Published : 06 Jul 2019 11:04 AM
Last Updated : 06 Jul 2019 11:04 AM

மாற்றுப் பாலினத்தவர் வாழ்வில் புத்தொளி

மூளைதான் மனம். மூளையின் கட்டளையை உடலின் உறுப்புகள் நிறைவேற்ற வேண்டும். இதுதான் ஆரோக்கியத்துக்கு அடிப்படை. பிறக்கும்போது பெண் உடலோடு பிறந்த ஒருவர் ஆண் மனதோடு இருந்தாலோ ஆண் உடலோடு பிறந்த ஒருவர் தன்னை முழுக்க முழுக்கப் பெண்ணாக உணர்ந்தாலோ அவருடைய உடலே அவருக்கு எதிரியாகத்தானே இருக்கும்? ஒருவர் தன்னுடைய உணர்வுக்கும் மனத்துக்கும் பொருத்தமான உடலைப் பெறுவதற்கு மருத்துவ அறிவியல் வழங்கியிருக்கும் கொடைதான் பால் மாற்று அறுவை சிகிச்சை.

2009-ம் ஆண்டு மே மாதம் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் முதன்முறையாகப் பால் மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. தற்போது ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த மையம், மேலும் ரூ.1.34 கோடி மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்களுடன் மேம்படுத்தப்பட உள்ளது.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மனநலம், உடல் நலம், அறுவைசிகிச்சை ஆகிய துறைகளைச் சேர்ந்த 4 மருத்துவ வல்லுநர்கள் மூலம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மனநல ஆலோசனை, உடல் பரிசோதனை, பால் மாற்று அறுவைசிகிச்சை ஆகிய நடைமுறைகள் முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுகின்றன. மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் ஏற்கெனவே இந்த மையத்தில் பணியாற்றுகிறார்கள்.

ஒரே குடையின்கீழ் பால்மாற்று சிகிச்சை

2016-ம் ஆண்டிலிருந்தே இந்த மருத்துவமனையில் 17 பால் மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ள நிலையில், தற்போது மாற்றுப் பாலினத்தவர்களுக்கான சிறப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

மன நலம், உடல்நலம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை முறைகளை ஒரே குடையின்கீழ் பெறுவதற்காகத் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக சென்னை ராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு மையம் புதிய தொடக்கமாகியிருப்பது குறித்தும் மையத்தின் சிறப்புகளைக் குறித்தும் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஜெயந்தி நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“மாற்றுப் பாலினத்தவருக்காக உருவாக்கப்பட்டிருக்கும் வார்டு எண் 108 டாக்டர் ஜெகன்மோகன், டாக்டர் ஸ்ரீதேவி ஆகியோரின் தலைமையின்கீழ் செயல்படுகிறது. பல விதமான சிகிச்சைகளை இந்த மையத்தின் மூலமாக மாற்றுப் பாலினத்தவர் பெறமுடியும்.

பால் மாற்று அறுவைசிகிச்சைக்கு வருபவரின் மனநலம், நாளமில்லாச் சுரப்பிகளின் நலம், பால்வினை நோய் மருந்தியல் துறை, ஒட்டுறுப்பு அறுவைசிகிச்சை நிபுணரின் ஆலோசனை இப்படிப் பல சிகிச்சை வசதிகளை மாற்றுப் பாலினத்தவர் பெறுவதற்கான வசதிகள் இந்த ஒரே மையத்தில் உள்ளன.

சிகிச்சை பெறுபவர்களுக்கு மருத்துவ சட்டத்துக்கு உட்பட்ட ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. இங்கு அளிக்கப்படும் தரமான சிகிச்சையைத் தனியார் மருத்துவமனையில் செய்துகொண்டால், ரூ. நான்கு லட்சம் வரை செலவாகும். இங்கே தரமான சிகிச்சை முற்றிலும் இலவசமாகக் கொடுக்கப்படுகிறது. மாற்றுப் பாலினத்தவர்களில் திருநங்கைகள் மட்டும் அல்ல திருநம்பிகளும் பால்  மாற்று அறுவை சிகிச்சையைச் செய்துகொள்ளும் வசதி உள்ளது இந்த மையத்தின் சிறப்பு” என்கிறார்.

மனத்தின் சொல்படிதான் மாறுகிறார்களா?

