Published : 12 Jul 2019 10:48 am

Updated : 12 Jul 2019 10:48 am

 

Published : 12 Jul 2019 10:48 AM
Last Updated : 12 Jul 2019 10:48 AM

தரைக்கு வந்த தாரகை 21: மணமகளே வருக!

21

பானுமதி சென்ற ரிக் ஷா வண்டி அவர் வாழ்க்கையைப் போலவே எதிர்பாராத திருப்பங்களின் ஊடாக விரைந்துகொண்டிருந்தது. அவர் விவரித்த விதமோ ஒரு சஸ்பென்ஸ் திரில்லர்போல இருந்தது.

“நான் சென்ற ரிக் ஷா, மயிலை ரங்கநாதன் தெருவில் நான் தங்க வைக்கப்பட வேண்டிய வீட்டுக்கு முன்னாலேயே நின்றுவிட்டது. (நான் எந்த வீட்டுக்குச் செல்கிறேன் என்று சொல்லாமல் இருக்கவே இந்த ஏற்பாடு). கமலம்மா என்னை வீட்டுக்குள் அழைத்துப் போனார்.


அங்கே எனக்கு முன்னதாகவே ராமகிருஷ்ணாவும் அவர் நண்பர்களும் இருந்தார்கள். திருமணத்தை எந்தக் கோயிலில் வைத்து நடத்துவது என்று தீவிரமான விவாதம் நடந்துகொண்டிருந்தது. அந்தக் கோயில் அப்பாவுக்குத் தெரியாத கோயிலாக இருக்க வேண்டுமே. கடைசியாக பைராகி

மடத்துத் தெருவில் இருந்த வெங்கடேஸ்வரஸ்வாமி கோயில் என்று முடிவானது. அது கோடவுன் தெருவின் அருகில் இருந்தது. அங்கேதான் பேராசிரியர் ராமானுஜத்தின் வீடும் இருந்தது.

ஆர்.கே.யும் அவர் நண்பர்களும் ஐயரைப் பார்த்து ஆகஸ்டில் வெள்ளி மற்றும் ஞாயிறுக்கிழமைகள் முகூர்த்தத்துக்கு ஏற்றவை என நாள் குறித்துக் கொண்டு வந்தார்கள். திருமதி வெங்கடஸ்வாமி தன்னுடைய புதுப் புடவையைக் கொடுத்து உடுத்திக்கொள்ளச் செய்தார். அவருடைய ஒட்டியாணம், இன்னும் நகைகள் எல்லாம் போட்டு எனக்கு அலங்காரம் செய்வித்தார்.

வீட்டிலிருந்து வரும்போது நான் எவ்விதமான நகையும் அணிந்து வரவில்லை. கட்டிய புடவை யோடுதான் வந்தேன். இங்கே நடக்கிற ஏற்பாடுகளைப் பார்த்தால் இந்தக் கல்யாணம் தெய்வசித்தம்போல் தெரிந்ததே ஒழிய மனிதத்தனத்தில் நடப்பதாகத் தெரியவில்லை.

“குழந்தாய் வா சாப்பிடு” என்று திருமதி வெங்கடஸ்வாமி அழைத்துப் போனார். அவரது வற்புறுத்தலின் காரணமாக இரண்டு வாய் சாப்பிட்டேன். ஒரு பக்கம் சந்தோஷம் மறுபக்கம் வருத்தம். என்னால் சாப்பிடவே முடியவில்லை.

திடீரென்று வெளியே பேச்சுக்குரல்கள் கேட்டன. கமலம்மா என்னிடம் ‘நீ வெளியே வராதே. உள்ளேயே இரு’ என்று எச்சரித்துவிட்டு, ‘யாரது?’ என்று கேட்டுக்கொண்டு வெளியே போனார். ‘அதொண்ணுமில்லை அம்மா. ஒரு ரிக்ஷாக்காரர் வந்து பச்சைப்புடவை கட்டின பெண் யாராவது இந்தப் பக்கம் வந்தார்களா?” என்று கேட்டார். ‘பச்சைப் புடவையும் பார்க்கலே சிவப்புப் புடவையும் பார்க்கலே’ என்று சொல்லி அனுப்பிவிட்டோம் என்றார் ஒருவர்.

