Last Updated : 02 Jul, 2019 10:31 AM

 

Published : 02 Jul 2019 10:31 AM
Last Updated : 02 Jul 2019 10:31 AM

அறிவியலாளர் ஆவோமா!

ஏவுகணைச் சோதனையாகட்டும், செவ்வாய்க் கோளுக்கு விண்வெளி ஓடம் செலுத்தியதாகட்டும், நாடே மகிழ்ந்து அறிவியலாளர்களைக் கொண்டாடுவதைக் கண்டு உங்களுக்குள்ளும் அறிவியலாளராகும் கனவு துளிர் விட்டிருக்கலாம். எப்படி அறிவியலாளராவது?

இந்தியாவில் அரசுத் துறைகளில் உள்ள பல ஆராய்ச்சி நிறுவனங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருக் கின்றன. தனியார் ஆராய்ச்சி நிறுவனங்களும் இத்துறைகளில் வளர ஆரம்பித்திருக்கின்றன.

இஸ்ரோ

சந்திரயான், மங்கள்யான் உள்ளிட்ட விண்வெளிச் சாதனைகளைப் படைத்தது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO). தமிழ்நாட்டில் மகேந்திர கிரியில் உள்ள உந்துசக்தி வளாகம் உள்ளிட்ட 13 ஆய்வு மையங்களை உள்ளடக்கியது இஸ்ரோ.

இயற்பியல், வேதியியல், இயந்திரப் பொறியியல், மின்னியல், கட்டிடவியல், கருவியியல், மின்னணுவியல், கணினி அறிவியல், உலோகவியல், விண்வெளிப் பொறியியல் உள்ளிட்ட துறை களில் இளநிலை (அறிவியல் தவிர), முதுநிலை, முனைவர் பட்டம் பெற்றவர்கள் இஸ்ரோ நிறுவனத்தில் அறிவியலாளராக விண்ணப்பிக்கலாம்.

திருவனந்த புரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (IIIST), இந்திய விண்வெளித் துறையில் இயங்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழகம். இங்கு விண்வெளிப் பொறியியல், மின்னணு - தொடர்பியல் ஆகிய இரண்டு பொறியியல் பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இங்கு பொறியியல் பட்டம் பெறுவது இஸ்ரோ நிறுவனத்துக்கான நுழைவுச் சீட்டாகவே நம்பப் படுகிறது. பொறியியல் துறையில் பட்டமேற்படிப்பு, முனைவர் பட்டப் படிப்புகள் இங்கு வழங்கப்படுகின்றன.

டி.ஆர்.டி.ஓ.

இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் (DRDO), ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வகங்களைக் கொண்டது. போர் விமானம், ஏவுகணைகள், ராணுவப் பீரங்கிகள், வெடிபொருட்கள், மருத்துவம், கடல்சார் ஆய்வு உள்ளிட்ட பல்துறை ஆய்வுகளில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

கணிதம், புவியியல், வேதியியல், இயந்திரப் பொறியியல், மின்னியல், கட்டிடவியல், மின்னணு-தொடர்பியல், கணினி அறிவியல், உலோகவியல், விமானவியல், விண்வெளிப் பொறியியல், மருத்துவப் படிப்புகளைப் படித்தவர்கள் அறிவியலாளராக வாய்ப்புகள் உண்டு. முனைவர் பட்டம் பெற்றவர்கள் நேரடியாக மூத்த அறிவியலாளராக விண்ணப்பிக்கலாம்.

பூனாவில் உள்ள ராணுவ உயர் தொழில்நுட்ப நிறுவனம் பாதுகாப்புத் துறை தொடர்பான முதுநிலை, முனைவர் பட்டப் படிப்புகளை வழங்கிவருகிறது. ஏவுகணை, ஆளில்லா விமானம், போர்க் கப்பல், சைபர் பாதுகாப்பு, வெடிபொருட்கள் உள்ளிட்ட பல ராணுவத் தொழில்நுட்பங்கள் இங்கே கற்பிக்கப்படுகின்றன.

அணுசக்தித் துறை

கல்பாக்கம், இந்திரா காந்தி அணு ஆய்வு மையம் உள்ளிட்ட ஆறு அணுசக்தி ஆய்வு நிலையங்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன.

இயற்பியல், வேதியியல், உயிரி அறிவியல், புவியியல், புவியியற்பியல், கதிரியக்கவியல் ஆகிய துறைகளில் முதுநிலை, முனைவர் பட்டம் பெற்றவர்களும் மின்னியல், கட்டிடவியல், கருவியியல், மின்னணு வியல், கணினி, உலோகவியல், அணுத் தொழில்நுட்பம், இயந்திரப் பொறியியல் ஆகிய துறைகளில் இளநிலை, முதுநிலை, முனைவர் பட்டம் பெற்றவர்களும் அணுசக்தித் துறையில் அறிவியலாளர் ஆகலாம்.

மும்பையில் ஹோமி பாபா தேசிய நிறுவனம் என்ற நிகர்நிலைப் பல்கலைக்கழகம் உள்ளது. இந்நிறுவனத்தின்கீழ் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையம், கல்பாக்கத்திலுள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட 10 நிறுவனங்களில் அணுசக்தித் தொழில்நுட்பம் சார்ந்த மேற்படிப்புகளைப் படிக்கலாம். 

பொறியியல் பட்ட மேற்படிப்பு, அறிவியல், பொறியியல் துறைகளில் முனைவர் பட்டம், மருத்துவத் துறையில் பட்ட மேற்படிப்பு, முனைவர் பட்டப் படிப்புகள் இங்கு உள்ளன. துணை மருத்துவத் துறை சார்ந்த பட்டயப் படிப்புகளும் முதுநிலைப் பட்டயப் படிப்புகளும் உண்டு.

