலிப்பது, அல்லது சிலருக்கு ஆயுள் காப்பீட்டு பாலிசி முதிர்ச்சி அடைவதால் கணிசமான தொகை கிடைப்பது உள்ளிட்ட பல காரணங்களால் வீட்டுக் கடனை முன்கூட்டியே அடைக்க முன்வருகிறார்கள்.

இப்படிச் செய்யும்போது வங்கிகளிடம் இருந்து என்னென்ன ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை வாங்கிக்கொள்ள வேண்டும் என்கிற கேள்வி எழக்கூடும். வீட்டுக்கடன் வாங்கியபோது வங்கி ஒரு ரசீதைக் கொடுக்கும். அதில் என்னென்ன ஆவணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்பதைக் குறிப்பிட்டிருப்பார்கள்.

ஒரிஜினல் மனைப் பத்திரம், தாய்ப் பத்திரம், வில்லங்கச் சான்றிதழ், விற்பனைப் பத்திரத்தின் நகல் உள்ளிட்டவை வங்கி ரசீதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த ஒரிஜினல் ஆவணங்கள் அனைத்தையும் வங்கி திருப்பிக் கொடுத்திருக்கிறதா என்பதைக் கவனமாகச் சரிபார்த்துப் பெற வேண்டும்.

கடனை முன்கூட்டியே அடைக்கும்போது பாக்கி அசல் தொகை எவ்வளவு, வட்டித் தொகை எவ்வளவு என்பதை எழுத்துப்பூர்வமாக வங்கியிடம் இருந்து வாங்கிக்கொள்வது அவசியம். அந்தத் தொகையை டிமாண்ட் டிராப்ட் மூலம் வங்கிக்கு கொடுப்பது நல்லது. இது நமக்குப் பாதுகாப்பும்கூட.

அசல் தொகை, வட்டித் தொகையைத் தவிர வேறு எந்த விதக் கட்டணமும் வங்கிக்குச் செலுத்தத் தேவையில்லை. வீட்டுக் கடனுக்கு இ.எம்.ஐ. செலுத்தி வந்தபோது எப்போதாவது பணமில்லாமல் காசோலை திரும்பியிருக்குமேயானால், அதற்கான அபராதக் கட்டணத்தை வங்கி விதித்திருக்கலாம்.

அதைத் தவிர வேறு சேவைக் கட்டணங்கள் ஏதும் கிடையாது. உங்கள் வீட்டுக் கடன் கணக்கில் எவ்வித பாக்கித் தொகையும் இல்லை என்பதற்கான சான்றிதழையும் வங்கியிடம் இருந்து பெற்றுக்கொள்வது நல்லது.

வங்கி திருப்பிக் கொடுத்த ஆவணங்கள் என்ன என்பதைப் பட்டியலிட்டு அதில் வாடிக்கையாளரும் வங்கி அதிகாரியும் கையெழுத்திட்டு அதன் படிவத்தை வைத்துக்கொள்வது இரு தரப்புக்கும் நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x