Published : 01 Jul 2019 11:04 AM
Last Updated : 01 Jul 2019 11:04 AM

7 பேர் சவுகர்யமாக பயணிக்கும் அட்டகாசமான ரெனால்ட் டிரைபர்!

ரெனால்ட் நிறுவனத்திலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த ஒரு புதிய அறிமுகமும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது  அட்டகாசமான, பரவலான வாடிக்கையாளர்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ள ‘ட்ரைபர்’ என்ற மாடலுடன் சந்தையில் களம் இறங்கியுள்ளது.

இந்த டிரைபரின் டிசைன் எஸ்யுவியா எம்பிவியா என்று குழம்பும் அளவுக்கு இரண்டு வகைகளின் அம்சங்களையும் தன்னுள்ளே வைத்துள்ளது. கார் பிரியர்களை வெகுவாகக் கவர்ந்த ரெனோ க்விட், டட்சன் ரெடி கோ ஆகிய மாடல்கள் தயாரிக்கப்படும் CMF-A பிளாட்ஃபார்மை 7 இருக்கைக்கு ஏற்றவாறு மேம்படுத்தி ‘டிரைபர்’ மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனாலே ரெனால்ட் க்விட்டின் பல்வேறு அம்சங்களை ஆங்காங்கே ட்ரைபரிலும் காண முடிகிறது. சொல்லப்போனால் டஸ்டருக்கும் க்விட்டுக்கும் இடையில் ட்ரைபர் இருக்கிறது. சந்தையில் 4 மீட்டர் அளவுக்குள் 3 வரிசை இருக்கைகள் கொண்ட ஒரே மாடலாக டட்சன் கோ ப்ளஸ் மட்டுமே உள்ளது. டிரைபர் அதற்கு நேரடி போட்டியாகக் களம் இறங்குகிறது.

4 மீட்டர் அளவு என்றாலும், மூன்று வரிசை இருக்கைகள் நெருக்கமாக இல்லாமல் ஓரளவு தாராளமான இடவசதி இருக்கும் வகையில் ‘‘Function over form'' என்ற தத்துவத்தில் காரின் வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது தோற்றத்தைக் காட்டிலும் பயன்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதாகக் கூறுகிறது.

இதில் மூன்றாவது வரிசை இருக்கையை தேவையில்லாத பட்சத்தில் தனியே கழற்றிவிட முடியும் என்பது கூடுதலாக உள்ள அம்சம் ஆகும். இதை யார் வேண்டுமானாலும் மாட்டும் வகையில் எளிமையாகவும் உள்ளது. மேலும், டிரைபரின் ஹெட்லைட், கிரில், பானெட், சதுர வடிவலான பின்பகுதி ஆகியவற்றின் உருவாக்கம் ரெனோ க்விட்டிலிருந்து டிரைபரை வேறுபடுத்தி காட்டுகின்றன.

ரெனால்ட் டிரைபரின் அளவைப் பொறுத்த வரை நீளம் 3990மிமீ. அகலம் 1739மிமீ. உயரம் 1643 மிமீ என்ற அளவில் உள்ளது. வீல் பேஸ் 2636மிமீட்டராக உள்ளது. இந்த அளவுக்குள் கார் அதிக இடப் பயன்பாட்டினை வழங்குகிறது. முன்னிருக்கையில் 1356மிமீ ஷோல்டர் ரூம், இரண்டாம் வரிசை இருக்கைகளில் 1330 மிமீ ஷோல்டர் ரூம், மூன்றாம் வரிசையில் 1216 மிமீ ஷோல்டர் ரூம் என்ற நிலையில் இடவசதி உள்ளது. 182 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கிடைக்கிறது.  இதில் 14 அங்குல வீல்கள் ஸ்டேண்டர்டாகக் கிடைக்கின்றன. டாப் வேரியன்ட்டில் 15 அங்குல அலாய் வீல்களில் 185/65 செக்‌ஷன் புரொஃபைல் டயர்கள் வருகின்றன.

வசதிகள்

டிரைபர் ஐஸ் கூல் ஒயிட், மூன்லைட் சில்வர், எலெக்ட்ரிக் ப்ளூ, ஃபியரி ரெட் மற்றும் புதிய ஆரஞ்ச் ஸ்கீம் என ஐந்துவிதமான நிறங்களில் கிடைக்கின்றது. இன்டீரியரைப் பொறுத்தவரை டூயல் டோன் கலர் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. டிரைபரில் எல்லா இருக்கை வரிசைகளிலும் ஏசி வென்ட் மற்றும் 12வோல்ட் பவர் சாக்கெட்டும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் 3.5 அங்குல எல்சிடி இன்ஸ்ட்ரூ மென்ட் கிளஸ்டர், ரெனோவின் பிற மாடல்களில் உள்ளதைவிட சற்று பெரிய அளவில் 8.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்டிராய்டு ஆட்டோ, ஆகியவற்றுடன் டிரைவர் கோச்சிங், டிரைவர் எக்கானமி ரேட்டிங் வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

க்விட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் பிஆர்10 பெட்ரோல் இன்ஜின்தான் இதிலும் உள்ளது. ஆனால், 78 ஹெச்பி பவர் மற்றும் 96 என் எம் டார்க் வெளிப்படுத்தும் வகையில் இன்ஜின் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. கியர்பாக்ஸை பொறுத்தவரை டிரைபரில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ்கள் கிடைக்கின்றன.

பாதுகாப்புக்கு முன்பக்கம் 2 காற்றுப்பைகள், ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார், ஸ்பீடு வார்னிங் சிஸ்டம் போன்றவை உள்ளன. டாப் வேரியன்ட்களில் ரிவர்ஸ் கேமராவும் கூடுதலாக 2 காற்றுப்பைகளும் தரப்படுகின்றன.

ரெனால்ட் டிரைபரின் விலை ரூ.4.4 லட்சம் முதல் ஆரம்பமாகிறது. டாப் வேரியன்ட் ரூ.5.8 லட்சமாகவும், மூன்றாவது வரிசை இருக்கைகள் வேண்டுமானால் தனியே விலை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என்றும் கூறப் பட்டுள்ளது. ஏழு இருக்கை கொண்ட எம்பிவி செக்மண்ட்டில் மிகக் குறைந்த விலையாக இது கருதப்படுகிறது.எனவே பட்ஜெட் எம்பிவி செக்மண்ட்டில் டிரைபர் சந்தையில் கணிசமான இடத்தைக் கைப்பற்றும் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x