Last Updated : 01 Jul, 2019 12:05 PM

 

Published : 01 Jul 2019 12:05 PM
Last Updated : 01 Jul 2019 12:05 PM

வீடு வாங்கும் பெண்களுக்கு பல சலுகைகள்

முன்பெல்லாம் பெண்களுக்கும் சொத்துகளுக்குமான இடைவெளி பல்வேறு சமூக, சட்ட ரீதியான காரணங்களால் ரொம்பவே அதிகமாக இருந்தது. ஆனால், தற்போது பெண்களுக்குப் பல்வேறு விதங்களிலும் கதவுகள் திறக்கப்பட்டுவிட்டன. சொத்துகள் வாங்குவதில் பெண்கள் ஆர்வம் காட்டுவது அதிகரித்துள்ளது.

பெண்கள் வீடு வாங்குவதில் பல்வேறு சாதகமான அம்சங்கள் உள்ளன. ஏனெனில் பெண்களுக்கு வீடு வாங்கும் போது பல்வேறு சலுகைகள் வழங்கப் படுகின்றன. பத்திரப் பதிவு செலவு ஆண்களை விட பெண்களுக்குக் குறைவு என்பது அதில் முக்கியமானது. உதாரணத்துக்கு, ஜார்கண்டில் பெண்களுக்கு பத்திரப் பதிவு கட்டணத்தில் 7 சதவீதம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

உத்திரப்பிரதேசத்தில் பெண்கள் சொத்து வாங்கினால் 7 சதவீத பத்திரப் பதிவு கட்டணத்தில் ரூ. 10 ஆயிரம் திருப்பி அளிக்கப்படுகிறது. டெல்லி, ஹரியானா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் 2 சதவீத பத்திரப் பதிவு கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது.

வீட்டுக் கடன் வாங்கும்போதும் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு வட்டி விகிதம் குறைவாகவே நிர்ணயிக்கப்படுகின்றன. உதாரணத்துக்கு எஸ்பிஐ வழங்கும் கடனில் ஆண்களை விட பெண்களுக்கு 5 அடிப்படை புள்ளிகள் குறைவாகவே வட்டி நிர்ணயிக்கப்படுகிறது. ஆண் பெயரில் தனியாக வீடு வாங்கு வதைக் காட்டிலும், பெண் உறுப்பினரையும் சேர்த்துக்கொண்டு வாங்கினால் கூடுதல் பலன்கள் கிடைக்கின்றன.

கூட்டுக் கடனாக விண்ணப்பிக்கும் போது கூடுதலான தொகை கடனாகக் கிடைக்கும். மேலும் இருவருமே வீட்டுக் கடன் மீது செலுத்தும் வட்டியில் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்குக்கு விண்ணப்பிக்கலாம். அதேபோல் வீடு வாடகைக்கு விடப்படும் பட்சத்தில் வாடகை வரு மானம் இருவர் பெயரிலும் பகிரப்படுவதால், வரி செலுத்துவதில் இருந்தும் கணிசமான பலனை அடைய முடியும்.

பெண்கள் வீடு வாங்குவதில் உள்ள பலன்கள் குறைவாக இருந்தாலும், மிச்சமாவதெல்லாமே பணம்தான் என்ற அளவில் யோசித்து திட்டமிட வேண்டும். மேலும் வீடு வாங்குவதற்கு முன் அதற்கான நிதித் திட்டமிடலைச் செய்துவிட்டு வீடு வாங்குவது நல்லது.

வேலைக்குச் சேர்ந்ததும்

பெரும்பாலான பெண்கள் வேலையில் சேர்ந்த உடனேயே வீடு வாங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்குக் காரணம், ஆரம்பத்திலிருந்து செலவுகளைக் குறைக்கும் பழக்கத்தை இதுபோன்ற ஒரு தேவையான கடனில் ஈடுபடுத்திக்கொள்வதன் மூலம் கொண்டுவர முடியும் என்று நம்புகிறார்கள். ஆரம்பத்திலேயே வீட்டுக்கடன் வாங்குவதில் சில நன்மைகள் உள்ளன. இளமைக் காலத்திலேயே நம்முடைய கடனை அடைத்துவிட முடியும். முதுமையில் பெரிய அளவில் பொறுப்புகள் வந்துவிட்ட பிறகு கடனை வைத்துக் கொண்டு சிரமப்பட வேண்டியதில்லை.

மேலும் தவணையைச் செலுத்துவதற்கு தொடர்ந்து வேலை பார்க்க வேண்டிய நிலைமையும் ஏற்படும்.வீட்டுக்கடனில் வீடு வாங்கும்போது கணிசமான தொகையை கையிலிருந்து செலுத்த வேண்டியிருக்கும். இந்தத் தொகையை சேமித்துவிட்டு பின்னர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம் என பலர் சிந்திப்பதுண்டு. ஆனால், அப்படி காத்திருப்பதற்குப் பதிலாக, பெற்றோரையும் ஒரு வீட்டு உரிமையாளராகச் சேர்த்துக்கொண்டு கடனுக்கு விண்ணப்பித்தால் முன்பணம் என்பது பிரச்சினையாக இருக்காது.

