Published : 26 Dec 2014 01:18 PM
Last Updated : 26 Dec 2014 01:18 PM

சினிமா காஸ்ட்யூமரான ரசிகன்

நம் அன்றாட வாழ்க்கையிலேயே ஆடை, அலங்காரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டோம். சினிமா பிரபலங்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்? உடை, அணிகலன்களின் அதிகக் கவனம் செலுத்தும் துறை அது. இதனாலேயே காஸ்ட்யூம் டிசைனர்களுக்கு முக்கியத்துவமும், வரவேற்பும் அதிகரித்திருக்கிறது. கொஞ்சம் கலர் சென்ஸும், ரசனையும், உழைப்பும் இருந்தால் போதுமா? வேறென்ன வேண்டும் இந்தத் துறையில் ஜொலிக்க? இது பற்றி ராஜா ராணி, பிரம்மன், மான்கராத்தே, மேகா போன்ற படங்களில் பணியாற்றி வளர்ந்து வரும் காஸ்ட்யூம் டிசைனரான சத்யாவிடம் பேசினோம்.

தியேட்டர்கூட இல்லாத கிராமத்தில் இருந்து வந்தவர் நீங்கள். எப்படி சினிமாவில் அதுவும் இந்தத் துறையில் ஆர்வம் வந்தது?

என்னோட சொந்த ஊர் ராமநாதபுரத்தில் உள்ள தேவிப்பட்டினம். 20 கிலோ மீட்டர் நடந்து போய்தான் சினிமாவே பார்க்க முடியும். விஜய் சாரோட டிரெஸிங்கை ரொம்பவே ரசிச்சுப் பார்ப்பேன். எனக்குச் சின்ன வயசுல இருந்தே சினிமாலதான் வேல பார்க்கணும்னுதான் ஆசை. சரியா சொல்லணும்னா நான் பத்தாவது படிக்கும்போதுதான் காஸ்ட்யூம் டிசைனரா வேலை பார்க்க முடிவு பண்ணினேன். உடனே +2 முடிச்சுட்டு கோயம்புத்தூர்ல ஒரு தனியார் காலேஜ்ல காஸ்ட்யூம் டிசைனிங் படிச்சேன். மூணு வருஷம் போனதே தெரியல. காலேஜ் முடிச்ச உடனே ஊருக்குக் கூடப்போகல. அப்படியே மெட்ராஸ்க்கு பஸ் ஏறிட்டேன்.

தமிழ் சினிமால இருக்கற முக்கால்வாசி காஸ்ட்யூம் டிசைனர்கள் சினிமா பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டவங்க. அதில் நீங்க எப்படி?

பேசிக்கா நான் ஒரு கிரிக்கெட் பிளேயர். அஸ்வின், அபினவ் முகுந்த்கூடலாம் விளையாடிருக்கேன். ஒரு தடவ சேப்பாக்கத்துக்கு கேம்ப் வந்திருந்தேன். அங்க என்கூட விளையாடின ஒரு பையனோட அப்பா கேமராமேன். கேம்ப் முடிஞ்ச பிறகும் அவர்கூட டச்ல இருந்தேன். அவர் மூலமா ‘மூன்று பேர் மூன்று காதல்’ படத்துல வொர்க் பண்ணேன். அதைப் பார்த்துட்டு வந்த வாய்ப்புதான் ‘ராஜா ராணி’யில் நஸ்ரியாக்கு காஸ்ட்யூம டிசைனர். அடுத்து மான்கராத்தே படம். அப்படியே படிப்படியா அடுத்த லெவலுக்குப் போய்ட்டு இருக்கேன்.

சுப்ரமணியபுரம், நாடோடிகள், சுந்தர பாண்டியன் படங்கள் மூலமா கிராமத்து ரசிகர்கள்கிட்ட வலுவா தன் அடையாளத்தை நிலைநாட்டினவர் சசிக்குமார். எப்படி பிரம்மன் படத்துக்காக அவரை டோட்டலா மாத்துனீங்க?

இந்தக் கேள்வி மூலமா எல்லார்க்கும் ஒரு விஷயம் சொல்லிக்க ஆசைப்படறேன். சசி சாரோட வார்ட்ரோபைத் திறந்து பாக்கற உரிமை எனக்கு இருக்கு. அவர்கிட்ட ஒரு லுங்கிகூட கிடையாது. செம ஸ்டைலிஷான பர்ஸன். எப்பயும் டீ-ஷர்ட், ஷார்ட்ஸ்தான் போட்ருப்பார். ஆனா படங்கள்ல ஆடியன்ஸ் மனசுல கிராமத்து கெட்டப்லயே ஃபிக்ஸ் ஆயிட்டார். அதை மாத்தி அவரோட இயல்பான கேரக்டரையே காமிக்கலாம்னு முடிவு பண்ணோம். அதுதான் நடந்தது. ஆனா படம் சரியாகப் போகாததால உடைமேல எதிர்மறை விமர்சனங்கள் வந்தன.

