Published : 05 Jul 2019 11:27 am

Updated : 05 Jul 2019 11:27 am

 

Published : 05 Jul 2019 11:27 AM
Last Updated : 05 Jul 2019 11:27 AM

என் வாயைக் கட்டிவிட்டார்கள்! - நடாஷா சிங் பேட்டி

தமிழ் தெரிந்த பெண்களைத் தனது முந்தைய இரு படங்களுக்கும் தேர்ந்தெடுத்திருந்தார் இயக்குநர் ராஜுமுருகன். தனது மூன்றாவது படமான ‘ஜிப்ஸி’க்கு இமாச்சலப் பிரதேசத்திலிருந்து நடாஷா சிங்கை அழைத்து வந்திருக்கிறார். தொலைபேசியில் அழைத்தால் முழுவதும் ஆங்கிலத்தில் பேசும் நடாஷா படப்பிடிப்பில் எப்படிச் சமாளித்தார்…?

அவரிடமே கேட்டுவிட்டோம்…

தமிழ் மொழி தெரியாத நிலையில் ‘ஜிப்ஸி' பட அனுபவம் எப்படி இருந்தது?

தமிழ் மொழியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கேன். எனக்குத் தெரியாவிட்டாலும், அந்த மொழியின் பெருமைகள் பற்றித் தெரியும். ‘ஜிப்ஸி’ படப்பிடிப்பில் மொழி பயிற்சியாளர் ஒருவர் எப்போதுமே இருப்பார். தமிழ் வசனத்தை மொழிபெயர்த்துச் சொல்வார். அதே போல் உச்சரிப்பிலும் உதவியாய் இருந்தார்.

இயக்குநர் உங்களிடம் கதையைக் கூறியவுடன் என்ன நினைத்தீர்கள்?

‘ஜோக்கர்’ என்ற படத்துக்காகத் தேசிய விருது பெற்றவர் கதை சொல்ல வருகிறார் என்றவுடனே சந்தோஷப்பட்டேன். கதையைக் கேட்டவுடன், இந்த வாய்ப்பைத் தவறவிடக் கூடாது என்று முடிவு செய்தேன். யோசித்து நாளைக்குச் சொல்றேன், என்றெல்லாம் சொல்லவில்லை. முதல் படத்திலேயே இப்படியொரு வலுவான கதாபாத்திரம் அமையும் என்று எதிர்பார்க்கவில்லை. இயக்குநர் ராஜுமுருகனுக்கு நன்றி.

ஜீவாவுடன் நடித்த அனுபவம்...

பயணம்தான் படத்தின் கதைக்களம். இதற்காக நான், ஜீவா என அனைவருமே ஒன்றாக வடக்கிலிருந்து தெற்குவரை பயணித்தோம். மொழி தெரியாத பெண் என்றெல்லாம் நினைக்காமல், படக்குழுவினர் பொதுமக்கள் என இருதரப்புமே ரொம்பவும் யதார்த்தமாகப் பழகினார்கள்.

அதனால் இந்தப் பயணம் இன்னும் அற்புதமாக அமைந்துவிட்டது. ஜீவா மிகச் சிறந்த மனிதர். சில காட்சிகளில் நடிக்க நான் கஷ்டப்பட்டபோது, கொஞ்சமும் முகம் சுளிக்காமல் ஒத்துழைப்புத் தந்து நடித்தார். அதுவும் என் முதல் பட நாயகன் வேறு. அவர் ஏதாவது கோபப்பட்டிருந்தால், கண்டிப்பாக வருந்தியிருப்பேன். ஆனால், அப்படி அதுவுமே நடக்கவில்லை. அவருடன் பணிபுரிந்தது எனக்கு ஆசிர்வாதம்தான்.

‘மிஸ் இந்தியா’ போட்டியில் இறுதிச்சுற்றுவரை வந்துள்ளீர்கள். ஆனால், படத்திலோ கூச்ச சுபாவம் உள்ள பெண்ணாக நடித்துள்ளீர்கள். கடினமாக இருந்ததா?

ரொம்பவே கஷ்டப்பட்டேன். ஏனென்றால், இரண்டுமே வெவ்வேறு பயணங்கள். மிஸ் இந்தியா போட்டியில் வெளிப்படையாகப் பேச வேண்டும். தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். அழகாக இருக்க வேண்டும்.

அப்படியே ‘ஜிப்ஸி’ படத்தில் முழுமையாக மாறி அமைதியான, கூச்ச சுபாவமுள்ள வலிமையான கதாபாத்திரம் என்னுடையது. எப்போதும் பேசிக்கொண்டே இருப்பவளை, திடீரென்று அமைதியாக நடிக்கவைத்தால் எப்படியிருக்கும். என் வாயைக்கட்டிவிட்டார்கள்.

‘ஜிப்ஸி’ மூலமாக பாலிவுட்டில் அறிமுகமாகும் எண்ணமுள்ளதா?

முதலில் படம் வெளியாகட்டும். இது எனது முதல் படம். இதில் நன்றாக நடிக்க வேண்டும் என்று நினைத்து தான் ஒப்பந்தமானேன். அதைவிட மக்கள் என் நடிப்பைப் பார்க்க வேண்டும் என விரும்புகிறேன். அது நன்றாக இருந்தால், அவர்களுக்குப் பிடித்தால் மட்டுமே மேற்கொண்டு வாய்ப்புகள் வரும். கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் ஒழுங்காக என் வேலையைச் செய்ததாக உணர்வேன். இதன் மூலமாகப் பல மொழி வாய்ப்புகள் வரும் என்றெல்லாம் நினைக்கவில்லை.

தமிழ் சினிமா வாய்ப்பு வந்தவுடன், நண்பர்கள், குடும்பத்தினர் என்ன சொன்னார்கள்?

என்னைவிடக் குடும்பத்தினரும் நண்பர்களும்தான் படத்தை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர். இந்த மாதிரியான கதைகளில் நடி, இந்தப் படத்தைப் பார்த்தியா என்றெல்லாம் அனுப்பி வைக்கிறார்கள். கதைக்கு மட்டுமல்ல, சமுதாயத்துக்கும் பயனுள்ள வகையில் இருக்கும் கதைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற தெளிவை ‘ஜிப்ஸி’ கொடுத்திருக்கிறது.

நடிகையாக உங்களுடைய ரோல் மாடல் யார், ஏன்?

எனக்கு கங்கணா ரணவத்தைப் பிடிக்கும். அவருடைய தனித்துவம், கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் தன்மை என எப்போதுமே ஆச்சரியப்படுத்துவார். வித்தியாசமான கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுப்பார். கங்கணா ரணவத் அதில் தவறியதே இல்லை.

திரையுலகில் இருக்கும் போட்டிகளை எப்படிச் சமாளிக்கப் போகிறீர்கள்?

நடிப்புத் திறனைக் காட்டும் தளத்தில் எந்தப் போட்டியும் இல்லை என்று நம்புகிறேன். நம் ஒவ்வொருவரிடமும் மற்றவர்களிடம் இல்லாத ஏதோ ஒன்று உள்ளது. நான் நானாக இருப்பதையே நம்புகிறேன். அதுதான் பார்வையாளர்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன்.


நடாஷா சிங் பேட்டிஜிப்ஸிஜோக்கர்தேசிய விருதுதமிழ் சினிமா

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author