பால் மாற்று சிகிச்சைக்கு வரும் நபர் மனநல ஆலோசனை, உடல் ஆய்வு உள்ளிட்ட பல கட்ட பரிசோதனைகள், ஆலோசனைகளுக்குப் பிறகுதான் அறுவை சிகிச்சைக்குத் தகுதி உடையவர் ஆவார். “பால் மாற்று அறுவை சிகிச்சைக்கு வரும் நபர்களுக்கு முதல் தேவை மனநல ஆலோசனை.

அவர்கள் உண்மையிலேயே தங்களுடைய மன உந்துதலால்தான் இதற்கு முன்வந்துள்ளார்களா என்பதை அறிந்துகொண்டு, மாற்றுடை அணிதல், மாறப்போகும் பாலின நடவடிக்கைகளைப் பயின்று பயிற்சி செய்தல், அதனால் ஏற்படும் மன அழுத்தம், கேலி கிண்டல்களை எதிர்கொள்ளத் தேவைப்படும் ஆலோசனை போன்றவற்றை வழங்கி சிகிச்சைக்குத் தயாராவதற்கும் அந்த வாழ்க்கையை எதிர்கொள்வதற்குமான மனநல ஆலோசனையை நாங்கள் வழங்குகிறோம்” என்று சிறப்பு மையத்தின் மனநல மருத்துவர் ரங்கநாதன் கூறுகிறார்.

மனதளவிலும் உடலளவிலும் தயாரான பிறகு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். தாடி மீசையை அகற்றுதல். மார்பகங்களை உருவாக்கிக் கொள்ளுதல், முக அழகு சிகிச்சை, செயற்கைக் கூந்தல் சிகிச்சை எனப் பல்வேறு சிகிச்சைகளும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு செய்யப்படும்.

“இது ஒரு மனநோய் அல்ல; பல உயிரியல் அடிப்படையிலான காரணங்களால் மாறுபட்ட பால் அடையாளம் ஒருவரின் பிறப்பில் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு கட்டத்துக்குப் பிறகு மாற்றுப் பாலினத்தவராக உணரத் தொடங்கும் நபர் உடலளவிலும் தன்னை மாற்றிக்கொள்ள விரும்புகிறார். அதற்கு வழி செய்வதுதான் இந்தப் பால் மாற்று அறுவைசிகிச்சை.

ஏற்கெனவே 17 பால் மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ள நிலையில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது மாற்றுப் பாலினத்தவர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என்று நம்புகிறோம்” என்றார் பிளாஸ்டிக் சர்ஜரி துறையின் தலைவர் மருத்துவர் ஜெகன்மோகன்.

நம்பிக்கை மையம்

எனக்கு வயது 22. தற்போது நான் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியிலிருக்கிறேன். 14 வயதிலேயே என்னைப் பெண்ணாக உணர்ந்தேன். வீட்டில் அம்மாவும் அக்காவும் என்னைச் சரியாகப் புரிந்துகொண்டு வளர்த்தனர்.

என்னைப் பற்றி என்அலுவலகத்திலும் முழுமையாகத் தெரியும். உடன் பணியாற்றும் நபர்களும் என்னை மிக நன்றாகக் கவனித்துக்கொள்கின்றனர். முன்பைவிட இப்போது அதிகம் பாதுகாப்பாக உணர்கிறேன். எங்களைப் போன்றோருக்கு இந்தச் சிறப்பு மையம் மிகப் பெரிய உறுதுணை.

 

தாய்மை உணர்வோடு சிகிச்சை2jpgright

என் பெயர் கமலி. நான் சென்னையில் உணவு விடுதி வைத்திருக்கிறேன். 2014லேயே ராஜிவ் காந்தி பொது மருத்துவமனையில் பால் மாற்று அறுவை சிகிச்சைக்குப் போனேன். ஏறக்குறைய ஓராண்டு பல்வேறு பரிசோதனைகளை நடத்தினார்கள். யாருடைய வற்புறுத்தலோ தூண்டுதலாலோ இந்த முடிவுக்கு நான் வந்தேனா என்றெல்லாம் சோதித்து அறிந்தனர். அறுவை சிகிச்சைக்குப் பின்னும் தாய் உள்ளத்தோடு மருத்துவர்களும் செவிலியர்களும் என்னைக் கவனித்துக்கொண்டனர். இப்போது மகிழ்ச்சியாக உடல்நலத்துடன் உள்ளேன்.

- வா.ரவிக்குமார், சு. அருண் பிரசாத்

படங்கள்: பு.க.பிரவீன், யுகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x