சிவகார்த்திகேயனுடனான ‘ரஜினி முருகன்’ பட அனுபவங்கள் பத்திச் சொல்லுங்களேன்?

இது வருத்தப்படாத வாலிபர் சங்கம் பார்ட்-2. சிவா சார் இதுல பயங்கரமா காமெடி பண்ணிருக்கார். கிராமத்து சப்ஜெக்ட் படம். ரொம்ப ஜாலியா ஷூட்டிங் போய்கிட்டு இருக்கு. மான்கராத்தே பட டைம்ல ரொம்ப ஒல்லியா இருந்தார் சிவா. கொஞ்சம் மேன்லி ஆகனும்னு சொன்னேன். சின்னப்பையன்தானே மொதல்ல கண்டுக்கல. அப்புறம் பிரமாதமா வொர்க்அவுட் பண்ணி ரொம்ப ஸ்டைலிஷா வந்து நின்னார்.

ஒரு படத்துல ஹீரோவோட தோற்றத்தை எப்படித் தீர்மானிக்கறீங்க?

கதைக்கு என்ன தேவையோ அதை வச்சுத்தான். காலேஜ் பையனா இருந்தா ஒருமாதிரி காஸ்ட்யூம். அதுவும் ஆர்ட்ஸ் படிக்கிறவனா இல்லை இன்ஜினீயரிங்கான்னு பாக்கணும். கேமராமேன் என்னென்ன கலர்ஸ் வேணும்னு சொல்லுவார். சில சமயங்கள்ல ஆர்ட் டைரக்டரும் முடிவு செய்வார்.

உங்க வேலையைப் பார்த்துட்டு யார்யார்கிட்ட இருந்தெல்லாம் கமெண்டுகள் வந்துச்சு?

பிரம்மன் ரிலீஸான நேரம். கலைஞர் டிவில ஒரு லைவ் புரொகிராம் போய்க்கிட்டு இருந்துச்சு. அப்போ தொகுப்பாளர் கேட்டப்போ சசி சார் இந்த கெட்டப் மாற்றம் எல்லாம் சத்யாங்கற சின்னப் பையனால்தான்னு சொன்னார். அவ்ளோ சீக்கிரமா யாரையும் பாராட்டாதவர் அவர். சில வருஷங்களுக்கு முன்னாடி அவரைப் பார்க்கப்போயிருக்கேன். உள்ளயே விடல. ஆனா இப்போ நினைச்ச நேரத்துல அப்பாயிண்ட்மெண்ட் இல்லாமலேயே பாக்க முடியும்.

ம்ம்.. ஒரு நாள் ‘சண்டமாருதம்’ ஷூட்டிங்ல இருந்தேன். சிவா போன் பண்ணியிருந்தார். மான் கராத்தே பைக் சீன்ல நான் போட்டிருந்த காஸ்ட்யூமை ஒருத்தர் ரொம்பப் பாராட்டினார்னு சொன்னார். யார்னு கேட்டதுக்கு, அவர் வாய்ஸ்லயே பேசிக்காட்டினார். அப்படியே ஷாக்காயிட்டேன். அஜித் சார் வாய்ஸ் அது.

ஒரே சமயத்தில் எப்படி வேறு வேறு படங்களில் வொர்க் பண்றது கஷ்டமா இல்லியா? உடைகளில் அது குழப்பத்தை ஏற்படுத்துமே?

கண்டிப்பா. சின்னச்சின்ன மனக்கசப்புகள் எல்லாம் வரத்தான் செய்யும். ஆனா அசிஸ்டெண்ட்கள் வச்சு சமாளிச்சுப்பேன். முன்னாடியே ஹீரோ, ஹீரோயின்கள், முக்கியக் கதாபாத்திரங்களுக்கு டிரையல் பாத்துட்டுதான் ஷூட்டிங் போவோம். ராஜா ராணி மூவி பக்காவா ப்ளான் பண்ணி எடுத்தது. நமக்குப் பிடிச்ச உடைகள் வேறு சில படங்களில் ரிஃப்ளெக்ட் ஆகும். அதைத் தவிர்க்க முயற்சி பண்ணனும்.

உங்களோட எதிர்கால கனவுகள், படங்கள்?

எனக்கு பீரியட் ஃபிலிம் பண்ண ஆசை. இப்போ ரஜினி முருகன், ரோமியோ ஜுலியட், சென்னை டூ சிங்கப்பூர் இன்னொரு பெயரிடப்படாத படத்துல வொர்க் பண்ணிட்டிருக்கேன். பெருசா கோல் எதுவும் இல்ல. இப்போ பண்ற வொர்க்கை பர்ஃபெக்ட்டா பண்ணனும். அவ்வளவுதான்..!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x