Last Updated : 14 Jul, 2019 09:51 AM

 

Published : 14 Jul 2019 09:51 AM
Last Updated : 14 Jul 2019 09:51 AM

பக்கத்து வீடு: மார்தா மேஜிக்!

மார்தா. கால்பந்து விளையாட்டில் எல்லாக் காலத்துக்குமான மிகச் சிறந்த வீராங்கனை. ‘பாவாடை அணிந்த பீலே’ என்று அழைக்கப்படுபவர். இதைக் கால்பந்து விளையாட்டின் மன்னராகக் கருதப்படும் பீலேவும் அங்கீகரித்திருக்கிறார்.

மகளிர் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகளில் இதுவரை 17 கோல்களை அடித்த பெருமைக்குரியவர். மகளிர் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியின் சிறந்த விளையாட்டு வீராங்கனை என்ற பட்டத்தை ஆறு முறை பெற்றிருக்கிறார்! கால்பந்து விளையாட்டின் உச்சபட்ச அங்கீகாரமான கோல்டன் பால், கோல்டன் ஷூ ஆகிய விருதுகளை 22 வயதுக்குள் பெற்றிருக்கிறார்!

யார் இவர்?

பிரேசில் நாட்டின் ஏழ்மையான நகரத்தில், ஏழ்மையான பெற்றோருக்கு நான்காவது குழந்தையாகப் பிறந்தார் மார்தா. சில மாதங்களிலேயே அப்பா விவாகரத்து செய்துவிட்டுச் சென்றுவிட்டார். நான்கு குழந்தைகளையும் வளர்ப்பதற்காக மார்தாவின் அம்மா நீண்ட நேரம் வேலை செய்வார்.

பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த மார்தாவுக்கு, தெருக்களில் கால்பந்து விளையாடும் சிறுவர்களை வேடிக்கைப் பார்ப்பதுதான் பொழுதுபோக்கு. கால்பந்து விளையாட்டில் பெண்களை அனுமதிக்காத காலம் அது.

தன்னையும் விளையாட்டில் சேர்த்துக்கொள்ளும்படி கேட்டார். ‘நீ ஒரு பெண். உன்னைச் சேர்த்துக்க முடியாது’ என்று சொல்லிவிட்டார்கள் பையன்கள். பிளாஸ்டிக் பைகளுக்குள் துணிகளை அடைத்து, கால்பந்து போன்று உருவாக்கித் தனியே விளையாட ஆரம்பித்தார் மார்தா. ஒரு கட்டத்தில் சிறுவர்கள்

மார்தாவை விளை யாட்டில் சேர்த்துக் கொண்டனர். கால் பந்து விளையாடு வதற்காகவே பிறந்தவர்போல், விரைவிலேயே அத்தனை நுணுக் கங்களையும் கற்றுத் தேர்ந்தார். மார்தாவின் தனித் துவம் எல்லோரையும் கவனிக்கச் செய்தது. பலரும்  ரியோ டி ஜெனிரோவுக்குச் சென்றால், தேசிய மகளிர் கால்பந்து அணியில் விளையாடலாம் என்று யோசனை சொன்னார்கள்.

நல்ல ஷூ கிடையாது. சத்தான உணவு கிடையாது. தங்குவதற்கு இடம் கிடையாது. பணம் கிடையாது. குடும்பத்தை விட்டுவிட்டுத் தொலைதூரத்துக்குத் தனியாகச் சென்று என்ன செய்ய முடியும் என்று நினைத்தார் மார்தா.

அப்போது ரியோ டி ஜெனிரோவில் வசித்த நண்பர் மார்கோஸ், எதைப் பற்றியும் யோசிக்காமல் மார்தாவைப் பேருந்தில் ஏறச் சொன்னார். பேருந்தில் ஏறுவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் மார்தா இருந்தபோது, பேருந்து நகர ஆரம்பித்தது.