இந்திய அறிவியல், தொழில் நுட்பத் துறை

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபையின்கீழ் (CSIR) 38 தேசிய ஆய்வுக்கூடங்கள் உள்ளன. இந்த ஆய்வகங்களில்  தலைவலி மருந்திலிருந்து பயணிகள் விமானம்வரை பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை அடையாறு பகுதியில் அமைந்துள்ள ‘மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம்’ (CLRI), தரமணியில் உள்ள ‘கட்டமைப்புப் பொறியியல் ஆராய்ச்சி மையம்’ (SERC), காரைக்குடியிலுள்ள ‘மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி மையம்’ (CECRI) ஆகியவை சி.எஸ்.ஐ.ஆர். நிறுவனங்களே.

விண்வெளி இயற்பியல், கடலியல், வேதியியல், மருந்துப் பொருட்கள், மரபணுவியல், உயிரி தொழில்நுட்பம், நானோ தொழில் நுட்பம், விமானவியல், சூழலியல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகள் சார்ந்த ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளது சி.எஸ்.ஐ.ஆர். இவை தொடர்பான படிப்புகளைப் படித்தால் இந்நிறுவனத்தில் அறிவியலாளர் ஆகலாம்.

அறிவியல், புதுமை ஆய்வு கல்விக் குழுமம் (AcSIR) என்ற தேசிய முக்கியத்துவம் பெற்ற கல்வி நிலையத்தை உருவாக்கியுள்ளது சி.எஸ்.ஐ.ஆர். இதன் மூலம் இயற்பியல், உயிரியியல், வேதியியல், கணிதம், தகவல் தொழில்நுட்பம், பொறியியல் துறைகளிலும், ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளிலும் (Inter disciplinary)  பட்டயப் படிப்புகளையும்,  பட்ட மேற்படிப்பும், ஆய்வுப் பட்டங்களும் பெறலாம். சி.எஸ்.ஐ.ஆர். ஆய்வகங்களே கல்வி நிலையங்களாகச் செயல்படுவது கூடுதல் சிறப்பு.

உயிரித் தொழில்நுட்பம், மருத்துவம், வேளாண்மை ஆராய்ச்சி

உயிரித் தகவலியல், உயிரி மருந்தியல் ஆகிய துறைகளில், டி.என்.ஏ. கைரேகை, அறுதியிடல் மையம் (Center for DNA Fingerprinting and Diagnostics) உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் உயிரித் தொழில்நுட்பத் துறை முக்கிய ஆராய்ச்சிகளை முன்னெடுத்து வருகிறது. இவை தொடர்பான படிப்புகளில் சேர்ந்தால் இத் துறையில் அறிவியலாளர் ஆகலாம்.

வேளாண்மை, தோட்டக்கலை, மீன் வளம், விலங்கியல் தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறது இந்திய வேளாண்மை ஆராய்ச்சி சபை 101 ஆராய்ச்சி நிலையங் களையும் 71 வேளாண் பல்கலைக்கழகங்களையும் உள்ளடக்கியது இந்த அமைப்பு. இது தொடர்பான பாடப் பிரிவுகளைப் படித்தால் இத்துறையில் அறிவியலாளராகலாம்.

மருத்துவம், ஊட்டச்சத்து, மரபு மருத்துவ முறைகள் ஆகியவற்றில் ஆராய்ச்சிகளைச் மேற்கொண்டு வருகிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை. உயிரியல், மருத்துவத் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்களுக்கு அறிவிய லாளராக வாய்ப்புகள் உண்டு. இது தவிரக் கால்நடை வளர்ப்பு, பால், மீன்வளம் ஆகிய துறைகளிலும் துறைசார்ந்த கல்வித் தகுதி உடையவர்கள் அறிவியலாளர்ஆகலாம்.

வானிலை ஆராய்ச்சி

புயல் எச்சரிக்கைச் செய்திகளை முன்னறிந்து சொல்லும் வானிலை அறிவியலாளர்கள் உயிர்களையும் பயிர்களையும் காக்கும் அரும்பணி புரிகின்றனர். கணிதம், இயற்பியல், வானிலையியல், வளிமண்டல அறிவியல் ஆகிய துறைகளில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள், மின்னணு – கருவியியல் பொறியாளர்களும்  வானிலை அறிவியலாளராகத் தகுதியுடையவர்கள்.

இவை தவிரச் சூழலியல், துருவப் பகுதி, கடல் ஆராய்ச்சி, நிலநடுக்க ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் நிறுவனங்களில் அறிவியலாளராக இவை சார்ந்த அறிவியல் பிரிவுகளில் படிக்க வேண்டும்.

பிற துறைகளில் அறிவியலாளர்

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களின் ஆராய்ச்சித் துறைகளிலும், ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் பேராசிரிய ராகச் சேர்ந்தும் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடலாம். விண்வெளி, விமானவியல், மருந்தியல் ஆகிய பல்வேறு துறைகளில் தனியார் ஆய்வுக்கூடங்கள் இயங்கி வருகின்றன. இந்நிறுவனங் களிலும் அறிவியலாளராகப் பணியாற்ற வாய்ப்புகள் உண்டு.

உங்களுடைய அறிவியல் கனவு விரைவில் மெய்ப்பட வாழ்த்துகள்!

கட்டுரையாளர், இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (டி.ஆர்.டி.ஓ) விஞ்ஞானி.

தொடர்புக்கு: dillibabudrdo@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x