

அமர்த்திய சென் பிறந்தநாள் - நவம்பர் 3
அதிகாலையில் எழுந்துவிட்ட அந்தப் பொருளாதார அறிஞருக்கு காபி தேவையாயிருந்த நேரத்தில், அவரது வீட்டின் தொலைபேசி மணி ஒலிக்கிறது. அகால நேரத்தின் அழைப்பெல்லாம் துயரச் செய்தியைத் தாங்கிவருவதே வழக்கம் என்பதால் சிறிது பதற்றத்துடன் அதை எதிர்கொண்டார். ஆனால், அந்தச் செய்தி அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அந்த அறிஞருக்குப் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு கிடைத்திருப்பதை அறிவித்தது அந்த அழைப்பு. அது 1998-ம் ஆண்டு. அந்த அறிஞர் அமர்த்திய சென்.
பொருளாதார பேராசிரியர்
சேமநலப் பொருளாதாரத் (welfare economics) துறையில் அவருடைய பங்களிப்பைக் கவுரவிக்கும் விதமாகவே அவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் விஸ்வபாரதி பல்கலைக்கழகம் நிறுவப்பட்டிருந்த சாந்தி நிகேதனில் 1933-ம் ஆண்டு நவம்பர் 3 அன்று பிறந்தார் அமர்த்திய சென். அவருடைய தந்தை அஷுதோஷ் சென் அப்பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராகப் பணியாற்றினார். அவரது தாய் அமிதா சென்னும் அப்பல்கலைக்கழகத்தின் மாணவியே.
தொடக்கத்தில் அமர்த்திய சென்னும் அந்தப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். பின்னர் கல்கத்தாவிலிருந்த பிரசிடென்சி கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தார். அதன் பின்னர் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1959-ல் ஆய்வுப் படிப்பை முடித்து டாக்டர் பட்டம் பெற்றார்.
படிப்பு முடித்த பின்னர் கேம்பிரிட்ஜிலும் கல்கத்தாவிலும் இருந்த பல்கலைக்கழகங்களிலும் டெல்லி, ஆக்ஸ்ஃபோர்டு, ஹார்வர்டு ஆகிய பல்கலைக் கழகங்களிலும், லண்டன் பொருளாதாரக் கல்லூரியிலும் அவர் பணிபுரிந்துள்ளார். இதுதவிர அநேகக் கல்வி நிறுவனங்களிலும் பொருளாதாரக் கல்வியைப் பயிற்றுவித்துள்ளார். நோபல் பரிசு பெற்றபோது டிரினிட்டி பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.
வறுமையின் பொருளாதாரம்
சிறுவயதில் சமஸ்கிருதம், கணிதம், இயற்பியல் ஆகிய பிரிவுகளில் சேரலாமா என்று அலைபாய்ந்த மனம், பொருளாதாரப் பாடத்தில் நிலைபெற்றது என்கிறார் அமர்த்திய சென். எதைப் படிக்கலாம் என்பதில் ஆரம்பத்தில் தீர்வுக்கு வரமுடியாத குழப்பம் இருந்தாலும், படித்து முடிந்த பின்னர் கல்வி கற்பிக்க வேண்டும் என்பதிலும் ஆய்வு தொடர்பான பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதிலும் அவர் தீர்மானமாகவே இருந்தார்.
அவர் சிறுவனாக டாக்காவில் இருந்தபோது நடைபெற்ற ஒரு சம்பவம் அமர்த்திய சென்னை ஆழமாகப் பாதித்துள்ளது. இஸ்லாமியக் கூலித் தொழிலாளியான காதர் மியா என்பவர் குடும்பத்திற்கான வருமானத்தை ஈட்டும் பொருட்டு அந்நகரில் இந்து முஸ்லிம் கலவரம் நடைபெற்ற சூழலில் வேலை தேடி வெளியே கிளம்பியுள்ளார். அப்போது அவரை யாரோ கத்தியால் முதுகில் குத்திவிட்டனர். அவர் ரத்தம் வடிய வடிய அழுதவாறே அமர்த்திய சென்னின் வீட்டைக் கடந்துள்ளார்.
அவரது கதையைக் கேட்ட அமர்த்திய சென், வறுமைக்கும் பொருளாதாரத்திற்குமான தொடர்பு குறித்து யோசிக்கத் தொடங்கினார். இந்தச் சிந்தனை தான் அவரை மக்களுக்கு நலம் பயக்கும் பொருளாதாரத்தில் முழுமூச்சாக ஈடுபட வைத்தது.