‘வாழ்க்கையில் முன்னேற இதைவிட்டால் வேறு நல்ல வாய்ப்பு கிடைக்காது. தயங்காதே மார்தா. பாரபட்சத்துக்கு எதிராகப் போராடு. பாகுபாடுகளுக்கு எதிராகப் போராடு. வறுமைக்கு எதிராகப் போராடு. ஆதரவு போதாமைக்கு எதிராகப் போராடு.

பெண் என்ற ஒரே காரணத்துக்காக மறுக்கப்படும் அத்தனை விஷயங்களுக்கு எதிராகவும் போராடு. இது உனக்கான போராட்டம் மட்டுமல்ல; உன் பின்னால் வரக்கூடிய சந்ததியினருக்கான போராட்டம். போராடு மார்தா போராடு’ என்று யாரோ மனதுக்குள் சொல்வதுபோல் இருந்தது.

வாழ்க்கையை மாற்றிய பயணம்

ஓடிச் சென்று பேருந்தில் கால் வைத்தார் மார்தா. அந்தப் பேருந்து ரியோ டி ஜெனிரோவுக்கு அழைத்துப் போகும் என்றுதான் நினைத்தார். ஆனால், அது எங்கே அழைத்துச் செல்லப்போகிறது என்பது அப்போது அவருக்குத் தெரியாது.

19 வயதுக்குட்பட்ட வாஸ்கோடகாமா மகளிர் கால்பந்து அணியில் மார்தாவைச் சேர்த்துவிட்டார் மார்கோஸ். அங்கே தேர்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெறாவிட்டால் மீண்டும் ஊருக்கே திரும்பிவிட வேண்டும். பயத்தில் இருந்த மார்தாவுக்கு நம்பிக்கை அளித்து, தேர்வுக்கு அனுப்பி வைத்தார் மார்கோஸ்.

அணிக்குத் தேர்வானார். விரைவிலேயே அந்த அணியின் பயிற்சியாளர், மார்தாவிடம் மிகச் சிறந்த திறமை இருக்கிறது என்பதைக் கண்டுகொண்டார். தனிக் கவனம் செலுத்தி, பயிற்சியில் ஈடுபட வைத்தார். இனிமேல் வெற்றுக் கால்களில் பயிற்சி செய்யக் கூடாது என்று சொல்லிவிட்டார்.

ஷூ வாங்குவதற்குப் பணமில்லை. ஷுவைக்கூட இரவல் கேட்க முடியுமா என்ன? மார்கோஸால் மிகச் சாதாரண ஷூவை மட்டுமே வாங்கிக் கொடுக்க முடிந்தது. அது சற்றுப் பெரிதாக இருந்தது. ஓடும்போது கழன்று விழுந்தது. காகிதங்களைச் சுருட்டி, ஷூவுக்குள் அடைத்துக்கொண்டு பயிற்சியில் ஈடுபட்டார் மார்தா.

தனக்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் கவனமாகவும் சிரத்தையோடும் பயன்படுத்தினார். அணியில் உள்ள சக வீராங்கனைகள், எதிர் அணியினர் என்று பலராலும் கிண்டலுக்கும் ஏளனத்துக்கும் உள்ளானார்.

அதனால் யாரிடமும் பேசுவதற்கே தயங்கினார் மார்தா. அந்த நேரத்தில், “வாயால் பேச வேண்டிய அவசியமே இல்லை. மைதானத்தில் உன் ஆட்டத்தின் மூலம் பேச வேண்டும். அதில் மட்டும் கவனம் செலுத்து. பிறகு, எல்லோரும் உன்னைத் தேடி வந்து பேசுவார்கள்” என்றார் மார்கோஸ்.

திரைப்படங்களில் அடுத்தடுத்த காட்சிகளில் முன்னேறுவது போன்று, மார்தாவும் தன் கடின உழைப்பால் மேலே மேலே சென்றுகொண்டிருந்தார். வெளிநாட்டு அணிகளுடன் விளையாடினார்.

