Published : 01 Jul 2019 11:54 AM
Last Updated : 01 Jul 2019 11:54 AM

அலசல்: விவசாயிகளை சென்றடையாத கடன் திட்டங்கள்

இந்தியாவில் 14 கோடி விவசாயிகள் இருப்பதாக கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இந்தியாவில் ஏறக்குறைய 50 சதவீதம் பேருக்கு வேலை வாய்ப்பை அளிப்பதும் இத்துறைதான். ஆனால், மற்ற தொழில்களில் காணப்பட்ட அபரிமித வளர்ச்சி இத்தொழிலில் எட்டப்படாதது மிகப் பெரிய துரதிருஷ்டம். ஜீவாதாரமான உணவை உற்பத்தி செய்யும் விவசாயி கடன் சுமையாலும், வறுமை காரணமாகவும் உயிரிழக்கும் அவலமும் இங்குதான் அரங்கேறுகின்றன.

கடந்த 3 ஆண்டுகளில் மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் 12,021 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களில் பாதி பேரது குடும்பத்துக்கு மட்டும்தான் அரசு வழங்கிய ரூ.1 லட்சம் நிவாரண தொகை கிடைத்துள்ளது. இதை அம்மாநில வேளாண் அமைச்சரே தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் மாநிலங்களவையில் வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசுகையில் விவசாயிகளுக்கு இதுவரை ரூ.12,305 கோடி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று பதிவு செய்துள்ளார். ஆண்டுக்கு ரூ.6,000 என்ற பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டம் கடந்த பிப்ரவரியில் தொடங்கப்பட்டு இதுவரையில் 2 தவணைகளில் உதவித் தொகை அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். விவசாயிகள் அனைவருக்கும் இந்தத் தொகை கட்டாயம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவை அனைத்தும் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி விடுமா?

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையில் 59 சதவீத விவசாயிகளுக்கு அரசு வழங்கும் கடன் திட்டங்கள் பற்றியே தெரியவில்லை என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. உலக வெப்பமயமாதலால் ஐந்து விவசாயிக்கு ஒரு விவசாயி நிச்சயம் பாதிக்கப்படுவார் என்ற அதிர்ச்சியான தகவலையும் கூடுதலாக அளித்துள்ளது இந்த ஆய்வறிக்கை.

அத்துடன் மட்டுமின்றி விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் அடுத்த தலைமுறையினர் 48 சதவீதம் பேர் விவசாயத்தை தொடர விரும்பவில்லை என்ற தொடர் அதிர்ச்சி தகவலையும் ஆய்வறிக்கையில் பதிவு செய்துள்ளது கோன் கனெக்ஷன் என்ற ஆய்வு நிறுவனம்.

தாங்கள் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று ஏறக்குறைய 43 சதவீத விவசாயிகள் தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர். இது ஏதோ ஒரு மாநில விவசாயிகளின் குமுறல் அல்ல. ஏறக்குறைய 19 மாநிலங்களில் விவசாயிகள் நிலைமை இதேதானாம். குறிப்பாக உத்தரப் பிரதேசம், பிஹார், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், மேற்கு வங்காளம், தெலங்கானா ஆகிய மாநில விவசாயிகளின் நிலைமை படுமோசம் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

விவசாயக் கடன் மற்றும் அதன் பலன் குறித்து கிராமப்பகுதி விவசாயிகள் பலருக்கும் தெரியாமலிருப்பது மிகவும் மோசமான விஷயமாகும்.  25 சதவீத விவசாயிகள் ரூ.50 ஆயிரம் வரை கடன் பெற்றுள்ளனர். 15 சதவீத விவசாயிகள் ரூ.5 லட்சம் வரை கடன் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். விவசாய தற்கொலைகள் நிகழ்ந்த பகுதிகளில் பதிவான முக்கியமான விஷயம், விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது கடன் சுமை காரணமாகத்தான்.

அதாவது இவர்கள் வங்கிகளில் கடன் பெற்று அதை திரும்ப செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்ளவில்லை. தனியாரிடம் அதிக வட்டிக்கு கடன்பெற்று அதை திருப்பி தர முடியாத சூழலில், கடன் கொடுத்தவர்களின் கிடுக்கிப்பிடி கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

விவசாயக் கடனுக்கு வட்டிச் சலுகை, பல்வேறு விதமான கடன் வசதிகள் என அரசு அறிவித்தாலும், அது பெருமளவிலான விவசாயிகளை சென்றடையவில்லை என்றால் என்ன பயன்?

உற்பத்தித் துறைக்கும், சேவைத் துறைக்கும் காட்டும் அக்கறையில் துளியேனும் நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயத் துறைக்கும் காட்டலாமே. இல்லாவிட்டால் கச்சா எண்ணெய்க்கு வெளிநாடுகளிடம் கையேந்துவதைப் போல உணவுப் பொருள்களுக்கும் கையேந்த வேண்டியதுதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x