Last Updated : 07 Jul, 2019 09:42 AM

 

Published : 07 Jul 2019 09:42 AM
Last Updated : 07 Jul 2019 09:42 AM

இனி எல்லாம் நலமே 13: இரண்டுமே நல்லதல்ல

உடல் எடை என்பது உடல்நலத்தில் முக்கியமானது. எடை அதிகமாக இருந்தாலும் குறைவாக இருந்தாலும் பிரச்சினைதான்.

உடல் எடை அதிகமாக இருப்பதற்குக் காரணம் அதிகப்படியான உணவு. குறிப்பாக, அதிக கலோரி சத்துள்ள துரித உணவு. இரண்டாவது, போதுமான அளவு உடற்பயிற்சியோ உடல் உழைப்போ இல்லாதது. சிலருக்கு மரபணுக்கள் காரணமாக உடல் பருமன் இருக்கலாம்.

சிலருக்கு இயற்கையாகவே பருமனான உடல்வாகு இருக்கலாம். சிலருக்கு நேரத்துக்குச் சாப்பிடாதது, போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது போன்ற வாழ்க்கை முறைகளாலும் உடல் எடை அதிகரிக்கலாம்.

பருமனாக இருப்பது பிரச்சினையா?

பருமன் அதிகமாக இருந்தால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படக்கூடும். அதிகமாக வியர்க்கலாம். தூங்கும்போது குறட்டை வரலாம். மிகவும் சோர்வாக உணரக்கூடும். பருமனாக இருப்பவர்கள் அதிக உடல் பலத்துடன் இருப்பார்கள் எனப் பலர் நினைக்கலாம். ஆனால், அவர்களால் எந்த வேலையையும் துரிதமாகச் செய்ய முடியாது.

அதிக உடல் பருமனால் அவர்களுடைய தன்னம்பிக்கை குறையக்கூடும். அதிக உடல் எடையைப் பற்றி விமர்சிப்பதாலேயே நண்பர்கள் அதிகமாக இல்லாமல் போகலாம். மிகச் சோர்வாகவும் மன அழுத்தத்தையும் உணரக்கூடும். பருமனாக இருப்பது வளரிளம் பருவத்தின் இயல்பான குதூகலத்தையே அழிப்பதாக இருக்கும்.

என்னென்ன நோய்கள் வரக்கூடும்?

நீரிழவு நோய், ரத்த அழுத்த நோய், இதயம் தொடர்பான பிரச்சினைகள், மாரடைப்பு போன்றவை வரக்கூடும். பருமனாக இருக்கும் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினைகள் வரலாம். பொதுவாக BMI என்று சொல்லக் கூடிய ‘உடல்நிறைக் குறியீடு’ அதாவது உயரத்துக்கும் எடைக்குமான விகிதாச்சாரம் 26 - 27 வரை இருந்தால் அவர்கள் இயல்பான எடையிலிருந்து 20 சதவீதம் அதிக பருமனோடு இருக்கிறார்கள் எனப் பொருள். 30-க்கும் மேல் இருந்தால் அதிகமான உடல் எடை இருப்பவர்கள்.

சிறு வயதில் பருமனாக இருப்பவர்களுக்கு மற்ற பரிசோதனைகள் செய்து பார்க்கும்போது எல்லாமே இயல்பாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. அவர்களுக்கு மரபணுக்கள்ரீதியாக 45 வயதில் வரக்கூடிய நீரிழிவு போன்ற பிரச்சினைகள் 30-களிலேயே வரக்கூடும். சிறு வயது முதலே பருமனாக இருப்பவர்களுக்கு உடல் நலம் குறித்த அபாய காரணிகள் அதிகம்.

தீர்வு என்ன?

* உடற்பயிற்சியைக் கட்டாயமாக்கிக் கொள்ளுதல். ஒரு வாரத்துக்குக் குறைந்தபட்சம் 150 முதல் 200 நிமிடங்கள்வரை உடற்பயிற்சி செய்வது அவசியம்.

* வேகமான நடைப்பயிற்சி, ஓடுதல், நீச்சல், உடல் அசைவுப் பயிற்சிகள் போன்றவற்றைச் செய்யலாம்.

* இரண்டாவது, உணவுக் கட்டுப்பாட்டு. நல்ல ஊட்டச்சத்தான அதே நேரம் குறைந்த கலோரி உள்ள உணவாக இருக்க வேண்டும். புரதச்சத்து அதிகம் இருக்க வேண்டும். காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் இவை அதிக ஊட்டச்சத்து உள்ளவை.

* மற்றபடி இன்சுலின் எதிர்ப்புப் பிரச்சினை, தைராய்டு போன்றவற்றைச் சரிசெய்வதிலேயே பாதிப் பிரச்சினைகள் சரியாகலாம்.

* பொதுவாக, நம் வாழ்க்கை முறையால் பருமனாவது நிகழ்ந்தாலும், சில குடும்பங்களில் தாய், தந்தை இருவரும் பருமனாக இருப்பவர்களாக இருந்தால் குழந்தைகளும் பருமனாக இருப்பதற்கான சாத்தியம் அதிகம்.

ஆனால், அது பிரச்சினை ஆகாத அளவுக்குத் தற்காத்துக்கொள்ள இயலும். உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவற்றில் மற்றவர்களைவிட அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.

ஒல்லியாக இருப்பது என்றால் என்ன?

BMI 18-க்கும் குறைவாக இருந்தால் எடை குறைவானவர்கள் என்று அர்த்தம். பருமனாக இருப்பது பிரச்சினைகளை உண்டுபண்ணுவதுபோல், குறைந்த எடையும் பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம்.

ஏன் ஒல்லியாகிறோம்?

