Published : 05 Jul 2019 11:20 am

Updated : 05 Jul 2019 11:20 am

 

Published : 05 Jul 2019 11:20 AM
Last Updated : 05 Jul 2019 11:20 AM

திரைப் பார்வை: தீண்டாமை ஒரு பெருங்குற்றம் (ஆர்டிகிள் 15 - இந்தி)

15

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பதாவூன் நகரில்,2014-ம் ஆண்டில் இரண்டு சிறுமிகள் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டதாகத் தெரியவந்த சம்பவத்தைத் தழுவி ‘ஆர்டிகிள் 15’ எடுக்கப்பட்டிருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தின் லால்காவ்ன் கிராமத்துக்கு மாற்றலாகி வருகிறார் இளம் ஐபிஎஸ் ஆபீஸர் அயான் ரஞ்சன் (ஆயுஷ்மான் குரானா). ஐரோப்பாவில் வளர்ந்து, டெல்லி ஸ்டீஃபன் கல்லூரியில் பட்டம்பெற்ற அயானுக்கு லால்காவ்ன் கிராமத்தில், அவர் எதிர்கொள்ளும் சாதிய பிரச்சினைகள் குறித்த எந்தத் தெளிவான அரசியல் பார்வையும் இல்லை. பணி மாற்றலாகி வரும் முதல் நாளே, அந்தப் பகுதியில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகளைக் காணவில்லை என்ற பிரச்சினை குறித்து அவர் கேள்விப்படுகிறார்.


ஆனால், அந்தப் புகாரைப் பதிவுசெய்ய அவருக்குக் கீழ் பணியாற்றும் எந்தக் காவல் அதிகாரியும் விரும்பவில்லை. ஏன் புகாரைப் பதிவுசெய்யவில்லை என்று கேட்கும் அயானுக்கு, அதிகாரி ஒருவர், ‘இந்த மாதிரிச் சம்பவங்கள் இங்கு வழக்கமாக நடப்பதுதான். இவர்கள் எப்போதும் இப்படித்தான் ஓடிப்போவார்கள்.

திரும்பி அவர்களாகவே வந்துவிடுவார்கள்’ என்று சாதாரணமாகப் பதிலளிக்கிறார். அடுத்த நாள் காணாமல்போன மூன்று சிறுமிகளில் இரண்டு பேர் மாமரத்தில் தூக்கில் தொங்கவிடப்பட்டு இறந்திருக்கிறார்கள். இந்த வழக்கை விசாரிக்க வேண்டிய தீவிரத்தை உணர்ந்து செயல்படத் தொடங்குகிறார் அயான்.

முன்னுரிமைகளை அனுபவிக்கும் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்து, படித்து வளர்ந்ததால், அவர் அதுவரையில் எந்தவிதப் பெரிய வாழ்க்கை நெருக்கடிகளையும் எதிர்கொண்டதில்லை. ஆனால், ஒரு நேர்மையான அதிகாரியாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டுப் பணியாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

அந்தப் பொறுப்புடன் வழக்கை விசாரிக்கத் தொடங்கும் அயானுக்கு, அவருக்குக் கீழ் பணியாற்றும் காவல் அதிகாரிகளில் சிலரே முட்டுக்கட்டை போடுகிறார்கள். இங்கிருக்கும் ‘சமுதாயச் சமநிலை’யைக் கெடுக்காதீர்கள் என்று காவல் அதிகாரி பிரம்மதத் ( மனோஜ் பாஹ்வா) கெஞ்சும் தொனியில் அவரை எச்சரிக்கிறார்.

ஆனால், இந்த வழக்கில் எந்தக் காரணத்தைக் கொண்டும் பின்வாங்க மாட்டேன், இங்கிருக்கும் குழப்பங்களைத் தீர்க்காமல் விடமாட்டேன் என்று சமூகச் செயற்பாட்டாளராக, எழுத்தாளராக இருக்கும் தன் காதலி அதிதியிடம் (ஈஷா தல்வார்) சொல்கிறார் அயான். ஒரு நேர்மையான அதிகாரியாக, சட்டத்துக்கு உட்பட்டு இந்த வழக்கில், தன் கடமையை அவரால் நிறைவேற்ற முடிந்ததா, இல்லையா என்பதுதான் மீதிக்கதை.

