Last Updated : 02 Jul, 2019 10:50 AM

 

Published : 02 Jul 2019 10:50 AM
Last Updated : 02 Jul 2019 10:50 AM

கல்விக்கடன் சில மாற்றங்களுடன்

நடுத்தர மக்களுக்கு உயர்கல்வியை உறுதிப்படுத்துவதில் அரசின் கல்விக்கடன் திட்டத்துக்கு முக்கியப் பங்குள்ளது. பொறியியல், மருத்துவம் உட்பட உயர்கல்விப் படிப்புகள் வணிகமயமாக்கலை நோக்கிச் சென்றதன் விளைவு 68 சதவீதப் பெற்றோர் தங்கள் வருவாயைவிட 2 முதல் 3 மடங்கு பணத்தைக் குழந்தைகளின் கல்விக்குச் செலவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அத்தகைய சூழலில் மாணவர்கள் பிளஸ் 2 முடித்தவுடன் கையைப் பிசையும் நடுத்தர வர்க்கப் பெற்றோருக்கு வங்கிக் கல்விக்கடன் வரப்பிரசாதமாக மாறியிருக்கிறது. இந்நிலையில், கல்விக்கடன் குறித்த விதிமுறைகளை அறிந்துகொண்டு கடனுக்கு முயல்வது அவசியமாகிறது.

அங்கீகாரம் பெற்ற கல்லூரி கட்டாயம்

கல்விக்கடன் பெறுவதற்கான விதிமுறைகளில் இந்த ஆண்டு சில மாற்றங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. அதன் விவரங்கள் குறித்து ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி ஸ்ரீநிவாசனிடம் கேட்டோம். “இதுவரை எந்தக் கல்லூரியில் படித்தாலும், கல்விக்கடனுக்கு வட்டி மானியம் வழங்கப்பட்டது.

ஆனால், இந்த ஆண்டு முதல் தேசிய அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் படித்தால் மட்டுமே வட்டி மானியம் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பொறியியல் படிப்புகள் எனில் அந்தக் கல்லூரிகள் நாக், என்.பி.ஏ. அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.

இதேபோல், இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் படிக்கும் மருத்துவ மாணவர்கள், பார்கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஆகியோர் கடனுக்கான வட்டி மானியம் பெறமுடியும்.

எனவே, கல்லூரியைத் தேர்வு செய்யும்போது தேசிய அங்கீகாரம் உள்ளதா என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். இதற்குமுன் ரூ.10 லட்சம்வரை கல்விக்கடனுக்கு வட்டி மானியம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு முதல் ரூ.7.5 லட்சக் கடனுக்கு மட்டுமே வட்டி மானியம் அளிக்கப்படும்.

மாணவர்கள் ரூ.7.5 லட்சத்துக்கு மேல் கடன் பெற்றால் சொத்து பிணை வைப்பதுடன் வட்டியும் செலுத்த வேண்டியிருக்கும்.  அதிகபட்சம் 16 சதவீதம்வரை வட்டி வசூலிக்க வங்கிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ரூ.7.5 லட்சம்வரை பெற பெற்றோரின் கையொப்பம் மட்டும் போதுமானது.

மாறாகப் பிணை ஆவணம் அல்லது மூன்றாம் நபர் பிணை கையெழுத்து சமர்ப்பித்தால் வட்டி மானியம் கிடைக்காது. இதில் மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வட்டி மானியம் மாணவர்களுக்குப் படிப்பு முடிந்து ஓராண்டுவரை வழங்கப்படும். அதன்பின் நிர்ணயிக்கப்பட்ட வட்டியை மாணவர்கள் கணக்கில் வங்கிகள் வரவு வைக்கத் தொடங்கும்” என்றார் ஸ்ரீநிவாசன்.

இணைய வழியே சிறந்தது!

இதுதவிர ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் வேண்டுமானாலும் கல்விக்கடன் பெறமுடியும். பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ. 4, 5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். கல்விக்கடன் பெற விரும்புபவர்கள் மத்திய அரசின் www. vidyalakshmi.co.in என்ற இணையதளம் மூலம் தங்கள் பகுதியில் ஏதேனும் 3 வங்கிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் ஏற்கப்பட்ட விவரத்தை இணையதளம் மூலமாகவே மாணவர்கள் அறியலாம். மேலும், வங்கிகளில் நேரடியாகச் செல்வதைவிட இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதே சிறந்தது. ஒரு மாதத்துக்குள் சம்பந்தப்பட்ட வங்கி விண்ணப்பத்தை ஏற்றதா நிராகரித்ததா என்பதைத் தெரிவிக்க வேண்டும்.

சரியான காரணமின்றி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டாலோ தாமதித்தாலோ குறிப்பிட்ட வங்கியின் மண்டல (zonal) மேலாளரிடம் புகார் தெரிவிக்கலாம். அங்கும் சரியான பதில் வராதபட்சத்தில்

pgportal.gov.in என்ற இணைய தளத்தில் பிரதமருக்குப் புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனினும், சில நேரத்தில் தாமதம் ஏற்பட்டால் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தீர்வு பெறலாம்.

 

தேவையான ஆவணங்கள்

# கல்லூரி சேர்க்கைச் சான்றிதழ் (bonafide certificate)

# ஆதார், பான் கார்டு

# இருப்பிடச் சான்றிதழ்

# 10, 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்

# சாதி, வருமானச் சான்றிதழ்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x