த்ரில்லர் நிமிடங்கள்

அதே நேரம் சீதம்மாவும் வந்துவிட்டார். சீதம்மா பேசுவது வேடிக்கையாக இருக்கும். ராகம் போட்டு இழுத்து இழுத்துப் பேசுவார். சுற்றி இருப்பவர்களைச் சீண்டிவிட்டு அவர்கள் சிரிப்பதைப் பார்த்துத் தானும் சிரிப்பார். அவர் ஒரு ஜாலி டைப்.

கமலம்மா என்னைத் திரைகள் கட்டிய ரிக்சாவில் சீதம்மாவுடன் அனுப்பி விட்டார். ஆர்.கே.வுக்கும் அவர் நண்பர்களுக்கும் அடுத்தடுத்து செய்ய வேண்டிய வேலைகளைச் சொல்லி அனுப்பிவிட்டார். எல்லோரும் வேறு வேறு திசைகளில் சென்றார்கள்.

வெளியே இருட்டிவிட்டது. அந்த இருட்டில் முன்பின் தெரியாத சீதம்மாவுடன் மூடிய ரிக்‌ஷாவில் சென்று கொண்டிருந்தேன். சீதம்மாவின் தொண தொணப்பு வேறு. எதுவும் என் காதில் ஏறவில்லை. பழைய கதைதான். ரிக் ஷா நின்ற இடத்திலிருந்து நடந்தே அவர் வீட்டுக்குப் போனோம்.

நான் கேட்ட எந்தச் சந்தேகத்துக்கும் அவர் பதில் சொல்வதாக இல்லை. ‘நாம் பிஞ்சால சுப்பிரமணியம் தெரு போகணும். அங்கே இரவு ஒரு டாக்சி வரும். அதில் ஏறிக்கொண்டு திருவல்லிக்கேணியில் இருக்கும் என் தோழியின் வீட்டுக்குப் போகணும்’ என்றார். ‘டாக்சியில் ஏன் போக வேண்டும்? இப்போ நடந்து போவது எதற்காக? டாக்சி இங்கே வராதா?’ என்று கேட்டேன்.

சீதம்மா சிரித்தார். ‘கமலம்மாவின் திட்டப்படிதான் எல்லாம் நடக்குது. ஏன் எதுக்கு என்று கேக்கப்படாது. கவலைப்படாதே பொண்ணே. நான் இருக்கேன்’ என்று ராகம் போட்டுச் சொன்னார்.

சீதாம்மாவின் வீட்டுக்குப் போனோம். நள்ளிரவு பன்னிரண்டு மணி ஆகிவிட்டது. கவலையும் பயமும் என்னைப் பிடித்துக்கொண்டன. அப்போது லட்சுமண சாஸ்திரி என்பவர் வந்தார். அவர் கையில் கோட்டை மடித்து வைத்திருந்தார்.

இன்னொரு கையில் டர்பன் வைத்திருந்தார். ‘டாக்சி தயாராக இருக்கு. இந்த கோட்டை பெண்ணுக்குப் போட்டுவிட்டு டர்பன் தலைக்கு வைத்து அழைத்து வாருங்கள்’ என்றார். சீதம்மா புடவை மீது கோட்டை அணிவித்தார். என் தலை மீது டர்பனை வைத்தார். என்னை ஒரு தடவை பார்த்துவிட்டு ‘நல்லாத்தான் இருக்கு’ என்று சிரித்தார்.

ஏற்கெனவே குழம்பிப் போயிருந்த எனக்கு, இந்தப் புது ‘கெட்டப்’ எரிச்சலாக இருந்தது. இந்த நேரத்தில் கோபப்பட்டு என்ன பிரயோசனம்?

