Published : 13 Jul 2019 11:53 AM
Last Updated : 13 Jul 2019 11:53 AM

உயிர் மூச்சு இணைப்பிதழுக்கு விருது

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு-கல்வி சார்ந்து ஆற்றிய பணிகளுக்காக 'இந்து தமிழ்' - ‘உயிர் மூச்சு' இணைப்பிதழுக்கு புதுச்சேரி ஆரோவில்லின் ஆரண்யா அமைப்பு விருது வழங்கியுள்ளது.

புதுச்சேரி ஆரோவில் அமைப்பின் ஒரு பகுதியாக ஆரண்யா காடு-சரணாலயம் இயங்கி வருகிறது. விழுப்புரம் மாவட்டம் பூத்துறை பகுதியில் அமைந்துள்ள இந்தச் சரணாலயம் புத்துருவாக்கப்பட்ட, மீட்டெடுக்கப்பட்ட ஒரு காட்டுப் பகுதி. இந்தக் காட்டின் 80 ஏக்கர் பரப்பில் உள்ளூர் தாவர வகைகள் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி சுற்றுவட்டாரத்தில் உள்ள கோயில் காடுகளில் இருந்து இந்தக் காட்டுக்கான தாவர விதைகள், கன்றுகள் சேகரிக்கப்பட்டன. இன்றைக்கு அழியும் ஆபத்துக்குத் தள்ளப்பட்டுள்ள, அழிவின் விளிம்பில் உள்ள தாவரங்கள், மருத்துவத் தாவரங்களின் மையமாக ஆரண்யா திகழ்கிறது.

'இந்து தமிழு'க்கு விருது

கடந்த 20 ஆண்டுகளாக புதுச்சேரியை ஒட்டியுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக் கல்வி, செயல்பாடுகளிலும் ஆரண்யா ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ‘இளையோர் உயிரினப் பன்மை மாநாட்டை’ இந்த அமைப்பு நடத்திவருகிறது. ஐந்தாவது ஆண்டாக கடந்த 9, 10-ம் தேதிகளில் இந்த மாநாடு நடைபெற்றது.

சுற்றுச்சூழல் கல்வி, காட்டுயிர் பாதுகாப்பு, மரக்கன்று நடுதல், ஆராய்ச்சி ஆகிய துறைகளில் கள அளவில் ஈடுபடும் செயற்பாட்டாளர்களுக்கு உயிரினப் பன்மை பாதுகாப்பு விருதுகளும் இந்த மாநாட்டில் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் சூழலியல், வேளாண்மை, விழிப்புணர்வு ஆகிய பிரிவுகளில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக 'இந்து தமிழ்' நாளிதழின் 'உயிர் மூச்சு' இணைப்பிதழுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

மற்ற விருதுகள்

புதுவை, தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களும் விருது பெற்றனர். 'வாழ்நாள் விருது' புதுவை கே. ராதாகிருஷ்ணனுக்கும், சூழலியல் பாதுகாப்புக்கான விருது பண்ருட்டி கந்தர்வக்கோட்டையைச் சேர்ந்த பி. ஹரிதாஸ், கோவை வின்னி ஆர். பீட்டர், புதுவை எஸ். மனோகர், ஜூலியன் பிரான்சிஸ் ஆகியோருக்கும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் மேற்கு மலைத் தொடர் பாதுகாப்புப் பயணக் குழு தலைவர் குமார் கலானந்த் மணி, கர்னல் விநாயகம், ஆரோவில்லைச் சேர்ந்த திவ்யா கபூர், நிரிமா ஓஸா, ஆரண்யாவின் இயக்குநர் சரவணன், நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x