இயக்குநர் அனுபவ் சின்ஹா, நாட்டின் அதிதீவிரமான பிரச்சினையாக இருக்கும் சாதியப் பிரச்சினையை ஜனரஞ்சகமான திரைக்கதையில் கையாண்டிருக்கிறார். இந்தப் படத்தின் முக்கியக் கதாபாத்திரமான அயான், சாதிய பாகுபாடு குறித்துக் கேட்கும் கேள்விகளைவிட, அந்தக் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் உரிமைகளுக்காகத் தன்னிச்சையாகப் போராடும் இளம் போராளியான நிஷாத் (முஹம்மது ஜீஷான் அய்யூப்) கதாபாத்திரம் கேட்கும் கேள்விகள் வலிமையானவை.

தொலைந்துபோகும் மூன்று சிறுமிகளில் ஒரு சிறுமியின் சகோதரி கவுராவுக்கும் (சயானி குப்தா) நிஷாத்துக்குமான காதல். இதிலும், நிஷாத்-கவுரா காதல்தான் பார்வையாளர்களின் மனதை உலுக்குகிறது. என்கவுன்ட்டர் செய்யப்படும்முன் நிஷாத், கவுராவிடம் பேசும் காட்சியில், “மற்ற காதலர்கள் செய்வதைப் போல, உனக்கு மலர் கொண்டுவந்து கொடுக்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது.

உன்னுடன் நிலவை ரசிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. உன்னுடன் நதியில் கால் நனைத்தபடி அமர்ந்திருக்க வேண்டுமென்று ஆசை இருக்கிறது. ஆனால், என்னால் ஐந்து நொடிகள்கூட நிலவை ரசிக்க முடியவில்லை. என்மீது நம்பிக்கை வைத்துக் காத்திருக்கும் நம் மக்களின் நினைவு வந்துவிடுகிறது” என்று சொல்லி அழுவார். இந்தக் காட்சியைப் படத்தின் சிறப்பான காட்சிகளில் ஒன்றாகச் சொல்லலாம்.

இதுபோன்ற அழுத்தமான பல காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருக்கின்றன. பிராமண அரசியல் கட்சித் தலைவர்கள், தலித் அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பாரபட்சம் பார்க்காமல் இரண்டு தரப்பினரும் வெளிப்படையான காட்சிகள், வசனங்கள் வழியே விமர்சனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், முக்கியக் கதாபாத்திரமான அயான் பிராமணச் சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பது வலிந்து சித்தரிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.

ஏனென்றால், அந்தச் சித்தரிப்புக்கான நியாயம் திரைக்கதையில் வலிமையாக இல்லை. ஆயுஷ்மான் குரானா, சுயதேடலில் குழப்பங்களுடன் இருக்கும் ஓர் இளம் ஐபிஎஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நேர்த்தியாகப் பொருந்தியிருக்கிறார். குமுத் மிஸ்ரா, மனோஜ் பாஹ்வா, முஹம்மது ஜீஷான் அய்யூப், சயானி குப்தா ஆகியோரும் சிறப்பான பங்களிப்பைச் செய்திருக்கிறார். நாசர், சிபிஐ அதிகாரி பணிக்கர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

மதத்தின் பேரால் கும்பல் வன்முறைகளும் சாதியின் பேரால் ஆணவக் கொலைகளும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளும் நாட்டில் நாளுக்குநாள் அதிகரித்தபடி இருக்கின்றன. பெரும்பாலான பாலிவுட் இயக்குநர்கள் மத்திய அரசின் திட்டங்களை ஆதரித்தும் வலதுசாரி அரசியலைக் கொண்டாடியும் படங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில், அரசியலமைப்புச் சட்டத்தின்மீது நேர்மறையான நம்பிக்கையை உருவாக்கியிருக்கும் இயக்குநர் அனுபவ் சின்ஹாவின் ‘ஆர்டிகிள்-15’ திரைப்பட முயற்சி பாராட்டுக்குரியது.

திரைப்பார்வைஇந்தி படம் ஆர்டிகிள் 15திரைப் பார்வைஆயுஷ்மான் குரானா

You May Like

More From This Category

More From this Author