குடைந்தெடுத்த கேள்விகள்

என் மனசு போலவே வானத்திலும் மேகமூட்டம் கண்களில் கண்ணீர் திரள மறுபக்கம் வானம் பன்னீர் தூவ.. டாக்சி புறப்பட்டது. சற்று நேரத்தில் திருவல்லிக்கேணியில் ஒரு பங்களாவுக்கு முன்னால் கார் நின்றது. வாட்ச்மேன் வந்தார். தூக்கக் கலக்கத்தில் வந்து கேட்டைத் திறந்தார். கேட் கிரீச் என்ற சத்தத்துடன் திறந்தது.

ஒரு அறைக்குள் நானும் சீதம்மாவும் சென்றோம். சீதம்மா அறையின் கதவைத் தாளிட்டுவிட்டு வந்து படுத்தார். பிறகு பயங்கரமான குறட்டையுடன் தூங்க ஆரம்பித்தார்.

நான் டர்பனையும் கோட்டையும் கழற்றி வைத்தேன். நாங்கள் தங்கிய அறை குப்பையும் கூளமுமாக இருந்தது. புத்தகங்கள் அங்குமிங்கும் தாறுமாறாகக் கிடந்தன. எனக்குத் தூக்கம் வரவில்லை. பதினாறு மணி நேரத்தில் என் வாழ்க்கை என்னமாக மாறிவிட்டது! நம் கையில் ஒன்றுமில்லை. ஒரு கண்ணுக்குத் தெரியாத சக்தியின் கைகளில் நாம் வெறும் பொம்மைகள். அதுதான் நம்மை எப்படியல்லாமோ ஆட்டுவித்து வேடிக்கை பார்க்கிறது.

அந்தக் கமலம்மா யார்? என்னைச் சுற்றித் தோன்றியுள்ள இந்தப் புதிய கதாபாத்திரங்கள் எங்கிருந்து முளைத்தார்கள்? இந்த நாடகத்தை நடத்துவது யார்? அந்த சக்தி நடத்துகிற நாடகத்தில் என்னுடைய ரோல் என்ன? இதுவரை அப்பாவைத் தவிர வேறு உலகமே எனக்கில்லை. இன்றோ நான் விரும்பும் ஒருவரைத் திருமணம் செய்துகொள்ள வேறு உலகின் சோதனைகளுக்குள் ஆட்பட்டுவிட்டது ஏன்?

கேள்விகள் குடைய தலைசுற்றியது. கண்களை இறுக்க மூடிக்கொண்டேன். காலை குளிர்ந்த கடல்காற்று ஜன்னல் வழியே வந்து வீசியது. நாங்கள் சென்ற கார் கோடவுன் தெருவில் இருந்த ஒரு பழைய கட்டிடத்தின் முன்னால் நின்றது. நாங்கள் கதவைத் தட்டினோம். பேராசிரியர் ராமானுஜம் கதவைத் திறந்தார்.

புன்சிரிப்புடன் ‘காலை வணக்கம்..மணமகளே வருக’ என்று இரு கைகளை விரித்து நாடக பாணியில் வரவேற்றார். ‘ஆஹா சோகமாக முகத்தை வைத்துக் கொண்டது போதும். உன் அழகான சிரிப்பைச் சிந்து பார்க்கலாம். அவ்வளவுதான் இனி எங்கும் போக வேண்டாம்’ என்று சீதம்மா ராகம் போட்டு பேச எல்லோரும் சிரித்தார்கள்.

நான் மெலிதாகப் புன்னகைத்தேன்.

(தாரகை ஒளிரும்)

தொடர்புக்கு:

thanjavurkavirayar@gmail.comதரைக்கு வந்த தாரகைதமிழ் சினிமா தொடர்தமிழ் சினிமா பிளாஷ்பேக்தமிழ் சினிமா நினைவுகள்பானுமதி கதைபானுமதி வாழ்க்கைஇளவரசிபெண்களின் மனம்மணமகளே வருக

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

week-news

சேதி தெரியுமா?

இணைப்பிதழ்கள்

More From this Author

x