Last Updated : 07 Apr, 2014 01:12 PM

 

Published : 07 Apr 2014 01:12 PM
Last Updated : 07 Apr 2014 01:12 PM

பிஎஸ்எல்வி ராக்கெட்டின் பயணம்

பௌர்ணமியின்போது பால் போன்ற வெளிச்சத்தை அள்ளித் தரும் நிலாவை நம் எல்லோருக்கும் மிகப் பிடிக்கும். பூமிக்கும் நிலாவுக்கும் என்ன உறவு? பூமியைச் சுற்றிவரும் நிலா ஒரு துணைக்கோள். இயற்கையாக அமைந்த துணைக்கோள். இதே மாதிரியான துணைக்கோளை நாமே உருவாக்கி பூமியைச் சுற்றவைத்தால் என்ன என விஞ்ஞானிகள் யோசித்தனர். அதன் விளைவால் செயற்கைக் கோளை உருவாக்கினர்.

இப்படிச் செயற்கைக் கோளை உருவாக்கி அதை ஏன் பூமியைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட வட்டப் பாதையில் சுற்றவைக்க வேண்டும்? காரணம் இருக்கிறது. பூமி தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளத் தேவையான கருவிகளை இந்தச் செயற்கைக் கோளில் பொருத்தி வைக்க முடியும். இந்தக் கருவிகளால் என்ன பயன்? நிறைய இருக்கின்றன. டிவிகளில் நாம் பார்க்கும் நேரடி கிரிக்கெட் மேட்ச் இந்தச் செயற்கைக் கோள் இல்லையென்றால் சாத்தியமல்ல.

தொலைபேசி, இணையம் போன்ற எல்லாத் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளும் செயல்பட செயற்கைக் கோள்கள் அவசியம். தட்பவெப்பம், விவசாயம், தரை வழி, ஆகாய வழி, கடல் வழி ஆகிய போக்குவரத்துகளுக்கும் இவை அதிக உதவியைச் செய்கின்றன.

இந்தச் செயற்கைக்கோள் ஒரு குறிப்பிட்ட பாதையில் சுற்றி வருவது சரி. அதை அங்கு கொண்டு எப்படி நிலை நிறுத்துவது? அதை எதிலே எடுத்துச் செல்வது? அது போவதற்கு ஒரு வாகனம் வேண்டுமே என்ன செய்யலாம்? அதற்குத்தான் ராக்கெட் உதவுகிறது. ராக்கெட்டின் வேலை செயற்கைக் கோளை அதன் சுற்றுப் பாதையில் நிலைநிறுத்துவதுதான். இங்கிருந்து நாம் அமெரிக்கா போக விமானத்தைப் பயன்படுத்துகிறோம். இங்கிருந்து நிலாவுக்கோ செவ்வாய்க்கோ செல்ல செயற்கைக் கோளுக்கு ராக்கெட் தேவைப்படுகிறது.

ஒரே ஒரு வித்தியாசம். நம்மைக் கொண்டு செல்லும் ஒவ்வொரு நிலையிலும் விமானம் தனித் தனியாகக் கழன்று விழாது. ஆனால் ராக்கெட் அப்படியல்ல. ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு பாகம் தனியே கழன்று விழுந்துவிடும்.

உதாரணத்திற்கு பிஎஸ்எல்வி ராக்கெட்டை எடுத்துக் கொள்ளுங்கள். இது நான்கு நிலைகளால் ஆனது. அதாவது நான்கு பாகங்கள். ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு பாகம் கழன்று விழுந்துவிடும். இறுதியில் செயற்கைக் கோள் மட்டும் அதன் சுற்றுப்பாதையில் செலுத்தப்படும்.

