Last Updated : 16 Dec, 2014 04:05 PM

 

Published : 16 Dec 2014 04:05 PM
Last Updated : 16 Dec 2014 04:05 PM

சின்ன வரலாறும் பெரிய வரலாறும்

வானியல் என்பது வெறுமனே பூமிக்கு வெளியே என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் துறை மட்டும் அல்ல. அதன் ஆய்வு முடிவுகள் மற்ற துறைகளையும் பாதிக்கும்படியாக மாறிக்கொண்டு இருக்கிறது.

மாறும் வரலாறு

அப்படித் தற்போது அதிரடி மாற்றத்துக்கு உள்ளாவது வரலாற்றுத் துறை. கல்வி நிறுவனங்களில் வரலாறு சொல்லித்தரப்படுவது தொடர்ந்து காலப்போக்கில் மாறிவந்துள்ளது. இனரீதியான வரலாறு, மதரீதியான வரலாறு எல்லாம் தற்போது மாறி வருகிறது. ஆனாலும் இது சின்ன வரலாறுதான். பெரிய வரலாறு அல்ல. என்ற விவாதம் நடைபெற்றுவருகிறது.

அமெரிக்காவில் பிறந்த வரலாற்று பேராசிரியர் டேவிட் கிறிஸ்டியன் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். அவர் ‘பிக் ஹிஸ்ட்ரி’ எனும் கல்விப் பாடத்திட்டத்தைப் பரப்பி வருகிறார்.

மனித வரலாற்றை கிறிஸ்து பிறந்த காலகட்டத்துக்கு முன்னால் ஐயாயிரம் வருடங்களிலிருந்து நடைபெற்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பாகக் கல்வி நிறுவனங்கள் தற்போது பொதுவாகக் கற்பிக்கின்றன.

இந்த முறை போதுமானதல்ல என்கிறார் டேவிட். உண்மையான வரலாறானது பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் பற்றிப் பெரும்பாலான விஞ்ஞானிகள் ஏற்றுக்கொண்டுள்ள பெரும் வெடிப்பு எனும் கோட்பாட்டின் அடிப்படையில் இருக்க வேண்டும் எனப் பல கூட்டங்களில் அவர் பேசி வருகிறார்.

புதிய வரலாறு

தொல்லியல் ஆராய்ச்சித் துறை, உயிரியல், மானுடவியல், சுற்றுச்சூழலியல், விண்வெளியியல், உள்ளிட்ட பல்வேறு அறிவுத்துறைகளில் கண்டுபிடிக்கப்படுகிற புதிய தகவல்களின் அடிப்படையில் இந்தப் பெரிய வரலாற்றுக்கான பாடத்திட்டத்தையும் அவர் உருவாக்கியுள்ளார்.

தற்போதைய வரலாற்றுப்பாடம் மைக்ரோ வரலாறு எனப்படுகிறது. மைக்ரோ வரலாறு ஏழாயிரம் முதல் பத்தாயிரம் ஆண்டுகள் வரையான மனித வரலாற்றை ஆராய்கிறது. அது மனித இனத்தின் மீது மட்டும் கவனம் செலுத்துகிறது. எழுதப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் பொதுவாக போதிக்கப்படுகிறது.

பெரிய வரலாறு என்று பேராசிரியர் டேவிட் முன்வைக்கும் பாடத்திட்டம் மாக்ரோ வரலாறு எனப்படுகிறது. அது சுமார் 1400 கோடி வருடங்களுக்கு முன்பு உருவானதாக அறியப்படுகிற பிரபஞ்சத்தின் தோற்றத்திலிருந்து தொடங்குகிறது. இந்த பிரபஞ்சத்தின் பின்னணியில் மனித இனம் எவ்வாறு உருவாகி அதில் பொருந்தி உள்ளது என்பதை அது ஆராய்கிறது. மனிதரின் எதிர்காலம் பற்றிய ஆய்வுகளுக்கு அது இடமளிக்கிறது. தனது பாடத்திட்டம் பற்றி Maps of Time: An Introduction to Big History எனும் நூல் உள்ளிட்ட நூல்களையும் அவர் எழுதியுள்ளார்.

இணைக்கும் இணையம்

இந்த முயற்சியை அறிந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிபர் பில்கேட்ஸ் உதவுவதற்கு முன்வந்துள்ளார். அவர் இதற்காக ஒரு இணையதளத்தையும் உருவாக்கி உள்ளார் (https://www.bighistoryproject.com).

இந்தத் திட்டப்பணியில் ஆஸ்திரேலியா, அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர்களும் இணைந்து பணியாற்றுகின்றனர்.

இந்த இணையதளத்தில் ஒருவர் மாணவராகவோ ஆசிரியராகவோ இணைந்து கொள்ளலாம். பள்ளிகளும் இணைந்து கொள்ளலாம். ஆரம்பத்தில் அமெரிக்காவின் ஏழு பள்ளிகள் சேர்ந்தன. ஆஸ்திரேலியாவிலும் 26 பள்ளிகள் இணைந்துள்ளன. இந்தப் பாடத்திட்டம் வேகமாகப் பரவிவருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x