இதுவும் உணவோடு சம்பந்தப்பட்டதுதான். சரியாகச்

சாப்பிடாமல் இருப்பது, டயட்டில் இருக்கிறேன் என்பது, உண்ணும் முறையில் பிரச்சினை இருப்பது, மன உளைச்சல், சாப்பிட்டால் குண்டாகிவிடுவோமோ என்று சாப்பிடாமலேயே இருப்பது போன்றவற்றால் பலர் ஒல்லியாக இளைத்துவிடுகிறார்கள்.

சிலருக்குச் சாப்பாட்டைப் பார்த்தாலே வாந்தி வந்துவிடும். ஒல்லியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சாப்பிட்டுவிடுவார்கள். பிறகு உடனே வாந்தி எடுத்துவிடுவார்கள்.

தைராய்டு பிரச்சினையாலும் உடல் எடையில் மாற்றம் வரலாம். சுரப்புக் குறைவாக இருந்தால் எடை கூடும். சுரப்பு அதிகமாக இருந்தால் எடை குறையும். கண்கள் வெளியே தெறித்து வருவதுபோல் இருக்கும். வேறு சில உடல்நலப் பிரச்சினைகளாலும் Auto Immune Disorder (SLE) இருந்தாலும் எடை கூடாமல் இருக்கலாம்.

ஒல்லியாக இருப்பதும் பிரச்சினைதான்

* அதிகச் சோர்வாக இருக்கும்; தலை சுற்றும். வைட்டமின் குறைபாடு வரலாம். எல்லோரையுமே வெயில் பாதிக்கிறது என்றாலும் ஒல்லியாக இருப்பவர்களுக்கு அதிகப்படியான நீர் இழப்பை ஏற்படுத்தும்.

* எடைக் குறைவு உள்ளவர்களுக்கும் மாதவிடாய் சீரற்று இருக்கும். உதிரப்போக்கு குறைவாக இருக்கும். ரத்தசோகை ஏற்படக்கூடும். குறைவான எடையோடு உள்ள பெண்களுக்குக் குழந்தை பிறக்கும்போது, அது குழந்தையின் உடல்நலத்தையும் பாதிக்கும்.

* இயல்புக்கு மாறான வகையில் ஒல்லியாகவோ பருமனாகவோ இருந்தால் கருவுறுவதில், குழந்தை பிறப்பதில் பிரச்சினை ஏற்படக்கூடும்.

குறை எடையை எப்படிச் சரிசெய்வது?

புரதச்சத்து அதிகமாக உள்ள உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும். திரவ உணவு, அதிக கலோரி நிறைந்த உணவு ஆகியவற்றைச் சாப்பிட வேண்டும். சாப்பிடுவது குறித்து ஏன் மனச்சிக்கல்கள் வருகின்றன என்பதை மனநல மருத்துவரை அணுகிச் சரிசெய்ய வேண்டும்.

ஒரு பெண்ணுக்கு ஐந்து ஆண்டுகளாகத் திருமணத்துக்கு முயன்றுவந்தார்கள். அந்தப் பெண் இயல்புக்கும் மாறான எடைக் குறைவுடன் இருந்தார். பெண்பார்க்க வருபர்கள் இந்தப் பெண்ணுக்கு காசநோய் மாதிரி ஏதாவது வியாதி இருக்குமோ என்று எண்ணி மறுத்து வந்தார்கள்.

அவளுடன் பேசிய பிறகுதான் அவள் மிகக் குறைவாகச் சாப்பிடுகிறாள் என்று தெரிந்தது. குழந்தை சாப்பிடுவதுபோல் அரை இட்லியை மட்டுமே ஒரு வேளைக்குச் சாப்பிடும் பழக்கம் இருந்திருக்கிறது. தொடர்ந்து கவுன்சலிங் செய்து, உணவு ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் பற்றி எடுத்துச் சொல்லி, சாப்பிடப் பழக்கி, அவள் பிரச்சினை சரியாயிற்று. இப்போது நல்ல முறையில் ஆரோக்கியமான குழந்தையைக்கூடப் பெற்றெடுத்துவிட்டார்.

பெற்றோர் கவனத்துக்கு

உங்கள் குழந்தை ஒல்லியாகவோ பருமனாகவோ இருப்பதில் உங்களுக்குத்தான் பெரும்பங்கு இருக்கிறது. மரபணு நீட்சியைப் பற்றி மட்டும் சொல்லவில்லை. சிறு வயதிலிருந்தே ஊட்டச்சத்தான உணவு, உடற்பயிற்சி போன்றவற்றை அவர்களின் வாழ்க்கை முறை ஆக்குவது உங்கள் கையில்தான் இருக்கிறது.

இரண்டு வயதுக் குழந்தை இந்த உணவு பிடிக்காது

அது பிடிக்காது என்று சொன்னால், பிரச்சினை அவர்களிடம் இல்லை. முதல் தடவை அந்த உணவு அறிமுகம் ஆகும்போது சரிவர சமைக்கப்படாமல் இருந்திருக்கலாம். விளையாட்டு மனநிலையில் இருந்த குழந்தைக்கு நீங்கள் கட்டாயப்படுத்தி உணவு ஊட்ட முயன்றிருக்கலாம்.

இதனால், அந்தக் குழந்தை சாப்பிட்ட உணவை வாந்தி எடுத்தால், அந்தக் குறிப்பிட்ட உணவு குழந்தைக்குப் பிடிக்காது என்ற முடிவுக்கு வருகிறோம். உணவின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லி பிரச்சினை தீர வழி செய்யுங்கள்.

(நலம் நாடுவோம்)

கட்டுரையாளர், மகப்பேறு மருத்துவர்.

தொடர்புக்கு: mithrasfoundation@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x