Published : 02 Dec 2014 11:37 am

Updated : 02 Dec 2014 11:37 am

 

Published : 02 Dec 2014 11:37 AM
Last Updated : 02 Dec 2014 11:37 AM

மொழிகளுக்கு இடையே அறிவைப் பரிமாறியவர்

டிசம்பர் 2 - மு.கு.ஜகந்நாதராஜா மறைந்த நாள்

மு. கு. ஜகந்நாதராஜா (1933 - 2008) தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், பாலி, இந்தி, ஆங்கிலம், துளு எனப் பல மொழிகளை அறிந்தவர். அதனால் அவர் பன்மொழிப்புலவர் எனப் புகழப்பட்டார்.

ஜகந்நாதராஜா ராஜபாளையத்தில் பிறந்தவர். அவரது முன்னோர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன்பாக ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள். தனது பள்ளிப் பருவத்தில் தெலுங்குப் பள்ளியில் ஆறாம் வகுப்பு வரை மட்டுமே அவர் படித்தார்.

தெலுங்கில்..

அதன்பிறகு அவர் தன் விடாமுயற்சியால் பல மொழிகளை ஆழமாகக் கற்றுக்கொள்ள உழைத்தார். தமிழில் ஆழமான ஞானம் பெற்றபிறகு அவர் தமிழின் மேன்மைமிக்க இலக்கியங்களான திருக்குறள், புறநானூறு, குறிஞ்சிப்பாட்டு முதலியவற்றைத் தெலுங்கில் மொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பல்கலைக்கழகம் அவற்றை வெளியிட்டிருக்கிறது.

‘முத்தொள்ளாயிரம் எனும் பழந்தமிழ் நூலை தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்த்து பெரும் சாதனை செய்துள்ளார்.

தமிழில்..

மன்னர் கிருஷ்ண தேவராயர் ஆமுக்த மால்யத (சூடிக் கொடுத்தவள்) என்ற காவியத்தைத் தெலுங்கில் இயற்றினார். அதை 1988-ம் ஆண்டு தமிழாக்கம் செய்தார். இந்த மொழிபெயர்ப்பு நூலுக்கு 1989-ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருதைப் பெற்றார்.

சாகித்ய அகாடமி தமிழில் மொழிபெயர்ப்புக்காக வழங்கிய முதல் விருது இதுதான். “வடமொழி வளத்திற்குத் தமிழரின் பங்கு” என்ற ஆய்வு நூலையும் அவர் படைத்துள்ளார். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்காகத் “தமிழும் பிராகிருதமும்” என்ற ஆய்வு நூலை எழுதினார். இந்திய மொழிகளின் ஒப்பிலக்கியம் (1994), திராவிட மொழிகளில் யாப்பியல் உள்ளிட்ட பல நூல்களை எழுதி உள்ளார்.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் அவரைத் தனது வருகைதரு பேராசிரியராக ஏற்றுப் பெருமைப்படுத்தியது. அந்தப் பொறுப்பை ஏற்று அந்தக் காலகட்டத்தில் “தமிழக, ஆந்திர வைணவத் தொடர்புகள்” என்ற ஆய்வு நூலை அவர் எழுதினார்.

பழைய மொழியிலும்..

புத்தர் காலத்தில் மக்களின் மொழியாக இருந்த பாலி மொழியில் இருந்த ‘மிளந்த பண்ஹா' என்ற பவுத்தத் தத்துவ நூலை மொழிபெயர்த்துள்ளார். இது பேராசிரியர் மாக்ஸ் முல்லர் வெளியிட்ட கீழ் திசைப் புனித நூல் வரிசையில் இடம் பெற்ற சிறப்பான புத்தகம். பவுத்தத் தத்துவத்தை விளக்கும் ‘உதானம்' என்ற அரிய நூலையும் மொழியாக்கம் செய்தார்.

பல மொழிகளுக்கு இடையே மனித அறிவைத் துணி நெய்வதைப் போல அவர் நெசவு செய்தார். குன்றக்குடி அடிகளார் பன்மொழிப் புலவர் என்ற பட்டத்தை இவருக்கு வழங்கி னார். மு.கு.ஜகந்நாதராஜா 2. 12. 2008 அன்று தனது 75-ம் வயதில் இயற்கை எய்தினார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

ஜகந்நாதராஜாபன்மொழிப்புலவர்ஜகன்னாத ராஜாமொழி அறிஞர்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

கடவுளின் நாடு

இணைப்பிதழ்கள்