Last Updated : 13 Jul, 2019 12:11 PM

 

Published : 13 Jul 2019 12:11 PM
Last Updated : 13 Jul 2019 12:11 PM

நீரிழிவு நோயும் உணவுக் கட்டுப்பாடும்

நீரிழிவு நோய் வந்துவிட்டதே என்று அஞ்சுகிறார்களோ இல்லையோ அதற்காகச் சொல்லப்படும் உணவுக் கட்டுப்பாடுகளை நினைத்துப் பலரும் அலறுவார்கள். உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க முடியாமல் திணறுபவர்களும் உண்டு.

உணவுக் கட்டுப்பாடு என்ற பெயரில் எதையும் சரிவரச் சாப்பிடாமல் இருப்பவர்களும் உண்டு. நீரிழிவு நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டிய உணவுக் கட்டுப்பாடுகள் என்னென்ன?

நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்தவரை எப்போதும்  அனைத்து சத்துகளும் நிறைந்த உணவையே உண்ண வேண்டும். அதிக அளவிலான பழங்கள், காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கார்போ ஹைட்ரேட் நிறைந்த உணவு வகைகளான அரிசி, பிரெட், பாஸ்தா, கிழங்கு வகைகள் போன்றவற்றைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அதிக அளவில் சர்க்கரை நிறைந்த பானங்களைத்  தவிர்த்துவிட வேண்டும். இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா பகிர்ந்துகொண்ட சில ஆலோசனைகள்.

சப்பாத்தி போதுமா?

நீரிழிவு நோயாளிகள் சாப்பிடும் உணவில் எப்போதும் சப்பாத்திக்கு முன்னுரிமை இருக்கும். அரிசிக்கு மாற்றாகச் சப்பாத்தியைத்தான் பலரும் பயன்படுத்த நினைப்பார்கள். சப்பாத்தி சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதா?  “சப்பாத்தி சாப்பிடுவது தவறு அல்ல.

சப்பாத்திக்கு ஈடாகச் சிறிது அளவு அரிசிச் சோறும் எடுத்துக்கொள்ளலாம். சப்பாத்தியோ அரிசிச் சோறோ எதை எடுத்துக்கொண்டாலும் அத்துடன் அதிக அளவில் காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சப்பாத்திக்குப் பதிலாகச் சிவப்பு அரிசி, பார்லி, கடலை மாவு ஆகியவற்றால் செய்த உணவையும் எடுத்துக்கொள்ளலாம்.

அரிசியைக் குறையுங்கள்

நீரிழிவு நோய்க்கு கார்போ ஹைட்ரேட் உணவு எதிரி என்பதால், அரிசி உணவைக் குறைத்துக்கொள்ளப் பலரும் நினைப்பார்கள். அரிசி உணவைக் குறைத்தால் போதுமா என்று ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் திவ்யா புருஷோத்தமனிடம் கேட்டோம். “அரிசி உணவை முழுவதுமாகத் தவிர்க்க வேண்டிய கட்டாயமில்லை.

அதேநேரம் அதிக அளவில் உண்ணாமல் அளவைக் குறைத்துச் சாப்பிட வேண்டும். பொதுவாக, வெள்ளை அரிசிக்கு மாற்றாக பாசுமதி அரிசி, சிவப்பு அரிசி, கைகுத்தல் அரிசி போன்றவற்றைப் பயன்படுத்தலாம். தினமும் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்வது நல்லது. பழங்கள், காய்கறிகள், ராகி, பார்லி போன்றவை தினசரி உணவில் கட்டாயம் இருப்பது நல்லது. மீன், ஆலிவ் எண்ணெய், பாதாம் பருப்பு, வாதுமை கொட்டை (வால் நட்) ஆகியவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

பலம் தரும் பழம்

பழங்களை உண்பதில் நீரிழிவு நோயாளிகள் தடுமாறிவிடுவார்கள். நீரிழிவு நோயாளிகள் சிலர் பழங்களே எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிடுவார்கள். இன்னும் சிலரோ சீசனுக்கு சீசன் கிடைக்கிற எல்லாப் பழங்களையும் வெளுத்துக் கட்டிவிடுவார்கள். நீரிழிவு நோயாளிகள் என்னென்ன பழங்களைச் சாப்பிட வேண்டும்? “நீரிழிவு நோயாளிகளும் பழங்களை உண்ணலாம்.

பழச்சாற்றுக்குப் பதிலாகப் பழமாக உண்ண வேண்டும். குறிப்பாக ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, பேரிக்காய், நாவல் பழம், ஆகிய பழங்களை நீரிழிவு நோயாளிகள் அதிகம் உண்ணலாம். இந்தப் பழங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்தப் பழங்கள் அதிக நேரம் உடலுக்குச் சக்தியைக் கொடுக்கும்.

உதவும் அசைவம்

நீரிழிவு நோயாளிகள் அசைவ உணவில் ஆட்டிறைச்சியைச் சாப்பிடச் சற்று அச்சப்படுவார்கள். கொழுப்பு கூடிவிடுமோ என்று நினைப்பார்கள். அசைவ உணவு சாப்பிடுவதில் நீரிழிவு நோயாளிகளுக்குக் கட்டுப்பாடு தேவையா? “நீரிழிவு நோயாளிகள் அசைவ உணவைத் தாராளமாகச் சாப்பிடலாம். கோழி, கடல் உணவான மீன், இறால், நண்டு ஆகிய அசைவ உணவில் உள்ள சத்துகள் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்க உதவுகின்றன.

எனவே, அசைவ உணவை ஒதுக்கத் தேவையில்லை” என்று கூறும் திவ்யா “நீரிழிவு நோயாளிகள் அனைத்துச் சத்துகளும் நிறைந்த உணவு, அதற்கேற்ற உடற்பயிற்சி, மருந்துகளை எடுத்துக்கொண்டால் நோயின் தன்மையையும் வீரியத்தையும் கட்டாயம் குறைக்க முடியும்.

விருந்தும் மருந்தும்

எல்லா நாட்களிலும் உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கும் நீரிழிவு நோயாளிகள், திருமண விருந்து போன்ற நிகழ்வுகளில் அதைத் தளர்த்திவிடுவார்கள். விருந்து சாப்பிடும்போது நீரிழிவு நோயாளிகள் கவனிக்க வேண்டிய விஷயமென்ன? “நீரிழிவு நோயாளிகள் என்றாவது ஒரு நாள், ஒரு வேளை விருந்து உணவு உண்பது தவறில்லை.

ஆனால், அந்த உணவு சத்தானதாக இருக்க வேண்டும். அதில் பரிமாறப்படும் இனிப்பு, ஐஸ்கிரீம், வாழைப்பழம் போன்றவற்றைத் தவிர்த்துவிட்டுக் காய்கறிகளை அதிகம் சேர்த்துச் சாப்பிடலாம். விருந்தின் அளவு தினசரியைவிடக் கூடுதலாக ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கிழங்கை ஓரங்கட்டு

நீரிழிவு நோயாளிகள் கிழங்கு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால், கிழங்கு வகைகளை அறவே தவிர்க்கத் தேவையில்லை என்கிறார் திவ்யா. சர்க்கரை வள்ளிக் கிழங்கை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். உருளைக் கிழங்கு, சேனைக் கிழங்கு போன்றவற்றைச் சிறிதளவில் வாரம் ஒரு முறை அல்லது ஒரு வேளை சேர்த்துக்கொள்ளலாம். பொதுவாகக் கிழங்கு வகைகளை அடிக்கடி உணவில் சேர்க்காமல் இருப்பதே நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x