திரும்பிப் பார்த்த உலகம்

2006-ம் ஆண்டு முதன்முறையாக உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிக்குள் நுழைந்தார். முதல் போட்டியிலேயே அழுத்தமாக முத்திரை பதித்து, அந்த ஆண்டு உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியின் சிறந்த வீராங்கனை என்ற பட்டத்தைப் பெற்றார்.

14 வயதில் ஊரை விட்டு வெளியேறிய மார்தா, 19-வது வயதில் சாதனையாளராக ஊருக்குத் திரும்பினர். பெண்கள் கால்பந்து விளையாடக் கூடாது என்று எந்த ஊர் சொன்னதோ, அதே ஊர் ஆரவாரத்துடன் மார்தாவை வரவேற்றது.

அதிககோல்களை அடித்தவர்

2006 முதல் 2010 வரை தொடர்ந்து ஐந்து முறை ‘உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியின் ஆண்டின் சிறந்த வீராங்கனை’ என்ற பட்டங்களைப் பெற்றார். கால்பந்து விளையாடுவதற்காகவே பிறந்தவர் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக கோல்களை அடித்தவர் என்ற சாதனையையும் படைத்தார். பிரேசில், ஸ்வீடன், அமெரிக்கா ஆகிய கிளப் அணிகளுக்காக விளையாடிவருகிறார். 2011-ம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபையின் நல்லெண்ணத் தூதராகவும் இருந்துவருகிறார் மார்தா.

“எனக்கு ரோல்மாடல் யார் என்று கேட்கிறார்கள். கால்பந்தில் நான் யாரைப் பார்த்தும் கால் பதிக்கவில்லை. சிறு நகரில் தெருவிளையாட்டைப் பார்த்து வளர்ந்தவள். நான்கு குழந்தைகளைத் தனியாக வளர்க்க வேண்டிய கட்டாயம் அம்மாவுக்கு. அதிகாலை ஐந்து மணிக்குத் தோட்ட வேலைக்குச் செல்லும் அம்மா, இரவுதான் திரும்புவார்.

அத்தனை கஷ்டங்களையும் தாங்கிக்கொண்டு, தான் பெற்ற குழந்தைகளை நன்றாக வளர்த்தார். பணம்தான் இல்லையே தவிர, அவரிடம் ஏராளமான அன்பு இருந்தது. என் அம்மாவிடம் இருந்துதான் இந்தத் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் பெற்றேன். உழைப்பைக் கற்றுக்கொண்டேன். அவர்தான் என் ரோல்மாடல்.

தேசிய அணியில் விளையாடியபோதுகூட என்னிடம் நல்ல ஷூ கிடையாது. இன்று எனக்கு ஷூ கொடுக்க சர்வதேச நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. கால்பந்து என்ற இந்த விளையாட்டுதான் எனக்கு அடையாளத்தையும். அங்கீகாரத்தையும் கொடுத்திருக்கிறது.

சாதனையாளராக மாற்றியிருக்கிறது. எனக்கு ஒரு நண்பர் வழிகாட்டினார்; கால்பந்து என்னை உயரத்துக்குக் கொண்டு சென்றது. அதேபோல் நானும் பெண்களுக்குக் கல்வி, விளையாட்டு, வேலை வாய்ப்பு போன்றவற்றில் வழிகாட்ட வேண்டும் என்று பணியாற்றிக்கொண்டிருக்கிறேன்.

ஐக்கிய நாடுகள் சபையின் நல்லெண்ணத் தூதர் பொறுப்பையும் இதற்காகவே ஏற்றுக்கொண்டேன். ஒரு சாதாரண மார்தாவாலேயே சாதனையாளராக முடிந்தால், உங்களாலும் முடியும் என்று பெண்களுக்குத் தன்னம்பிக்கை அளித்துவருகிறேன். சமீப காலமாக ஆண்-பெண் சமத்துவம், பெண்களுக்கான உரிமைகள் குறித்துக் கவனம் செலுத்திவருகிறேன்” என்கிறார் மார்தா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x