Last Updated : 13 Jul, 2019 11:14 AM

 

Published : 13 Jul 2019 11:14 AM
Last Updated : 13 Jul 2019 11:14 AM

குளிர்க் கூரைகளுக்கு மாறவேண்டிய அவசியம்

எப்போதும் அதிகரித்துவரும் விஷயங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது வெப்பநிலை. உலக வெப்பமயமாதல், நகர்ப்புறங்களில் சமச்சீரற்ற வளர்ச்சி ஆகியவை உலக வெப்பநிலை அதிகரித்துவருவதற்கான முக்கியக் காரணங்களாக இருக்கின்றன.

மக்கள், காற்றைக் குளிர்விக்கும் மின்சாதனங்கள் வழியாக இந்த அதீத வெப்பநிலை பிரச்சினையைச் சமாளித்துவிடலாம் என்று நினைக் கிறார்கள். ஆனால், நகர்ப்புறத் திட்ட மேலாளர்கள், ‘குளிர் கூரைகள்’ என்ற தீர்வின் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்று தெரிவிக்கிறார்கள்.

குளிர் கூரைகள்

குளிர் கூரைகள் என்பவை வெளிச்சத்தை உட்கிரகித்துக் கொள்வதற்குப் பதிலாக  வெளிச்சத்தைப் பிரதிபலிக்கும்படி வடிவமைக்கப்படுகின்றன. ஆனால், தற்போது கட்டப்படும் கான்கிரீட் வீடுகள், இந்த நுட்பத்துடன் வடிவமைக்கப்படுவதில்லை. நாம் தேர்ந்தெடுக்கும் பொருட்களைப் பொருத்து, வீட்டின் வெப்பநிலையை 2-5 டிகிரி சென்டிகிரேட் வரை குளிர் கூரைகளால் குறைக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

தார்ப்பாய்த் தாள், சுண்ணாம்பு வண்ணப்பூச்சு, டைல் அல்லது மொசைக் போடப்பட்ட மாடித்தளம்  ஆகியவற்றால் இந்தக் குளிர் கூரையை வடிவமைக்க முடியம்.

மின்சாரத்தைக் குறைக்க முடியும்

வெப்பநிலை அதிகரிப்பால் நகர்ப்புறங்களில் ‘ஏசி’ பயன்பாடு கற்பனைக்கு எட்ட முடியாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. ‘ஏசி’ பயன்பாட்டுக்காகச் செலவிடப்படும் மின்சாரத்தின் அளவும் நகர்ப்புறங்களில் கடுமையாகச் சமீப ஆண்டுகளில் உயர்ந்திருக்கிறது.

அதீத மின்சார ஆற்றல் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த எந்த முயற்சிகளையும் தற்போது எடுக்காமல் விட்டால், அது நாளடைவில் மிகப்பெரிய மின்சாரத் தட்டுப்பாட்டை நகர்ப்புறங்களில் உருவாக்குவதைத் தடுக்க முடியாது என்கின்றனர் நிபுணர்கள்.

ஆனால், இந்தக் குளிர் கூரைகள் பற்றிய போதுமான விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தினால், அது நீண்டகால அடிப்படையில் சூழல் பிரச்சினைகளைத் தீர்க்க உதவும். ‘ஏசி’யைப் போன்று பெரிய முதலீடு எதுவுமில்லாமல் குளிர்கூரையை அமைக்க முடியும்.

முன்மாதிரியாகத் திகழும் தெலுங்கானா

தெலுங்கானா மாநிலத்தில், இந்தக் குளிர்கூரைகள் திட்டத்தை அம்மாநில அரசே முன்னெடுத்திருக்கிறது. பொதுமக்களிடம் குளிர்கூரைகள் அமைப்பதைப் பற்றி போதிய விழிப்புணர்வை அம்மாநில அரசு ஏற்படுத்திவருகிறது.

கூரைப் பூச்சுள், பாலிவினைல் குளோரைட் பாய்கள், தேங்காய் உமியில் உருவாக்கப்பட்ட குளிர் கூரைகள், குஜராத், டெல்லியில் குளிர் கூரைகளாகப் பயன்படுத்தப்படும் காகிதக் கழிவுகள் போன்றவற்றைப் பயன்படுத்தும்படி அம்மாநில அரசு மக்களை ஊக்குவித்துவருகிறது.

அத்துடன், மாடித் தோட்டம் அமைப்பதும் வீட்டில் குளிர்கூரை அமைப்பதற்கான சிறந்த வழி. ஆனால், இந்தப் பசுமைக் கூரையைப் பயன்படுத்துவதற்குத் தண்ணீர் தேவை அவசியம் என்பதால், இதை அனைவராலும் பின்பற்ற முடியாது.

தமிழ்நாட்டிலும் குளிர்கூரைகள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப் படவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். மாநில அரசு, சுற்றுச்சூழல், சமூக ஆர்வல அமைப்புகளும் இந்தக் குளிர்கூரை முயற்சிகளை முன்னெடுக்கும்போது, அது சிறந்த தாக்கத்தை நகர்ப்புற மேலாண்மையில் ஏற்படுத்தும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x