ஏன் பல கட்டங்களாக ராக்கெட் உருவாக்கப்பட வேண்டும்? ஒரே கட்டமாக அது உருவாக்கப் பட்டால் செயற்கைக் கோளைச் செலுத்த தேவையான வேகத்தை ராக்கெட்டால் ஏற்படுத்த முடியாது. அதனால் தான் ராக்கெட்டைப் பல கட்டங்கள் கொண்டதாகத் தயாரிக்கிறார்கள். மேலும் பூமியை விட்டு வெளியே செல்லச் செல்ல அதிக எடையைச் சுமக்க அதிக எரிபொருள் தேவை. ஆகவே உயரம் செல்லும்போது தேவையற்ற ஒவ்வொரு பாகத்தைக் கழற்றிவிழவைத்து விட்டால் ராக்கெட்டின் எடை குறையும் எரிபொருள் தேவையையும் சமாளிக்கலாம். அவ்வளவுதான்.

விண்வெளித் திட்டத்தை இந்தியாவில் முன்னெடுத்தவர் டாக்டர் விக்ரம் சாராபாய். அதனால்தான் இவரை இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை எனச் சொல்கிறோம். இந்தியாவில் 1972-ல் விண்வெளி ஆராய்ச்சித் துறை தனியாக நிறுவப்பட்டது. முதலில் இந்தியா 1975-ல் ஆர்யபட்டா என்ற செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியது. அதைத் தொடர்ந்து பாஸ்கரா, ரோகிணி, இன்சாட் போன்ற செயற்கைக் கோள்களை நிலைநிறுத்தினார்கள்.

துருவ செயற்கோள்களை ஏவும் ராக்கெட்டான பிஎஸ்எல்வியை உருவாக்கும் முயற்சி 1990-ல் தொடங்கியது. திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பிஎஸ்எல்வி வடிவமைக்கப்பட்டது. பிஎஸ்எல்வி வகையில் இதுவரை 25 ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளன. கடந்த வெள்ளி அன்று இந்தியா பிஎஸ்எல்வி சி24 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

முதலில் பிஎஸ்எல்வி ராக்கெட் 1993-ம் ஆண்டு செப்டம்பரில் ஏவப்பட்டது. இந்த முதல் முயற்சி வெற்றிபெறவில்லை. இந்த ராக்கெட்டில் இணைக்கப் பட்டிருந்த ஐஆர்எஸ் 1 ஈ செயற்கைக் கோளுடன் இது வங்காள விரிகுடாவில் விழுந்தது. ஆனாலும் இந்தியா சோர்வடையாமலும் தனது முயற்சியைக் கைவிடாமலும் இருந்தது. பல படிகளைக் கடந்துவந்த இந்தியா சந்திரயான், மங்கள்யான் முதலிய விண்கலங்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திச் சாதனை படைத்தது. சந்திரயான் நிலவையும் மங்கள்யான் செவ்வாய் கிரகத்தையும் ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட்டது.

மங்கள்யான் 68 கோடி கி.மீ தூரம் பயணம் செய்து, 300 நாட்களுக்குப் பின்னர் 2014 செப்டம்பர் 24 அன்று செவ்வாய் கிரகத்தைச் சுற்றியுள்ள தனது சுற்றுவட்டப் பாதையை அடையும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். தனது சுற்றுப்பாதையில் மங்கள்யான் ஆறு மாதங்கள் செவ்வாயை வலம் வரும். செவ்வாயில் கனிமங்களை மதிப்பிடவும் தண்ணீர், மீத்தேன், செவ்வாயின் சூழல் போன்றவற்றைக் கண்டறியவும் மங்கள்யான் உதவும்.

தற்போது அனுப்பப்பட்ட 1,432 கிலோ எடையுள்ள ஐஆர்என்எஸ்எஸ் 1பீ செயற்கைக் கோள் தரை, ஆகாயம், கடல் மார்க்கமான போக்குவரத்து, பேரிடர் மேலாண்மை போன்றவற்றுக்கு உதவும். இந்தச் செயற்கைக்கோள் பத்து ஆண்டுக் காலம் தனது சுற்றுப்பாதையில் இயங்கித் தேவையான தகவல்களைத் திரட்டிப் பூமிக்கு அனுப்பும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x