மேலும், இளம் பெண்கள் ரியல் எஸ்டேட் முதலீட்டை மேற்கொள்ளும்போது, பங்குகள், கடன் திட்டங்கள் போன்றவற்றிலும் கணிசமான முதலீடுகளை மேற்கொண்டு நிதிநிலை அபாயத்தை சமநிலைப்படுத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும். எந்த அளவுக்கு நம்மால் ரிஸ்க் எடுக்க முடியும் என்பதையும், எந்தத் திட்டம் சரியான முதலீடாக இருக்கும் என்பதையும் நிதி ஆலோசகர் உதவியினால் தெரிந்து கொண்டால் பலன் அளிக்கும்.

உதாரணமாக, மாதாந்திர எஸ்ஐபி திட்டத்தில் அதிக ரிஸ்க் உ ள்ள திட்டத்தில் முதலீடு செய்து பெரும் தொகையை உருவாக்கலாம். போதுமான அளவு லிக்விட் முதலீடு திட்டங்கள் கைவசம் உள்ளபோது சொத்து வாங்கும் முடிவை எடுக்கலாம்.

மத்திய வயதில்

ஒரு குறிப்பிட்ட வயதை எட்டிய பிறகு வீடு வாங்குவது என்பது விவாதத்துக்கு இடமில்லாத விஷயமாக இருக்கலாம். ஏனெனில், கணிசமான ஆண்டுகள் பணிபுரிந்தோ தொழில் செய்தோ, வீடு வாங்குவதற்கான முன்பணத்தை சேமித்திருப்பீர்கள். மேலும், வேலை ரீதியாக ஒரு தெளிவும் இருக்கும். அதாவது வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குறித்தும், வருமானம் குறித்த எதிர்பார்ப்பிலும் தெளிவு இருக்கும்.

வீட்டுக் கடனுக்கான தவணையை செலுத்தும் அளவுக்கான வருமானம், இலக்கை அடைவதற்கான சேமிப்பு திட்டங்கள் போன்றவையும் இருக்கும். கூடவே, உங்களுடைய வருமான வரி வரம்பு அதிகம் என்பதால், வரி விலக்கு பெறுவதற்கான திட்டங்களைப் பற்றியும் சிந்திப்பீர்கள். அப்போது வீட்டுக்கடன் அதற்குச் செலுத்தும் வட்டி பயனுள்ளதாக அமையும். பெண்கள் தனியேவீடு வாங்குவதற்கு பதிலாக தங்கள் கணவரோடு சேர்ந்து வாங்க  முயற்சிக்கலாம். இது வரி உட்பட பல்வேறு விதங்களிலும் குடும்ப நிதி நிர்வாகத்தைத் திட்டமிட உதவியாக இருக்கும்.

பிற சிக்கல்கள்

கடன் என்று வரும்போது, வாங்குவதற்கு முன் மிகவும் கவனமாக இருப்பது முக்கியம். வீட்டுக் கடன் போன்ற நீண்டகால கடன்களை வாங்கும்போது மாதாந்திர வருமானம் என்பது எந்தப் பிரச்சினையும் இல்லாததாக இருக்க வேண்டும். பெண்களைப் பொறுத்த வரையில் இது கூடுதல் கவனத்தில் கொள்ள வேண்டியது. ஏனெனில், பெண்களுக்கான பணிச்சூழல் என்பது எப்போது வேண்டுமானாலும் மாறலாம்.

காட்டலிஸ்ட் இந்தியா என்ற பெண்களுக்கான அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி, பணிபுரியும் பெண்களில் பாதிக்கும் மேலானோர் நிறுவன வேலைகளிலிருந்து இடையிலேயே வெளியேறி விடுகிறார்கள். எனவே கடனை சமாளிப்பதற்கான திறன் நம்மிடம் இருக்கிறதா என்பதை நூறு முறை யோசித்துவிட்டு கடன் வாங்குவது நல்லது.

வேலையிலும், வருமானத்திலும் ஒரு ஸ்திர நிலை இல்லாதபோது கடன் பக்கமே போகாமல் இருப்பது மேல். வீட்டுக்கடன் வாங்கும்போது கூடவே காப்பீடு திட்டம் ஒன்றையும் எடுத்துக்கொள்வது சிறந்ததாக இருக்கும்.மேலும் சொத்து மீதான உரிமையைப் பொறுத்தவரை திருமணம் ஆனவராக இருந்தாலும் ஆகாமல் இருந்தாலும் தந்தையின் சொத்தில் மகனுக்கு உள்ள அதே உரிமை மகள்களுக்கும் உண்டு. ஆனால், பெரும்பாலும் பெண்கள் தங்கள் உரிமைகளைக் கேட்பதில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x